கவிதையால் தேசியம் தெய்வீகம் வளர்த்த பாரதீயுக்கு புகழஞ்சலி செலுத்தும் பாரதீயர்கள்

கவிதையால் தேசியம் தெய்வீகம் வளர்த்த பாரதீயுக்கு புகழஞ்சலி செலுத்தும் பாரதீயர்கள்

Share it if you like it

பாரதத்தின் வரலாற்றில் தேசிய உணர்வோடும் தெய்வீக மாண்போடும் கலை இலக்கிய பண்பாடு கலாச்சாரங்களின் மீது தீராத காதல் கொண்ட வரலாற்று நாயகர்கள் காலகாலமாக பிறந்து வளர்ந்து வருகிறார்கள். தங்களின் படைப்புக்கள் செயல்பாடுகள் மூலம் தேசத்திற்கும் பெருமையும் சமூகத்திற்கு நன்மையும் பெற்று தரும் உன்னதமான தேசிய கடமையை தவறாமல் செய்து வருவார்கள். அவர்களின் வரிசையில் தென் தமிழகத்தில் பிறந்து பாரதம் முழுமைக்குமான விடுதலை வேட்கையை கவிதையால் வளர்த்தெடுத்த அக்னி கவிஞன் மகாகவி சுப்பிரமணிய பாரதி.

நெல்லை சீமை பெற்றெடுத்த ஒரு கவிதை போராளி. அவன் 40 வயது கூட முழுமையாக வாழ்ந்தவனில்லை. ஆனால் உலகில் உள்ள 13 மொழிகளில் புலமைப்பற்ற புலவர்களின் புலவனவன். மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவன் .ஆனால். முப்பொழுதும் இந்த தேசத்தின் நலனையும் சமூகத்தின் சீர்திருத்தத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு கவிதைகளை இயற்றியவன். தேசபக்தி ஆன்மீகம் கற்பனைத் திறன் இயற்கை ரசனை என்று ஒரு கவிஞனுக்குரிய அத்தனை உயரிய பண்புகளையும் தன்னகத்தை கொண்டு தான் வடித்த கவிதைகளில் தேசியம் தெய்வீகமும் வீறு கொண்டு எழச்செய்யும் ஒரு உன்னதமான எழுத்துப் பணியை செய்து இருபதாம் நூற்றாண்டின் இலக்கணமாக வாழ்ந்த பிரபஞ்சக் கவிஞனவன்.

சுதேசி என்ற பத்திரிகையை சுயமாக நடத்தியவர். அதன் மூலம் எழுத்து என்னும் ஆயுதம் கொண்டு மக்களிடையே தேசபக்தியை விதைத்தவன். சுதந்திரப் போராட்டம் என்ற வடநாட்டில் பற்றி எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீயை தென்னகத்தில் ஆங்காங்கே கொண்டு சேர்த்த தேசபக்தன் அவன். செப்பும் மொழிகள் 18 உடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரத தேவியின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயரிய மாண்பை ஒற்றை வரியில் சொன்ன தேசிய கவிஞனவன். ஆலயம் செய்வோம் பள்ளி சாலைகள் செய்வோம் வானையளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம். என்று இன்றைய சந்திராயனின் வெற்றிக்கு அன்றே கட்டியம் சொல்லிப் போன தீர்க்கதரிசியவன்.

பாஞ்சாலி சபதம் என்று மகாபாரதத்தின் விழுமியத்தை சாமானிய மனிதனுக்கும் கொண்டு சேர்த்தவன். கண்ணன் பாட்டு குயில் பாட்டு என்ற பெயரில் மாயோனின் மகத்துவத்தை அவன் மீது பாரதி கொண்ட தீராத பக்தியை கவிதைகளாக வடித்துக் கொடுத்த ஆன்மீக பக்தனவன். காசி மாநகரில் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம் என்று இன்றைய நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுக்கெல்லாம் அன்றே கனவு கண்ட தீராத தாகம் கொண்ட விஞ்ஞான கவிஞனவன் . அவனது கனவு இந்நாளில் காசி தமிழ் சங்கமமாய் நிறைவேறும் போது அவனது ஆன்மா பூரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காசி மாநகரில் அந்த மகான் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டதில் அந்த மகானுக்கு உரிய கௌரவத்தை மத்திய அரசு வழங்கியதில் பாரதியின் தேசியத்தை இன்றளவும் மனதில் ஏந்தி நிற்கும் தேசாபிமானிகளுக்கு பெருத்த நிம்மதி.

