உத்தவ் தாக்கரே ராஜினாமா: முதல்வராகிறார் ஃபட்னவீஸ்!

உத்தவ் தாக்கரே ராஜினாமா: முதல்வராகிறார் ஃபட்னவீஸ்!

Share it if you like it

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஃபட்னவீஸ் பதவியேற்க இருக்கிறார். இதனால், பா.ஜ.க.வினர் உற்சாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், பா.ஜ.க. 106 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் தகுதியை பெற்றன. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி தங்களுக்கே வேண்டும் என்று அடம் பிடிக்கவே, கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதனால், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றிய உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியையும் வசப்படுத்தினார். எனினும், சித்தாந்த ரீதியாக பொருந்தாக் கூட்டணி அரசில் சில குழப்பங்கள் நீடித்து வந்தன. குறிப்பாக, ஹிந்துக்களின் நலனுக்காக பால்தாக்கரேவால் தொடங்கப்பட்ட சிவசேனா கட்சியின் தற்போதைய தலைவரான உத்தவ் தாக்கரே, பதவி சுகத்துக்காக ஹிந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக, கம்யூனிஸ்ட் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகளால் பால்கரில் சாதுக்கள் கொள்ளப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

அதேபோல, ஹனுமன் சாலிசா இசைத்ததற்காக நவநிர்மான் சேனை கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. நவ்நீத் கவுர் ராமா, அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார். உத்தவ் தாக்கரேவின் இதுபோன்ற செயல்பாடுகளால் ஹிந்துக்களும், சொந்தக் கட்சியினரும் கடும் அதிருப்தியடைந்தனர். ஆகவே, ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதன் காரணமாக, ஆட்சி ஆட்டம் கண்டது. உத்தவ் தாக்கரே அரசும் பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க. பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில கவர்னர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய சிவசேனா, 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னரால் உத்தரவிட முடியாது என்று வாதிட்டது. ஆனால், சிவசேனாவின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரும் கவர்னரின் உத்தரவை உறுதி செய்தது.

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைவது உறுதியாகி என்பதால், தனது முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க உரிமை கோர பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவரான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.


Share it if you like it