மரகதமணி – ஆஸ்கார் விருது

மரகதமணி – ஆஸ்கார் விருது

Share it if you like it

மரகதமணி – ஆஸ்கார் விருது

          முதன் முறையாக இந்தியத் திரைப்படம் ஒன்றிற்கு  அதுவும் தென்னிந்தியத் திரைப்படம் படம் ஒன்றிற்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. இசையமைப்பாளர் கீரவாணி அவர்கள் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின்  “நாட்டு நாட்டு…” பாட்டுக்கு ‘ஆஸ்கார் விருது’ வாங்கி இருக்கிறார்.

          இன்றைய இசை ரசிகர்களுக்கு அவர் கீரவாணி. இதற்கு முன்னால் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அவர் மரகதமணி. இவர் 1990களிலிருந்தே இசையமைக்கிறார். ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் ‘அழகன்’ படத்திற்கு இசையமைக்க மரகதமணியை பாலசந்தர் அழைத்தார். மம்முட்டி, பானுப்பிரியா இருவரும் விடிய விடிய டெலிபோனில் பாடி காதல் வளர்க்கும், “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா… இன்னும் இருக்கா… ” பாடலுக்கு இவர்தான் இசை அமைத்தார்.

          அதே படத்தில் வரும் “கோழி கூவும் நேரமாச்சி தள்ளிப்போ மாமா…” பாடல், “தத்தித்தோம் … வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்” என்ற பாடல் “சாதி மல்லி பூச்சரமே தங்க தமிழ் பாச்சரமே…” பாடல்களை  அந்தக் காலத்தில் பாடாத வாயே இல்லை.

          இதுபோல அவர் இசையமைத்த ‘வானமே எல்லை’ படத்தில் எல்லா பாடல்களுமே ஹிட். அதில் ரெண்டு பெரிய பாடல்களையும் ஒரு சிறிய பாடலையும் அவர் பாடி இருப்பார். மூன்றிலும் குரலில் வித்தியாசம் காட்டியிருப்பார்.  அந்த படத்தில், ‘கம்பங்காடே கம்பங்காடே… காளை இருக்கு பசியோடே…’ பாடல் அவர் பாடியதுதான். ஆனால் அந்த பாடல் எஸ்.பி.பி பாடியது போல இருக்கும். அந்த வகையில் இசையமைப்பாளர் மரகதமணி ஒரு நல்ல பாடகரும் கூட. கூடவே, தெலுங்கில் பாடலாசிரியரும் ஆவார்.

          அர்ஜூனின் ‘சேவகன்’, ‘பிரதாப்’, குஷ்பு நடித்துள்ள ‘ஜாதி மல்லி’, ரகுமானின் ‘நீ பாதி நான் பாதி’ என 90 களில் நிறைய தமிழ் படங்களுக்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார்.

பாலசந்தரின் சிஷ்யரான இயக்குனர் வஸந்த் கவிதாலயாவுக்காக இயக்கிய படம் “நீ பாதி நான் பாதி” இங்கும் மரகதமணி தான் இசை. இந்தத் திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “நிவேதா” என்ற பாடல் வெறும் ஸ்வரங்களோடு மட்டும் இசைக்கப்பட்ட பாடலாகப் புதுமை படைத்தது.

          இந்து முஸ்லீம் கலவரப் பின்னணியில் மலையாள நடிகர் முகேஷ் மற்றும் குஷ்புவை வைத்து ஜாதி மல்லி படத்தை பாலசந்தர் இயக்கியபோது அங்கேயும் மரகதமணியின் இசையில் குறை வைக்காத பாடல்கள் இனிக்கின்றன. ‘கம்பன் எங்கு போனான் … செல்லி என்ன ஆனான்’ பாடல் அன்றைய காலகட்டத்தில் மிகப்பிரபலமானது.

          “தேவராகம்” திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே காதில் தேன் வந்து பாயும் இனிமை கொண்டவை. அந்தத் திரைப்படத்தில் இருந்து ” சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ”, “யா யா யா யாதவா உன்னை அறிவேன்”ஆகிய ஜோடிப் பாடல்கள் இன்றும் இனிக்கும்.

          தெலுங்கில் கீரவாணியாக மாறிய இசையமைப்பாளர் மரகதமணி 1990இல் இருந்து இசை ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கீரவாணி என்பது மிக அருமையான கர்நாடக இராகம்.

          எம்.எம். கீரவாணிக்குச் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது “அன்னமய்யா” என்ற தெலுங்குப்படம். நாகர்ஜுனா நடிப்பில் 1997ஆம் ஆண்டில் வெளிவந்தது இத்திரைப்படம்.

இவர் இயக்குநர் ராஜமவுலிக்கு மைத்துனர். ராஜமவுலியின் எல்லா படங்களுக்கும் இவர்தான் இசை. ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ வரையிலும் தொடரும் இந்த வெற்றி கூட்டணியின் அடுத்த லெவல் அங்கீகாரம் தான் ஆஸ்கார்.

          இப்போது விருது வாங்கியிருக்கும் “நாட்டு நாட்டு” பாடலை பாடிய பாடகர் ‘கால பைரவா’ கீரவாணி அவர்களின் மகன்.  ‘அழகன்’ திரைப்படம் வெளியான ஆண்டில் பிறந்தவர். அப்பா இசையமைக்க, மகன் பாட, மாமன் தயாரிக்க, வீடு தேடி வந்திருக்கிறது ஆஸ்கார் விருது.

          கொடூரி மரகதமணி கீரவாணி 1961ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் நாள் பிறந்தவர். கீரவாணி அவர்களின் தந்தையார் கொடூரி சிவ சக்தி தத்தா ஒரு பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். கீரவாணி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கொவ்வூரில் பிறந்தார். எம்.எம் ஸ்ரீ லேகா, கல்யாணி மலிக், வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் இவரது உறவினர்களே.

          இவரது மனைவி எம்.எம்.ஸ்ரீவல்லி தயாரிப்பு மேலாண்மைப் பணிகளில் ஈடுபடுகிறார். மூத்த மகன் காலபைரவா ஒரு பாடகர். ‘நாட்டு நாட்டு’ பாடலை பாடியவர் இவர்தான். இளைய மகன் ஸ்ரீ சிம்ஹா ஒரு நடிகர். இவர் 2019ஆம் ஆண்டு வெளியான ‘மது வடலாரா’ என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, LAFCA விருது, விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது, தேசிய திரைப்பட விருது, எட்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் பதினொரு நந்தி விருதுகள் ஆகியவை கீரவாணி பெற்ற விருதுகளில் அடங்கும். 2023ஆம் ஆண்டில், இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

கீரவாணி அவர்கள் சில இந்தி, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் பணியாற்றினார். அவர் பணியாற்றிய சில தெலுங்குப் படங்கள் – க்ஷண க்ஷணம் (1991), கரானா மொகுடு (1992), அல்லரி பிரியுடு (1993), கிரிமினல் (1994), சுப சங்கல்பம் (1995), பெல்லி சண்டடி (1996), அன்னமய்யா (1997), ஸ்டூடண்ட் நம்பர் 1 (2001), பஹேலி (2005), ஸ்ரீ ராமதாசு (2006), மகதீரா (2009), பாகுபலி தொடர் (2015 மற்றும் 2017), மற்றும் RRR (2022). தேவராகம் (1996) அவர் இசையில் வெளியான மலையாளப்படம். இப்படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரீ தேவி நடித்தனர். இந்தி மொழியில் ஜக்ம் (1998), ஜிஸ்ம் (2003) ஆகிய படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.


Share it if you like it