நிதி முறைகேடு: மேதா பட்கர் மீது பாய்ந்தது வழக்கு!

நிதி முறைகேடு: மேதா பட்கர் மீது பாய்ந்தது வழக்கு!

Share it if you like it

பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்காக என்கிற பெயரில் நிதி வசூல் செய்து. அதை தவறாக பயன்படுத்தியதாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் உட்பட 12 பேர் மீது மத்திய பிரதேச போலிஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

நர்மதா நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்ட திட்டமிடப்பட்டு, 1979-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1987-ம் ஆண்டு பணிகள் துவங்கின. ஆனால், இந்த அணை கட்டப்பட்டால் மத்திய பிரதேசம், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி ‘நர்மதா பச்சாவோ அந்தோலன்’ (நர்மதை பாதுகாப்பு அமைப்பு) என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராட்டதை முன்னெடுத்தவர் மேதா பட்கர். மேலும், இது தொடர்பாக மேற்படி அமைப்பின் சார்பில் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டதால், அணை கட்ட தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

2000-ம் ஆண்டில் பல கட்டுப்பாடுகளுடன் அணை கட்ட கோர்ட் அனுமதி அளித்தது. இதன் பிறகு, கட்டுமானத்தை தொடங்கிய நிலையில், மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை நடத்தினர். இதன் மூலம் பிரபலமான மேதா பட்கர் சமூக ஆர்வலர் என்கிற பெயரில் வலம் வரத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில் பழங்குடியின குழந்தைகளை படிக்க வைப்பதாகச் சொல்லி ‘நர்மதா பச்சாவோ அந்தோலன்’ அறக்கட்டளை மூலம் நிதி வசூல் செய்தார் மேதா பட்கர். இதில்தான், பல்வேறு குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உதாரணமாக, மேதா பட்கரின் தொண்டு நிறுவனம் 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி ஒரே நாளில் 20 பேரிடம் இருந்து நிதியை பெற்றது. இதில் ஹைலைட் என்னவென்றால், மேற்கண்ட 20 நன்கொடைகளும் தலா 5,96,294 ரூபாய் என்று இருந்ததுதான்.

ஆனால், இவ்வாறு வசூல் செய்யப்பட்ட பணத்துக்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லை. மேலும், இவ்வாறு குழந்தைகளின் கல்விக்காக என்று வசூல் செய்த பணத்தை மேதா பட்கர், கோர்ட் செலவுகளுக்கும், போராட்ட செலவுகளுக்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிதி முறைகேடு செய்ததாக மேதா பட்கர் மீது கடந்த ஏப்ரல் 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது அமலாக்கத்துறை. இன்னொருபுறம், மேதா பட்கரின் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1.2 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதால், இது தொடர்பாக வருவாய் புலனாய்வுத் துறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன..

இந்த நிலையில்தான், மத்திய பிரதேச மாநில போலீஸாரும் மேதா பட்கர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது, மேதா பட்கர் தனது அறக்கட்டளை மூலம் 2004-ம் ஆண்டு முதல் தற்போதுவரை 13 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்டி இருக்கிறார். நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காகவும், பழங்குடியின குழந்தைகளுக்கு பள்ளிகள் கட்டுவது மற்றும் கல்வி வழங்குவதாகவும் கூறி இந்த பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த பணத்தில்தான் மேதா பட்கர் ஊழல் செய்திருப்பதாக மத்திய பிரதேச மாநிலம் பர்வானி போலீஸில் பிரிதம் ராஜ் என்பவர் புகார் செய்தார். அப்புகாரில், 2007 முதல் 2022-ம் ஆண்டு வரை பழங்குடியின மக்களின் கல்விக்காக பெறப்பட்ட நன்கொடைகளுக்கு கணக்கு இல்லை. மேலும், நிதியையும் முறைகேடாக பயன்படுத்தி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, மேதா பட்கர், பர்வீன் ரோமு ஜஹாங்கீர், விஜயா சவுகான், கைலாஷ் அவஸ்யா, மோகன் படிதார், ஆஷிஷ் மாண்ட்லோய், சஞ்சய் ஜோஷி உட்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.


Share it if you like it