நெதர்லாந்து எம்.பி., கங்கனா ரனாவத்… நுபுர் ஷர்மாவுக்கு குவியும் ஆதரவு!

நெதர்லாந்து எம்.பி., கங்கனா ரனாவத்… நுபுர் ஷர்மாவுக்கு குவியும் ஆதரவு!

Share it if you like it

முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவிற்கு, நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க்ரீட் வீல்டர்ஸ் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் ஆதரவாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் ஷர்மா. இவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சிவலிங்கத்தை இழிவாகப் பேசியதால் ஆத்திரமடைந்து, இஸ்லாமிய மத புத்தகத்தில் முகமது நபி பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் ஒன்றை தெரிவித்தார். இது கடுமையான விமர்சனங்களை சந்தித்த நிலையில், கத்தார், ஈரான், சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக, நுபுர் ஷர்மாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் வழக்கும் பதியப்பட்டது. மேலும், நுபுர் ஷர்மாவும், அவருக்கு ஆதரவாக பதிவிட்ட நவீன்குமார் ஜிண்டாலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால், இந்த விஷயத்தில் இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கத்தார் நாடு கறார் காட்டுகிறது.

இந்த நிலையில்தான், இந்த விவகாரத்தில் இந்தியா மன்னிப்புக் கேட்டக் கூடாது என்றும், பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்திருக்கிறார் நெதர்லாந்து சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க்ரீட் வீல்டர்ஸ். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகள், இந்திய அரசியல்வாதி நுபுர் ஷர்மாவின் கருத்தை கேட்டு கொதித்து போய் இருப்பது அபத்தமாக உள்ளது. நுபுர் ஷர்மா உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். முகமது நபி ஆயிஷாவை 6 வயதில் திருமணம் செய்து, 9 வயதில் அவருடன் முதல் உறவை மேற்கொண்டார். இதற்கு ஏன் இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மேலும், இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகம் இல்லை. அவர்கள், தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரை மோசமாக நடத்துவார்கள். அதோடு, சிறுபான்மையினரை கொன்று, மனித உரிமைகளை மீறுவார்கள். தவிர, முகமது நபியின் கருத்துக்கள் என்பது, மனதை புண்படுத்தும் குணம் கொண்டது மற்றும் தவறானது. அது ஹீரோயிச கருத்துக்கள் அல்ல. இந்த நயவஞ்சகர்களின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாதீர்கள். இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகமும் இல்லை, அவர்களுக்கென்று சட்டமும் இல்லை, அங்கு சுதந்திரமும் இல்லை. ஆகவே, அவர்கள்தான் விமர்சிக்கப்பட்ட வேண்டும்” என்று தில்லாக பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல, மற்றொரு ட்விட்டில், “இஸ்லாமிய நாடுகளை சமாதானம் செய்வது வேலைக்கு ஆகாது. அது இன்னும் பிரச்னையை பெரிதாக்கும். எனவே, இந்தியாவில் இருக்கும் எனது நண்பர்களே.. இஸ்லாமிய நாடுகளால் அச்சம் அடைய வேண்டாம். உங்கள் அரசியல்வாதி நுபுர் ஷர்மாவை காப்பதில் உறுதியாக இருங்கள். அவர் முகமது நபி பற்றி உண்மையைத்தான் பேசி இருக்கிறார். உங்கள் சுதந்திரத்திற்காக நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்டிருக்கும் கங்கனா ரனாவத், “நுபுர் ஷர்மாவுக்கு அவரது கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால், நீதிமன்றம் செல்லுங்கள். ஹிந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து ‘டான்’ ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கே, சீராக இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார். ஏற்கெனவே, ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it