கோர்ட் வளாகத்திற்குள் மசூதி: 3 மாதத்திற்குள் அகற்ற உத்தரவு!

கோர்ட் வளாகத்திற்குள் மசூதி: 3 மாதத்திற்குள் அகற்ற உத்தரவு!

Share it if you like it

அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மசூதியை, 3 மாதங்களுக்குள் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்துக்குச் சொந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து, கோர்ட் வளாகத்திற்குள்ளேயே 1950-ம் ஆண்டு மசூதி கட்டப்பட்டது. குத்தகை காலம் முடிவடைந்தும் மசூதியை காலி செய்யாததால், இது தொடர்பாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், மசூதியை 3 மாதங்களுக்கும் அகற்ற வேண்டும் என்று 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து இந்திய வக்பு வாரியமும், உத்தரப் பிரதேச சன்னி முஸ்லீம்களின் வக்பு வாரியமும் டெல்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கை  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தற்போது மசூதி அமைந்திருக்கும் நிலம் குத்தகைச் சொத்து. அதற்கு உரிமை கோர முடியாது. ஆகவே, இன்று முதல் 3 மாதங்களுக்குள் மசூதி கட்டடத்தை அகற்றவில்லை என்றால், உயர் நீதிமன்றமோ அல்லது உ.பி. மாநில அரசு அதிகாரிகளோ அக்கட்டடத்தை இடிக்கவோ, அகற்றவோ நடவடிக்கை எடுக்கலாம். தவிர, நீதிமன்றத்துக்கு அருகிலேயே மசூதி அமைக்க நிலம் ஒதுக்குமாறு மனுதாரர்கள் உத்தர பிரதேச அரசிடம் கோரலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்கு, மசூதியின் நிர்வாகக் குழு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 1950-ம் ஆண்டிலிருந்து மசூதி இருக்கிறது. இதை வெளியே கொண்டு செல்லச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் நிலம் கொடுத்தால் மாற்று இடத்திற்குச் செல்ல எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார். ஆனால், கோர்ட்டுக்குள் வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்கு இடம் இல்லை என்று ஏற்கெனவே உ.பி. அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it