2022 பிரிவு ( பயிற்சி ) ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என். ரவி இவ்வாறு பேசினார் ;
உறுதியாகவும், பணிவாகவும் இருங்கள். “உங்கள் பணியில் பல சமயங்களில், நீங்கள் சிக்கல்களை சந்திக்கலாம். உங்கள் பணி பற்றி சிலர் புகார் செய்யலாம், ஆனால் நீங்கள் உறுதியாக இருக்க விரும்பினால், நீங்கள் பணிவாகவும் இருக்க வேண்டும். அப்படி இருப்பதன் மூலம் நீங்கள் வளருவீர்கள். இந்த பதவியை அடைந்திருப்பது விளையாட்டான விஷயமல்ல. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டம் சிறியதாக இருந்தால் கூட, அதிலும் சிறப்பான பணியை கொடுங்கள்.
தமிழின் சிறப்பை மற்ற மாநிலங்கள் அறியாதது வருத்தமே. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். தமிழ் கலாசாரம் மிகவும் ஆழமானது மற்றும் வளமானது. தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழமையானது.
தமிழ் இலக்கியம் மிகவும் பழமையானது. ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றுவது சிறந்த அனுபவம். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாரம்பரியம் கொண்ட ஆழமான மற்றும் வளமான கலாச்சாரத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது.
இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நான் இப்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாக படிக்க முடிகிறது. இது ஒரு அற்புதமான இடம்.
நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களான ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று பார்த்தால் அவற்றின் முன்பு கிரேக்க கட்டடக்கலை கூட தோற்று விடும் என கூறுவீர்கள் என தெரிவித்துள்ளார்.