அமலாக்கத்துறை விசாரணைக்காக பதறியடித்துக் கொண்டு சிக்னலில்கூட நிற்காமல் அமைச்சர் பொன்முடி சென்ற வீடியோ வைரலாகி வருகிறு.
சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணியின் வீடு, அலுவலகம் உட்பட 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தீவிர சோதனை நடத்தினர். அப்போது, பொன்முடியின் சென்னை வீட்டில் இருந்து, கணக்கில் வராத வெளிநாட்டு கரன்ஸி உட்பட 70 லட்சம் ரூபாய் ரொக்கம், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 13 மணி நேர சோதனைக்கு பிறகு, திங்கள்கிழமை இரவு அமைச்சர் பொன்முடியை அதிகாரிகள் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
நள்ளிரவை தாண்டியும் விசாரணை நீடித்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் விசாரணை முடிந்து பொன்முடியை அனுப்பி வைத்தனர். அப்போது, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும்படி அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்தது. இதனடிப்படையில், அமைச்சர் பொன்முடியும், அவரது மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் நேற்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றனர். அப்போதுதான், நேரமாகி விடக்கூடாது என்பதற்காக, சிக்னலில்கூட நிற்காமல் அமைச்சர் பொன்முடி சென்றிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும், சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக நடிகர் விஜய்க்கு போக்குவரத்து போலீஸார் 500 ரூபாய் அபராதம் விதித்தனர். அதேபோல, தற்போது அமைச்சர் பொன்முடி சிக்னலில் நிற்காமல் சென்றிருக்கிறார். அவருக்கு அபராதம் விதிக்கப்படுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.