அமைச்சருக்கு 18 சதவிகிதம் கண்டிப்பாக கமிஷன் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. நகரச் செயலாளர், ஒப்பந்ததாரரிடம் கறார் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு அமைச்சர் இல்லாததால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பனை பொறுப்பு அமைச்சராக போட்டிருக்கிறது தி.மு.க. தலைமை. இதன் பிறகு, தனது ஆதரவாளரான சுப்பிரமணியனை, திருநெல்வேலி நகரச் செயலாளராக நியமித்த ராஜகண்ணப்பன், அவரது அலுவலகத்தையும் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சூழலில்தான், நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் ஒருவரிடம், சுப்பிரமணியன், அமைச்சருக்கு 18 சதவிகிதம் கமிஷன் கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “நெல்லை மத்திய மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, மாநகரத்தில் உள்ள பணிகள் எனக்கு பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நான் இந்த கமிஷனை அமைச்சர் உட்பட பலருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது. எனவே, கண்டிப்பாக 18 சதவீதம் கமிஷன் தந்தாக வேண்டும். நாளைக்குத்தான் டெண்டர். நீங்கள் இன்றே பணத்தை தந்துவிட்டால், நாளை டெண்டரை முற்றிலும் நிறுத்திவிட்டு, புதிய டெண்டர் போட்டுவிடலாம்” என்று கூறுகிறார் தி.மு.க. நகரச் செயலாளர் சுப்பிரமணியன்.
அதற்கு, எதிரே அமர்ந்திருக்கும் ஒப்பந்ததாரர், “எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். அதோடு, ஜிஎஸ்.டி. தொகையை கழித்துக் கொள்ளுங்கள். அது மட்டுமே 55 லட்சம் ரூபாய் வருகிறது” என்று கூறுகிறார். ஆனால் சுப்பிரமணியனோ, “அதெல்லாம் முடியாது. கண்டிப்பாக ஜி.எஸ்.டி. தொகையுடன் 18 சதவீதம் கமிஷனை தந்தாக வேண்டும்” என்று கறாராகக் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் தி.மு.க.வின் அராஜகத்தை கண்டித்து வருகின்றனர்.