“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”
வள்ளலார், 5/10/1823ல், சிதம்பரம் தாலுகாவில் உள்ள மருதூரில், வேளாளர் குலத்தில், எளிய சூழலில் பிறந்தார். சிறுவனாக இருக்கும் போதே, கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
தென்னாட்டில் உள்ள புகழ்பெற்ற தலங்களுக்கு, யாத்திரை செய்த பின், இறுதியாக பார்வதிபுரம் அடுத்த கருங்குழியில், தங்கினார்.1827ல், பார்வதி அடுத்த வடலூரில், தனித்தன்மை வாய்ந்த எண் கோண வடிவமுள்ள, சுவர் உருண்டை கூரையுடன், அன்பர்கள் நன்கொடைகளைக் கொண்டு, அவரால் கட்டப்பட்டது. இவ்விடத்தை தேர்ந்தெடுத்ததன் காரணம், அங்கிருந்து பார்த்தால், சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும், தெளிவாக தெரிவதே என்று, சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறைகள், மற்ற கோயில்களில் இருந்து வேறுபட்டவை.
பிரிட்டிஷ் ஆட்சியில், உணவுப் பாதுகாப்பு இல்லாமல் போனதை கடுமையாக எதிர்த்தார். சமரச சன்மார்க்க கோட்பாட்டை போதித்தார். பசித் துன்பத்தை போக்கும், அணையா விளக்கை ஏற்படுத்தினார். இந்திய மக்கள் உணவு இன்றி தவிக்கின்ற வேளையில், ஆங்கிலேயர்கள் வெளிநாட்டுக்கு உணவு ஏற்றுமதி செய்தனர். அதனை கடுமையாக எதிர்த்து, மக்களின் பசியைப் போக்கவே அணையாமல் எரியும் அடுப்பை தொடங்கி, இன்றளவும் அந்த அடுப்பு எரிந்து கொண்டு, மக்கள் அனைவருக்கும் பசியாற்றுகிறது. பிரிட்டிஷார் உருவாக்கிய தாது வருஷ பஞ்சத்தை எதிர் கொள்ள, அணையா விளக்கு அடுப்பும், அன்னதானமும் உதவின.
மக்களிடையே பிரிவு ஏற்படுத்த முயலும், ஆரிய – இனவாதக் கோட்பாட்டை மறுத்தார். அனைவரும் கற்க வேண்டி, தமிழ் -சமஸ்கிருதம் – ஆங்கிலம் எனும் மும்மொழிக் கோட்பாட்டை வலியுறுத்தினார். பசு பாதுகாப்பை வலியுறுத்தி, பசு தரும் நன்மைகளை மக்களுக்கு போதித்தார்.
‘சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம்’ என 4 ஒழுக்கங்களைக் கூறினார். அவை:
• இந்திரிய ஒழுக்கம் – பஞ்ச இந்திரியங்களையும் கட்டுப்படுத்தி ஒழுகுதல்,
• கரண ஒழுக்கம் – மனம், முதலிய அந்தக் கரணங்களை கட்டுப் படுத்துதல்,
• ஜீவ ஒழுக்கம் – மக்கள் அனைவரையும் தன்னை போல் பாவித்து ஒழுகுதல்,
• ஆன்மீக ஒழுக்கம் – எல்லா உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தல்.
எல்லா மொழிக்கும், தமிழ் தந்தை மொழி என்றாராம். தாய், தந்தை இல்லாமல் குழந்தைகள் பிறப்பதில்லை. தந்தை இல்லாமல், குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதை, விளக்கிக் கூறினார்.
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்”
எளிமையான சில கோட்பாடுகள்:
பசியின்மை, மாய திரைகளை நீக்கி அகற்ற, ‘ஜீவகாருண்யம்’ மட்டுமே ஒரே வழியாகும். ஜீவகாருண்யமே, மோட்ச வீட்டின் திறவு கோல். பசியைப் போக்கும் ஒரே வழி தான், அருளைப் பெறும் துவாரம் ஆகும். எந்த வகையிலும், ஆதாரம் இல்லாத ஏழைகளுக்கு, பசி நேரிட்ட போது மிகவும் கருணை உள்ளவர்களாக, நம்மால் கூடிய மட்டில், அந்தப் பசி என்கிற தீயை, நிவர்த்தி படுத்துவதற்கு முயற்சி செய்வது, ஆன்மீகமாகும். இந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை, கடைபிடிப்பது ‘அடிப்படை ஒழுக்கம்’ என்று கூறியுள்ளார்.
மருத்துவ குறிப்புகள்:
வள்ளலார் மணி, மந்திரம், மருந்து மூன்றிலும் கை தேர்ந்தவர். இருமலுக்கு, தேக மெலிவு, ஈளை,
சுக்கிலக்கெடுதிக்கு, நீர்க்கோவை, வாத பித்த ஆபாச கெடுதி, மலபந்தம், சூலை, தேக வலிவு,
சரீர திடத்திற்கு, பஞ்சகற்பம், நீலகண்ட மணி மாத்திரை ஆகிய நோய்களுக்கு சரியான மருத்துவத்தை பற்றி கூறியுள்ளார்.
