மணிப்பூரில் நிலச்சரிவு: ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் பலி!

மணிப்பூரில் நிலச்சரிவு: ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் பலி!

Share it if you like it

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டிருக்கின்றனர்.

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் துபுல் யார்டு ரயில்வே கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த முகாமில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில், ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து, அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் டெரிடோரியல் ராணுவ வீரர்கள், துபுல் ரயில் நிலையத்தின் பொதுப் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. பி.டவுங்கல், “இடிபாடுகளில் இருந்து இதுவரை மொத்தம் 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை எத்தனை பேர் நிலச்சரிவில் புதைந்திருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும், கிராம மக்கள், ராணுவம் மற்றும் ரயில்வே பணியாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 60 பேர் சிக்கி இருக்கலாம் என்று தெரிகிறது” என்றார்.

இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் பேசியிருக்கிறார். மேலும், ’’நிலச்சரிவு குறித்த நிலைமையை மதிப்பாய்வு செய்தேன். மத்திய அரசின் அனைத்து ஆதரவும் கிடைக்கும் என்பதை உறுதி செய்தேன். என் எண்ணங்கள் யாவும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்’’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மணிப்பூர் மாநில முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக பேசி, மணிப்பூர் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும், கூடுதலாக 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it