பாகிஸ்தான் பெஷாவர் நகரிலுள்ள மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் நாடு கடந்த சில மாதங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் கரன்ஸியின் மதிப்பு 287 ரூபாயாக இருக்கிறது. இதனிடையே, அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கிலோ கோதுமை மாவுக்காக பல உயர்ப்பலிகள் நிகழ்ந்திருக்கின்றன. எனினும், தங்களை அல்லா காப்பாற்றுவார் என்று அந்நாட்டின் ஆளும்கட்சியினர் கூறி வருகின்றனர். மேலும், தங்களது கஷ்டத்தைக் கூறி பிற நாடுகளிடம் யாசகம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வெட்கக்கேடானது என்று மிகவும் வேதனையுடன் கூறியிருந்தார்.
இந்த சூழலில்தான், அந்நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்திருக்கிறது. வழக்கம்போல இன்று மதியம் தொழுகை நடந்திருக்கிறது. அப்போது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறி இருக்கிறது. இதில், மசூதியின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. இச்சம்பவத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும், 90 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதி ஒருவன் தனது உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம் போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் பகுதியாகும். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மக்களிடையே பயத்தை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கட்டடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.