நேபாள் விமான விபத்து: 5 இந்தியர்கள் உட்பட 72 பேர் பலி?!

நேபாள் விமான விபத்து: 5 இந்தியர்கள் உட்பட 72 பேர் பலி?!

Share it if you like it

நேபாள் நாட்டின் விமானம் விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உட்பட, அந்த விமானத்தில் சென்ற 72 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நேபாள் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ட்வின் எஞ்சின் ATR 72 ஏர்கிராப்ட் யெடி ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 10.33 மணிக்கு புறப்பட்டு சென்றது. இது பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. இந்த விமானத்தில், நேபாளத்தைச் சேர்ந்த 53 பேர், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், ஐரிஷ் ஒருவர், கொரியாவைச் சேர்ந்த இருவர், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸை சேர்ந்த தலா ஒருவர் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, சேதி ஆற்றங்கரை பகுதியில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்தில் சிக்கியது. மத்திய நேபாளத்தில் அமைந்துள்ள பொக்காராவின் பழைய மற்றும் புதிய விமான நிலையங்களுக்கு இடையில் விபத்துக்குள்ளானதாகத் தெரியவருகிறது. இதையடுத்து, தீயை அணைக்கும் பணிகளும், பயணிகளை மீட்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டன. இதனிடையே, மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றபோது, அருகில் இருந்த ஆலை ஒன்றும் தீப்பிடித்து எரிந்ததாக நேபாள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பல்வேறு மீட்புக்குழுக்கள் விமான விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 32 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்தாண்டு மே மாதம் 30-ம் தேதி இதே நேபாள நாட்டின் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 இந்தியர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it