நாங்க என்ன எம்.பி.யா, எம்.எல்.ஏ.வா? மாநகராட்சி கூட்டத்தில் கொந்தளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்!

நாங்க என்ன எம்.பி.யா, எம்.எல்.ஏ.வா? மாநகராட்சி கூட்டத்தில் கொந்தளித்த தி.மு.க. கவுன்சிலர்கள்!

Share it if you like it

எங்களை மேயரும் மதிப்பதில்லை, அதிகாரிகளும் மதிப்பதில்லை. மக்கள் கேவலமாகப் பார்க்கிறார்கள் என்று மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களே ஆவேசமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நேற்று நடந்தது. மண்டலத் தலைவர் வாசுகி பேசுகையில், பாதாளச் சாக்கடை, பெரியாறு குடிநீர் குழாய் பணிகளால் சாலைகள் தேசமடைந்து, மழை காலத்தில் மக்கள் நடக்க முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மக்களை சந்திக்கவே ரொம்ப வேதனையாக இருக்கிறது. கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் தங்கள் கைக் காசுகளை போட்டு முடிந்தளவு சமாளிக்கிறோம். கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்ட 3 லட்சம் டெண்டர் பணிகள் தற்போது வரை விடப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

மற்றொரு மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரியோ, சுகாதாரத்துறை, கல்விக்குழு போன்ற பல துறைகளில் டெண்டர் விடும் விவரம் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கவனத்திற்குக்கூட வருவதில்லை. ஆனால், இவற்றை கவுன்சிலர்கள் நிதியில் சேர்த்து விடுகிறார்கள். அதிகாரிகள் டெண்டர் பரிந்துரைக்கும்போதே, மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வார்டுகள் மறுசீரமைக்கப்பட்ட பிறகு வரைப்படம் இல்லை. அதனால், வார்டுகளுடைய எல்லையை கண்டுபிடிக்க முடியாமல் கவுன்சிலர்களுக்கு இடையே அடிதடி பிரச்னை வரை செல்கிறது என்றார்.

தி.மு.க. கவுன்சிலர் பாபு பேசுகையில், மேயர் எங்கள் கிழக்கு சட்டமன்ற தொகுதியையும், எங்கள் கவுன்சிலர்களையும் புறக்கணிக்கிறார். மக்கள் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள். நாங்கள் என்ன எம்.எல்.ஏ., எம்.பி.யா? சொந்த காசை போட்டு வேலை பார்க்கிறோம். சிறப்பு நிதி எதுவும் ஒதுக்குவதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களை அதிகாரிகளும் மதிப்பதில்லை. மக்கள் என்னை சந்திக்க ஒரு வார்டு அலுவலகம் கூட கட்டித்தரவில்லை. 100 தடவை சொல்லியிருப்பேன். நடப்பது தி.மு.க. ஆட்சி. ஆனால், தி.மு.க. கவுன்சிலர்களுக்கு கூட வார்டு அலுவலகம் இல்லை” என்று அதிருப்தி தெரிவித்து விட்டு வெளிநடப்பு செய்தார்.

காங்கிரஸ் கவுன்சிலர் முருகன் பேசும்போது, கூட்டணிக் கட்சி என்றுதான் பெயர். ஆனால், என்னுடைய வார்டுக்குட்பட்ட தல்லாக்குளம் வார்டில் ஒரு பணியும் நடக்கவில்லை. பாதாளச் சாக்கடை அனைத்தும் நிரம்பிச் செல்கிறது. இதனால், குழந்தைகள், பெரியவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று குமுறினார். இப்படியாக கவுன்சிலர்களும், மண்டலத் தலைவர்களும் மேயர் மீதும், அதிகாரிகள் மீதும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்தனர்.


Share it if you like it