485 மூலிகைகளின் பெயரைக் கூறி அதன் குணத்தை அவர் ஒரே வரியில் கூறி இருப்பது, வியப்பைஅளிக்கும். அவற்றில் சில,
• அரசுக்கு- புத்திவர்த்தினி
• ஆளுக்கு – புழுக்கள் போக்கும்
• இச்சில் – குஷ்டம் போக்கும்
• தாமரை – கண் குளிர்ச்சி
அவர் கூறிய, ஐந்து பெரும் மூலிகைகள்
கரிசலாங்கண்ணி, தூதுவளை, வல்லாரை, முசுமுசுக்கை, பொன்னாங்கண்ணி ஆகிய கீரை வகைகள் ஆகும்.
படைப்புகள்:
• 5818 பாடல்களை அருளியுள்ளார். இவை ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
• திருவருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல்.
• உரைநடை நூல்கள்.
• மனுமுறை கண்ட வாசகம் .
• ஜீவகாருண்ய வாசகம்.
• வியாக்கியானங்கள்.
• மருத்துவ குறிப்புகள்.
• உபதேசங்கள்.
• திருமுகங்கள், கடிதங்கள், அழைப்பிதழ்கள்.
• விண்ணப்பங்கள்.
பன்முக படைப்பாளி:
நூலாசிரியர், உரையாசிரியர் பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், போதகாசிரியர் ஞானாசிரியர், சித்த மருத்துவர், வியாக்கியான கர்த்தா, அருள் கவிஞர், அருள் ஞானி.
அற்புதங்கள்:
கருங்குழியில் இருந்த பாலு ரெட்டியார் என்பவர் குஷ்ட நோயினால் துன்புற்றார். அவர் சுவாமிகளை அணுகவே, வள்ளலார் திருநீறு கொடுத்து, அதை தீர்த்தார். முத்து நாராயண ரெட்டியார் என்பவருக்கு கண் பார்வை பாதிக்கப் பட்டு, அவரது கண் வினை தீர்த்தார். வள்ளலாருக்கு, இந்திய அரசு ஐந்து ரூபாய் தபால் தலையை வெளியிட்டு கௌரவித்தது.
அவர் ஏற்றி வைத்த ஜோதி தரிசனம், இன்றும் கடந்து வருகிறது. சத்திய ஞான சபையிலும், சித்தி வளாகம் மேட்டுக்குப்பத்தில் சுடர் விட்டு, பிரகாசித்து கொண்டு வருகிறது. எல்லா உயிர்களும், இன்புற்று வாழ்க என்ற வழிபாடு இன்றும் தொடர்கிறது.
வள்ளலார் வழியில், 25 ஆண்டுகள் தீவிர சீடரான அவருடன் வாழ்ந்த தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியது, “தென்னிந்தியாவில் புகழ்வாய்ந்த யோகியர் ஆன அருட்பிரகாச வள்ளலார், தனது ஐம்பதாவது வயதில், இவ்வுலகத்தை தமதுஅருளுரைகளுக்கு ஏற்ப, தமது சீடர்களை பக்குவப்படுத்த தொடங்கினார். 1873, கடைசி மூன்று மாதங்கள், அவர் பேசுவதையும் உபதேசிப்பதையும், அறவே நிறுத்தினார், மௌனத்தில் ஆழ்ந்தார்.
30/1/1874 அன்று, தைப் பூசத்தன்று, ஒரு சிறு அறையில், சிறு கட்டிடத்தின் தனி அறை ஒன்றில், விரிப்பில் சயனித்துக் கொண்டார். பிறகு, அறை கதவு பூட்டப்பட்டது, இருந்த ஒரு துவாரமும் சுவர் வைத்து, அடைக்கப் பட்டது. சிறிது நேரம் கழித்து, கதவைத் திறந்து பார்த்த பொழுது, ஜோதி மட்டுமே இருந்தது. அவரின் பூதவுடல் காணாமல் போனது. இவ்வாறு, அவர் சமாதி நிலையை அடைந்தார்” என்று கூறியுள்ளார்.
இன்றும் ஒவ்வொரு தைப்பூசத்தன்று, வடலூரில் வள்ளலார் இறைவனடி சேர்ந்த அறையில், ஜோதி வடிவமாக, அவரை காண்கின்றார்கள். இன்றும், அன்னதானங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. சுத்த சன்மார்க்க வழியில் மக்களை மேம்படுத்த, அவரது சீடர்கள் அருள் புரிந்து வருகிறார். வள்ளலாரின் சேவைகள், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அவரின் அருள்மொழிகள், மருத்துவ குறிப்புகள் மற்றும் கவிதைகள் இன்றளவும் மக்களால் போற்றப்பட்டு வருகிறது.
- விஜயா முரளி