ஓணம் பண்டிகை – ஆட்சியாளர்களின் ஆணவத்தை அடக்கி சனாதனத்தின் மானுட நீதியை நிலை நிறுத்திய வாமன அவதாரம்

ஓணம் பண்டிகை – ஆட்சியாளர்களின் ஆணவத்தை அடக்கி சனாதனத்தின் மானுட நீதியை நிலை நிறுத்திய வாமன அவதாரம்

Share it if you like it

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி நாளில் திருவோணம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் திருஓணம் பண்டிகை உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த திருவோணம் பண்டிகையின் வரலாறு நிகழ்ந்த தற்போதைய கேரள மண்ணில் இது சாதி மதம் கடந்த மண்ணின் தேசிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையுடன் கூடிய திருநாளான ஓணம் பண்டிகை ஆட்சியாளர்களின் ஆணவப் போக்கிற்கு முடிவு கட்டி மக்கள் நலன் காக்கும் ஆட்சியாளர்கள் மட்டுமே அரியணையில் நீடிக்க முடியும் என்ற சனாதனத்தின் உண்மையான மனு நீதியை மானுட நீதியை உலகிற்கு உரக்கச் சொன்ன வாமன அவதாரமமே பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. .

கிரத யுகத்தில் நிகழ்ந்ததாக புராணங்கள் குறிப்பிடும் வாமன அவதாரம் ஆட்சியாளர்கள் தான் என்ற அகந்தையும் ஆட்சி அதிகாரச் செருக்குமின்றி மக்கள் நலனும் பாதுகாப்பும் முன்னிறுத்தும் சுய விருப்பு வெறுப்பு கடந்த ஒரு ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்ற பாடத்தை வழங்கிய அவதாரமாகும். நாடாளும் மன்னன் நல்லாட்சி புரிபவனாக வல்லாட்சி ஆளுமை கொண்டவனாக இருத்தல் வேண்டும். அவன் அமைதியும் அடக்கமும் தர்ம சிந்தனையும் அற்ற ஆணவப் போக்கில் தொடர்ந்து பயணிப்பான் எனில் அவனது ஆணவமும் செறுக்கும் அடக்கப்பட்டு அவன் ஆட்சி அதிகாரமும் இழந்து அதல பாதாளத்தில் வீழும் காலம் நிச்சயம் வரும் . அதை அப்பாவி மக்களால் செய்ய முடியாத நிலையில் இறை சக்தி ஏதோ ஒரு வடிவில் வந்து நிச்சயம் செய்யும் என்ற உயர்ந்த தத்துவத்தையும் மானுட நம்பிக்கையையும் காலக்காலத்திற்கும் பறைசாற்றி நிற்பதே வாமன அவதாரம் சொல்லும் திருவோணம் திருநாள் பண்டிகை.

அகந்தையின் உச்சத்தில் ஆணவத்தில் அடக்கு முறையோடு அதர்மத்தின் வழியில் பயணித்த மாபலி சக்கரவர்த்திக்கு உரிய ஆலோசனை வழங்க நலன் விரும்பிகள் இல்லை. அல்லது அவர்களின் அறிவுரைகளை ஏற்கும் மனநிலையில் அவன் இல்லை என்ற பட்சத்தில் அவனது அடக்கு முறையால் துன்புற்றவர்கள் இறைவனை பணிந்து நியாயம் வேண்டும்போது அந்த இறைவன் சிறுவனாக வந்திட்டு நியாயம் வழங்கியது தான் வாமன அவதாரம். தானம் கேட்டு வருபவருக்கு இல்லை என்று சொல்லாத அரச வழியில் வாழும் மாபலியின் மனப்போக்கை உணர்ந்து அவனது இயல்பிலேயே பயணித்து இறைவன் அவனது ஆணவத்தை அடக்கியது தான் வாமன அவதாரம் சொல்லும் இறைநீதி.

நான்கடி உயரம் கூட இல்லாத பால்மணம் மாறாத அந்தணனாக யாசகம் வேண்டும் சிறுவனாக வந்து தனது அரசவையில் நிற்கும் போது வேண்டுவதைக் கேள் விருப்பம் போல் பெற்றுக்கொள் என்ற வார்த்தையை மாவலி சக்கரவர்த்தி உதிர்த்தான் . மாமன்னா வந்திருப்பவர் சாதாரண சிறுவன் போல் தெரியவில்லை. அவனது தீர்க்கமான பார்வையும் தேஜசும் வந்திருப்பது நாராயணன் தானோ? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. வார்த்தைகளில் கவனம் தேவை என்று எடுத்துரைத்த ஆலோசனைகளையும் புறந்தள்ளி மாபலி தானம் தர தயாரானான்.

