பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 133 ஓட்டு: கவிழ்கிறதா சிவசேனா ஆட்சி?!

பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 133 ஓட்டு: கவிழ்கிறதா சிவசேனா ஆட்சி?!

Share it if you like it

மகாராஷ்டிராவில் நடந்த சட்ட மேலவைத் தேர்தலில் (எம்.எல்.சி.) பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 133 வாக்குகள் கிடைத்திருப்பதால், ஆளும் சிவசேனா ஆட்டம் கண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 சட்ட மேலவை உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. இந்த இடங்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், பா.ஜ.க. சார்பில் 5 வேட்பாளர்களும், ஆளும் மகா விகாஸ் கூட்டணி (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) சார்பில் 6 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர். இதில், பா.ஜ.க. சார்பில் களமிறக்கிய 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றது. இதுதான் ஆளும் கூட்டணியை கடும் அதிர்ச்சிடைய வைத்திருக்கிறது. காரணம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், அக்கட்சிக்கு ஆதரவாக 133 வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதாவது, சுமார் 28 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாகவே, 5-வது எம்.எல்.சி. இடத்திலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில், சிவசேனாவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது தெரிகிறது. இது ஆளும் சிவசேனாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் இன்று மதியம் 12 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வரும்படி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை முதல் திடீரென மாயமாகி இருக்கிறார்கள். அவர்களது செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களை மாநில போலீஸார் ரகசியமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், மேற்படி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பா.ஜ.க.வின் சதி என்று சிவசேனா குற்றம்சாட்டி இருக்கிறது. அதேசமயம், சிவசேனாவுக்கு இது ஒரு பாடம் என்று பா.ஜ.க.வினர் கூறிவிருகின்றனர். ஏனெனில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பா.ஜ.க. 105 இடங்களிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க தகுதி பெற்றன. மேலும், ராஜ்தாக்கரேவின் நவநிர்மான் சேனை கட்சி பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டது. இதனால், பா.ஜ.க. – சிவசேனா இடையே மோதல் வெடித்தது. எனவே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து பா.ஜ.க.வுக்கு துரோகம் செய்துவிட்டது சிவசேனா.

அப்போதிருந்தே, பா.ஜ.க.வுக்கும் சிவசேனாவுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. எந்த நேரத்திலும் உத்தவ் தாக்கரே ஆட்சியை பா.ஜ.க. கவிழ்க்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், மகாராஷ்டிர மாநில சட்ட மேலவை உறுப்பினர்கள் 10 பேரின் பதவிகாலம் முடிவுக்கு வந்தது. இதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் சூழல் இருந்தது. எனினும், துணிச்சலாக 5 பேரை நிறுத்தியது பா.ஜ.க. தலைமை. அந்த 5-வது வேட்பாளரும் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கு, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதுதான் காரணம். இதன் மூலம், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 133 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது உறுதியாகி இருக்கிறது. இன்னும் 12 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்து விட்டால் அக்கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியும். ஆகவே, சிவசேனா கலக்கத்தில் இருக்கிறது.

துரோகத்துக்கு பரிசு துரோகமே!


Share it if you like it