அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி: உதயநிதிக்கு சிக்கல்!

அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி: உதயநிதிக்கு சிக்கல்!

Share it if you like it

அமைச்சர் உதயநிதியின் ரசிகர் மன்ற அறக்கட்டளையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, கணக்கு வழக்கு விவரங்களை ஆய்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உதயநிதி ஸ்டாலினின் தொண்டு அறக்கட்டளை அலுவலகம் அமைந்திருக்கிறது. இந்த அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகள் உட்பட அனைத்தையும் உதயநிதி ரசிகர் மன்றச் செயலாளர் பாபு என்பவர் கவனித்து வருகிறார். இந்த சூழலில், நேற்று முன்தினம் காலை சுமார் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், உதயநிதியின் அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 12 மணி நேரம் அறக்கட்டளையின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர்.

இச்சோதனையின்போது, பாபு அலுவலகத்தில் இல்லாததால் மறுநாள் அனைத்து ஆவணங்களையும் நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்து விட்டுச் சென்றனர். அதனடிப்படையில், நேற்று காலை 10 மணியளவில் அறக்கட்டளை சம்பந்தமான ஆவணங்களை சமர்ப்பித்து விசாரணைக்கு ஆஜராகினார் பாபு. அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் மீண்டும் நாளை ஆஜராகுமாறு தெரிவித்திருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, உதயநிதியின் நண்பர் வீடு, ரசிகர் மன்ற நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும், அதனடிப்படையில் உதயநிதியிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், உதயநிதிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


Share it if you like it