மன்னனின் விருப்பப்படி தானம் கேட்க தயாரான சிறுவன் தனக்கு 3 அடி நிலம் மட்டும் போதும் என்று கேட்க , தாராளமாக எடுத்துக்கொள் என்று மன்னனும் அனுமதி வழங்கினான் . ஓங்கி உலகளந்த திரு விக்ரமனாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்ற நாராயணன் தனது ஓரடியில் மண்ணை அளந்து இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து மன்னவனே மூன்றாம் அடிக்கு எங்கே நிலம் ? என்று கேட்க வந்து நிற்பது சிறுவன் அல்ல. சாட்சாத் நாராயணனே என்பதை உணர்ந்து கொண்ட மாவலி சக்கரவர்த்தி என் நிலையிலும் கொடுத்த வார்த்தை தவறுவதற்கில்லை என்ற தனது தர்மத்தின் படி பணிந்து வணங்கி தனது முடியை தாழ்த்தி மூன்றாவது அடிக்கு நான் என்னையே அர்ப்பணம் செய்கிறேன் என்று வணங்கி நின்றான். மூன்றாவது அடியில் அவனது சிரசின் மீது கால் வைத்த சிறுவன் அவனை பாதாளத்தில் அழுத்தி அவனது செருக்கையும் அடக்கினான். என் நிலையிலும் தன் தான தர்மம் என்ற நியதியை கடைப்பிடிக்க துணிந்த அந்த மன்னனின் தர்மத்தை மெச்சி அவனுக்கு மோக்ஷத்த்தையும் நல்கினான். அவ்வழியில் நாம் இழைக்கும் தவறுகளுக்கு தண்டனை வழங்கும் இறை தர்மம் நாம் செய்யும் நன்மைகளுக்கும் உரிய பலனைத் தர தயங்குவதில்லை என்ற உயர்ந்த நீதியை விளக்குவது வாமன அவதாரத்தின் உச்சம்.

தனது ஆணவத்தால் அகந்தையால் தவறிழைத்து இறை அருளால் அவை யாவும் கடந்து மோட்சம் பெற்ற நிலையில் மாவலி சக்கரவர்த்தி நாராயணனிடம் அவன் விருப்ப பேரில் பெற்றுக் கொண்ட வரம் தான் மண்ணும் மக்களும் தான் மோட்சம் பெற்ற இந்த நாளை மகிழ்ச்சியான திருநாளாக சுற்றம் சூழ கொண்டாடி மகிழ வேண்டும் . அதைத்தான் ஒவ்வொரு ஆண்டும் வந்திருந்து பார்த்து மகிழ வேண்டும். என்ற வரம். மக்களின் மகிழ்ச்சியை விரும்பும் மன்னனின விருப்பத்தை வரமாக நல்கிய நாராயணன் மக்களின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்யும் தனது தர்மத்தை பூரணமாக கடைப்பிடித்த நியதியை சொல்வது திருஓணம் திருநாளின் மகத்துவம்.

யுகங்கள் கடந்தாலும் இன்றளவும் திருஓணம் திருநாளன்று தங்கள் மண்ணை ஆண்ட மன்னவன் மாவலி சக்கரவர்த்தி அரூப வடிவமாக தங்களது இல்லம் எழுந்தருளி தங்கள் மகிழ்ச்சியாக திருநாள் கொண்டாடுவதை பார்த்து மகிழ்ந்து தங்களோடு வாழ்வதாகவும் தங்களை ஆசீர்வதித்து மகிழ்வதாகவும் மக்கள் இன்றளவும் உணர்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் திருவோணம் பண்டிகையின் மாவலி சக்கரவர்த்தியை வரவேற்கும் கனி காணும் பண்டிகை கொண்டாட்டமும் சிறு குழந்தைகளுக்கு மாவலி சக்கரவர்த்தியாக வாமன நாராயண மூர்த்தியாக ஒப்பனை செய்வித்து மகிழ்விக்கும் பண்டிகை கொண்டாட்டமும்.

அவ்வகையில் மக்களின் நலனை மகிழ்ச்சியை வேண்டும் ஆட்சியாளர்களின் விருப்பங்கள் இறைவனால் வரமாக வழங்கப்படும். அதே வேளையில் ஆட்சி அதிகாரம் என்னும் அகம்பாவத்தை மக்களை மண்ணை அவர்கள் வதைக்க தொடங்கினால் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் அகம்பாவிகளாக பயணித்தால் இறை சக்தி ஏதோ ஒரு வடிவில் நிச்சயம் அவர்களை தண்டிக்கும் என்ற வாமன அவதாரத்தின் தார்பர்யத்தையும் மக்கள் சேவையை மகேசன் சேவை என்னும் சனாதனத்தின் உயர்ந்த மானுட நீதியையும் யுகங்கள் கடந்தும் பறைசாற்றி மண்ணையும் மக்களையும் தர்மத்தின் வழியில் நடத்திச் செல்கிறது திரு ஓணம் பண்டிகை என்னும் ஆண்டு திருவிழா என்றால் அது மிகையல்ல.இந்த நன்னாளில் மக்களின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ந்து வரம் அருளும் மாபலி சக்கரவர்த்தியையும் அவரின் மனம் போல வரம் அருளி மண்ணின் மக்களின் நலனை காத்தருளும் காவல் கொடியேந்தும் நாராயணன் வாமன அவதார மூர்த்தி ஸ்ரீ விஷ்ணு பகவானையும் வணங்கி நலமும் வளமும் பெறுவோம்.

ஓம் நமோ நாராயணா

ஸ்ரீ ஜெய நாராயணா


Share it if you like it