தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் வக்கீல் பால்கனகராஜுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவை 2047-ல் இஸ்லாமிய நாடாக மாற்றுவோம். இதற்குத் தடையாக இருக்கும் ஹிந்து தலைவர்களை எலிமினேட் செய்வோம் என்கிற சதித் திட்டத்துடன் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செயல்பட்டது. இந்த அமைப்பின் மாநில பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் மதுரை உயர் நீதிமன்ற வக்கீல்கள் முகமது யூசுப், முகமது அப்பாஸ் ஆகியோர். இந்த 2 வழக்கறிஞர்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரையில் கைது செய்திருக்கிறார்கள்.
ஆனால், மேற்கண்ட 2 வக்கீல்களும் இஸ்லாமிய குற்றவாளிகள் தொடர்பான வழக்கில் ஆஜரானதற்காக கைது செய்யப்பட்டது போல், ஒரு தவறான பொய் பிரசாரத்தை முன்வைத்து, சென்னையில் சில வழக்கறிஞர்களின் ஏற்பாட்டில் நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக இருக்கும் வழக்கறிஞர் பால்கனகராஜும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு, பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், 2 வக்கீல்களும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கைது செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரானதால் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு பொய்யான தகவுனுடன் பேட்டி அளித்திருக்கிறார்.
இவரது இந்த பேட்டி பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்திய தேசியத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக சதிச் செயல்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்த பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் பால்கனகராஜின் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.