பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை அடைவோம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!

பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை அடைவோம்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி!

Share it if you like it

உலகளவில் இந்தியா வலிமையான நாடாக திகழ்ந்து வருகிறது. ஆகவே, எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் உலகளவில் பொருளாதாரத்தில் 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

மறைந்த நடிகரும், பத்திரிகையாளருமான ‘சோ’ நிறுவிய துக்ளக் இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. விழாவுக்கு, ‘துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சோ எழுதிய ‘நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற நூலின் தொகுப்பை வெளியிட்டு பேசுகையில், “பொருளாதாரத்தில் உலகளவில் இந்தியா 5-வது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்துக்கு நிச்சயம் முன்னேறும். கடந்த 8 ஆண்டுகளில் தேசிய அளவில் பல முக்கிய முடிவுகளை தைரியமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்திருக்கிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித சமரசத்துக்கும் மத்திய அரசு சென்றதில்லை. பயங்கரவாதத்தை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது.

தற்போது உலகத்திலேயே இந்தியா மிகவும் பொறுப்பான நாடாக விளக்குகிறது. இந்திய பெருங்கடல் எல்லையில் வலிமையான, மிக முக்கியமான நாடாக திகழ்கிறது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை எல்லா நாடுகளும் பெருமையுடன் பார்க்கின்றன. மற்ற நாடுகளைவிட நமது வேகம் அதிகமாக இருக்கிறது. உலக நாடுகளில் பறந்து விரிந்த நிலப்பரப்பு கொண்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க நாடு இந்தியா. ஒரு காலத்தில் வணிக தளமாக பார்க்கப்பட்ட இந்தியா, இன்று முன்னணி நாடாக திகழ்ந்து உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்தியாவின் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் அது உலக நாடுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

ஒருகாலத்தில் பேரிடர் காலங்களில் உலக நாடுகளின் உதவியை இந்தியா எதிர்நோக்கி இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்கும் மிகப்பெரிய வல்லமைக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. 100 உலக நாடுகளுடன் கூட்டணி வைத்து, 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்கி, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. வளரும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது. உலக நாடுகளுடன் நட்புறவிலும் இந்தியா சிறந்த நாடாக விளங்குகிறது. இதனாலேயே உலக நாடுகளுக்கு மிகவும் முக்கிய தேவையான நாடாக இந்தியா தற்போது மாறி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it