காக்கை குருவி எங்கள் சாதி. நீர் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று இயற்கையின் பஞ்ச பூதங்கள் தொடங்கி காக்கை குருவி எறும்பு என்று உயிர்கள் அனைத்தையும் நேசிக்கும் உயிர்கள் யாவும் ஒன்று பிரபஞ்சம் யாவும் ஒரு குடும்பம் என்னும் சனாதன தர்மத்தின் வசு தைவ குடும்ப சிந்தனையை ஒற்றை வரியில் பாடி சென்ற உன்னதமான கவிஞன் அவன். இன்று உலகம் முழுவதையும் அரவணைத்துப் போகும் பாரதத்தின் உன்னதமான வளர்ச்சி அவனது ஆன்மாவை குளிர்விக்கும் என்பதை சந்தேகமில்லை.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாரதத்தின் பெண்களின் மாண்பையும் உண்மையான பெண்ணியமும் பெண்ணியத்தின் கண்ணியமும் காக்கும் சனாதனத்தின் பெண்ணியத்தை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும் என்ற அவனது தீராத தாகத்தை கவிதையில் வடித்த பெண்ணியவாதியவன். இன்றைய நாளில் பாரதத்தின் பெண்கள் இயற்கை விவசாயம் முதல் இஸ்ரோவின் தலைமை விஞ்ஞானி பொறுப்புகள் வரையில் தலைமை தாங்கி நிகழ்த்தி பாரதியின் கனவை மெய்ப்பித்து காட்டி விட்டார்கள் என்பதில் அவனது ஆன்மா குளிர்ந்திருக்கும். சாதாரண சீருடை அணிந்த பாதுகாப்பு பணிகள் முதல் தேசத்தையே பாதுகாக்கும் பாதுகாப்பு அமைச்சர் பதவி வரை பாரதி கண்ட புதுமைப் பெண்கள் பாரதத்தில் ஏற்காத துறைகளும் இல்லை சாதிக்காத சாதனைகளும் இல்லை என்பது அவனது பெருமைக்கு சாட்சியம்.

சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று வளரும் தலைமுறைக்கு சாதி என்பது ஒரு வழிபாட்டு அடையாளம் அன்றி அது பாகுபாடு பிரிவினை சொல்லும் பேதங்களின் அடையாளம் அல்ல என்பதை அந்நாளிலேயே சொல்லி வைத்தவன். ஆனால் அந்த உன்னத கவிஞனையே பார்ப்பனன் என்ற அடையாளத்தில் அடைத்து சாதிய வன்மம் கொண்டு இருட்டடிப்பு செய்த கொடூரம் அவன் பிறந்த தமிழகத்திலேயே அவனுக்கு நேர்ந்தது என்பது எப்படிப்பட்ட துரதிஷ்டம். ?

வாழும் நாளில் தனக்கென எதையும் நாடாது தன் குடும்பத்திற்கென எதையும் தேடாது தன் சந்ததிகளுக்கென பொருள் சேர்த்து வைக்காது பார்த்ததும் கேட்டதும் நினைத்ததும் எழுத்தில் வடித்ததும் என்று அத்தனையும் இந்த தேசத்தின் மாண்பை போற்றும் தேசியத்தின் நலனை நாடும் சமூகத்தின் மக்களின் நலனையும் வளர்ச்சியையும் வேண்டும் பொதுநல தாகமாக மட்டுமே கொண்ட பொதுவுடமை கவிஞன் அவன். ஆனால் அவனது அந்த பொதுவுடமை வாழ்வியலை இன்றைய தினம் பொதுவுடமை பெயரில் மலிவான அரசியல் பேசும் அறிவிலிகள் அவனது கவிதைகளை முன்வைத்தே சாதி பேதம் காட்டுவதும் அவனையும் சாதிய வட்டத்தில் அடைத்து வைத்து பழிப்பதும் இந்த மண்ணையும் மக்களையும் பிடித்த சாபக்கேடு.

வாழ்ந்த காலத்தில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்தவனில்லை. வீடு மனைவி மக்கள் என்று தன்னை சார்ந்தவர்களின் மகிழ்ச்சிக்காக அவன் எதையும் செய்தான் இல்லை .ஆனால் தன்னால் ஆன அத்தனையும் இந்த சமூகத்தின் சீர்திருத்தத்திற்கும் இந்த தேசத்தின் விடுதலைக்கும் முழுமையாக அர்ப்பணித்த தேசாபிமானியவன். ஆனால் அவன் வாழும் காலத்தில் அவனுக்கு உரிய கௌரவமும் அங்கீகாரமோ இந்த தேசம் வழங்கிட வில்லை சதா சர்வ காலமும் சமூக சீர்திருத்தையே வேண்டிய அவனுக்கு இந்த சமூகம் வழங்கியது புறக்கணிப்பு அவமதிப்பு மட்டுமே.

வாழ்நாள் முழுவதிலும் வறுமையின் கோரப் பிடியில் உழன்றவன் ஒரு பிடி அன்னமும் அமுதமாய் இட்டளிக்கும் அன்றாடம் காய்ச்சியாக வாழ்ந்தவன் . அந்த நிலையிலும் கூட காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று விவசாயிகள் தன்னிறைவு காணும் சித்தாந்தத்தை பாடல்களில் எழுதி விவசாயமும் விவசாயிகளின் நலனுமே சமூகத்தின் நலனை சமநிலையை பாதுகாக்கும் என்ற உயரிய சித்தாந்தத்தை எழுதிக் கொடுத்தவன்.

