நெல்லையில், கோயில் வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்ட ஊழியர், அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 55 வயதான இவர், அப்பகுதியிலுள்ள பழமையான நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் பராமரிப்பு பணி செய்து வந்தார். வழக்கம்போல கடந்த 15-ம் தேதி காலையில் கோயிலுக்கு வந்த இவர், சிறப்பு பூஜைகளை முடித்துவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கோயிலுக்கு திரும்பி வந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கொம்பையா உள்ளிட்ட சிலர் கோயில் வளாகத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், அவர்களை தட்டிக் கேட்டிருக்கிறார். இதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், இது கைகளைப்பாக மாறிய நிலையில், கொம்பையா உள்ளிட்டோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கிருஷ்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதனால், கூச்சலிட்டபடியே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கிருஷ்ணனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, அவரது உறவினர்களும், ஊர் மக்களும், அவரது உடலை வாங்க மறுத்து, கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. ஆகவே, மேலச்செவல் பகுதி மற்றும் ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், கோயில் ஊழியர் கிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை கோயில் ஊழியர் கிருஷ்ணன், கோயில் சுற்றுச் சுவரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதால், கோயில் வளாகத்துக்குள்ளேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாகச் சீர்குலைந்து கிடக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதேசமயம், கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளையும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களையும் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை, கோயில் உண்டியல் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து, கோவில்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சாராயக் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்வது, இளைஞர்கள் இது போன்ற குற்றச் செயல்களை புரிய காரணமாக அமைந்திருக்கிறது. இனியும் கோபாலபுர குடும்பத்தை மகிழ்விப்பது மட்டுமே தனது பணி என்றிருக்காமல், உடனடியாக அமைச்சர் சேகர்பாபு கோயில் ஊழியர்களுக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், உயிரிழந்த கோயில் ஊழியர் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகத் தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும். அதோடு, அவரது இரு மகன்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.