மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக இருப்பவன் தாவூத் இப்ராஹிம். இது தவிர, பல்வேறு குற்ற வழக்குகளிலும் தொடர்புடையவன். இவனை, 2003-ம் ஆண்டு உலக பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா. மேலும், இவனது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டது. இவன், தற்போது பயங்கரவாதிகளின் புகழிடமான பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. எனினும், 2011-ம் ஆண்டு நடந்த தாவூத் இப்ராஹிம் மகன் திருமணத்தில் பாகிஸ்தான் நாட்டின் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்குக் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. இந்த சூழலில், அவன் பாகிஸ்தானில் இருந்துகொண்டு, இந்தியாவில் இருப்பவர்களிடம் மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற வேலைகளை தன்னுடைய அடியாட்கள் மூலம் செயல்படுத்தி வருகிறான். சமீபத்தில்கூட, தாவூத்தின் உறவினர்கள் தங்கியிருக்கும் டோங்கிரி பகுதியில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது. அப்போது, தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான சோட்டா சகீல் உறவினர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்தான், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் நாக்பூர் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்திருக்கிறான். அவன், தாவூத் இப்ராஹிம் பெயரைச் சொல்லி மிரட்டி 100 கோடி ரூபாய் கேட்டிருக்கிறான். இவ்வாறு ஒரே நாளில் 3 முறை தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டியதாக நிதின் கட்கரி தரப்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, போலீஸ் உயரதிகாரிகள் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள். தற்போது நிதின் கட்கரி நாக்பூரில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் யாராவது இப்படி மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேற்கண்ட போன் கால் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்திருப்பதை போலீஸார் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, போன் செய்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேசமயம், மேற்கண்ட மிரட்டலைத் தொடர்ந்து நிதின் கட்கரிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.