ஆட்சி அதிகாரம் அடக்குமுறை சட்டங்கள் தனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கும் உள்ளூர் அடிவருடிகள் என்று நயவஞ்சகமாக பாரதத்தை அடிமைப்படுத்தி தன்னை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தை ரத்த வெறியோடு அடக்கி வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பார்த்து அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வான் இடிந்து விழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி தேசத்தின் விடுதலையை வேண்டிய மாவீரனவன்

பிரபஞ்சத்தின் ஷ்ருஷ்டியான பெண்களை சமூகத்தின் பரிபூரணமாக மதித்தவன். அந்த உன்னதமான பெண்மை கண்ணியமாகவும் பண்பாடு கலாச்சாரம் காக்கும் கேடயமாகவும் இருந்தால் சமூகமும் நலம். பெறும் தேசமும் வலுப்பெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். அந்த நம்பிக்கையை

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை அவனியில் யாருக்கும் அஞ்சாத செருக்கும் கொண்ட புதுமைப் பெண்களாக அழகாயுதம் விடுத்து அறிவாயுதம் ஏந்தி தங்களையும் காத்து தேசத்தையும் காக்கும் மகாசக்திகளாக பாரத பெண்கள் பரிமளிக்க வேண்டும் என்ற உயர்ந்த பெண்ணியம் போற்றிய உலகம் போற்றும் உன்னத கவிஞன் அவன். உண்மையில் அவனது ஞானமும் உயர்ந்த எண்ணமும் அவனது ஒப்பற்ற சொல்லாடலும் அவனை பிரபஞ்ச கவிஞனாக வாழும் காலத்திலேயே அவனை உயர்த்தி இருக்க வேண்டும்.

ஆனால் அவனது மாண்பாறியா மக்கள் மத்தியில் அவன் பிறந்து வளர்ந்த துரதிருஷ்டம் அவன் வாழும் காலத்தில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறவில்லை. அவன் மறைந்த பிறகும் கூட அரை நூற்றாண்டு காலம் அவனை ஒரு சாதிய வட்டத்துக்குள் அடைத்தே அவமதித்தது இந்த பாழ் பட்ட சமூகம். ஆனால் காலம் கடந்து நிற்கும் அவனது தேசப்பற்றும் தேசிய கவிதையும் தேசாபிமானிகளின் மனதில் அவனுக்கு கிடைக்க பெறாத அங்கீகாரம் பற்றி பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஆற்றாமையும் இறையருளால் இன்று ஆட்சியாளர்கள் மூலம் காலத்தால் மறக்கடிக்கப்பட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த மகாகவிஞனுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தர வேண்டும் என்ற முனைப்பை கொடுத்திருக்கிறது. எந்த தமிழகத்தில் பாரதி சாதிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்ட இருட்டடிப்பு செய்யப்பட்டானோ அதே தமிழகத்தில் ஆளும் கவர்னர் மாளிகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதி மஹால் என்ற பெயரில் ஒரு உள்ளரங்கமே அமையப்பெற்று முக்கிய நிகழ்வுகள் யாவும் பாரதியின் ஆத்ம ஆசியோடு நடைபெறும் என்ற மரியாதையை கொடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த முடிந்த காசி தமிழ் சங்கமம் விழாவை ஒட்டி காசி மாநகரில் பாரதி தங்கி வாழ்ந்த வீட்டை அவனது நினைவு இல்லமாக புதுப்பித்து அங்கு அவனது வெண்கல சிலையை நிறுவி பாரதி என்னும் உலக கவிஞனை காசி மாநகரில் இருந்து உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்நிலைத்தொடர்ந்து இனிவரும் காலங்களில். பாரதியின் மாண்பும் மகத்துவமும் உயர்த்தப்பட வேண்டும். அவனது கீர்த்தி வளரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும் . அவனது கவிதைகள் வெற்று வார்த்தைகள் அல்ல. அது வழிகாட்டும் சாசனங்கள் என்பது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே தேசியவாதிகளின் கோரிக்கை.

பாரதி வாழ்ந்த காலத்தில் ஒரு பிடி அன்னத்திற்கும் அவனுக்கு உத்திரவாதம் தராத இந்த சமூகம் அவன் இறந்த பிறகு அவனது பெயரையும் புகழையும் அவனது கவிதைகளையும் தேசிய மயமாக்கிக் கொண்ட இந்த தேசம் அந்த கவிஞனுக்கு உரிய கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கி வரலாற்றில் அவனது பெயரையும் புகழையும் நிலை நிறுத்துவதன் மூலமே தனது கடந்த கால வரலாற்றுப் பிழைகளை எல்லாம் சரி செய்து பரிகாரம் செய்து கொள்ள முடியும். அதை ஆட்சியாளர்கள் உணர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதுவே சுப்பிரமணிய பாரதியார் என்ற பாரத தேசியம் போற்றிய சுதேசி கவிஞனுக்கு இந்த தேசம் செய்யும் குறைந்த பட்ச நன்றி கடனாக இருக்க முடியும்.


Share it if you like it