வேலு நாச்சியார்
(ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்ட முதல் ராணி, போரில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார் (1730-1796))
18 ஆம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் இருந்த அரசிகளில் ஒருவர், வேலு நாச்சியார். அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக போராட்டம் செய்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடினார். இராமநாதபுரம் சாம்ராஜ்ஜியத்தில், கி.பி.1730 இல், மன்னர் செல்லமுத்து சேதுபதி மற்றும் ராணி சகந்தி முத்தாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அரச குடும்பத்தின் ஒரே மகள். அரச தம்பதிகளுக்கு, ஆண் வாரிசு இல்லை, இந்த காரணத்திற்காக அரச குடும்பம், இளவரசி வேலு நாச்சியாரை, நாட்டின் மற்ற இளவரசர்களைப் போலவே வளர்த்தது.
ஆயுதங்களைக் கையாளும் திறன் மற்றும் வளரி, சிலம்பம் போன்ற தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றார். குதிரை சவாரி மற்றும் வில் வித்தையையும் கற்றுக் கொண்டார். அரச தம்பதிகள் அவருக்கு பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் உருது போன்ற பல மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தனர். இதனால் இந்த இளம் துணிச்சலான இளவரசி, அனைத்து போர் நுட்பங்களிலும், சிறந்த பயிற்சி பெற்றிருந்தார். பல மொழிகளில் புலமை பெற்று, ராஜ்ஜியத்தை, ஆளத் தயாராக இருந்தார். 1772 ஆம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில், சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்தார். ஆங்கிலேயர்கள், அவரது ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து, அவரது கணவரைக் கொன்றனர்.
லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர் தலைமையில், பிரிட்டிஷ் படைகள், அரண்மனையைத் தாக்கின. இதனால் வேலு நாச்சியர், மிகவும் கவலை அடைந்தார். மேலும், ஆங்கிலேயர்களுக்கு தக்க பதிலடி அளிக்க வேண்டும் என எண்ணினார். தளவாய் தாண்டவராய பிள்ளை மற்றும் மருது சகோதரர்களுக்கு காயம் ஏற்பட்டது, அவர்கள் ஆங்கிலேயர்களை தண்டிக்க, அரண்மனையை மீண்டும் கைப்பற்றுவதாக உறுதி அளித்தனர்.
பிரிட்டிஷ் படையெடுப்பாளர்களைத் தவிர்ப்பதற்காக, வேலு நாச்சியார் அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றார். ஹைதர் அலியைச் சந்தித்து, கிழக்கிந்திய நிறுவனத்துடனான தனது பிரச்சனைகள் அனைத்தையும் உருது மொழியில் விரிவாக விளக்கினார், பிரிட்டிஷ் ஆட்சியின் மீதான தனது கடுமையான எதிர்ப்பை அவருக்கு விளக்கினார். ஹைதர் ஆலி, அவருக்கு உதவுவதாக உறுதியளித்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தேவையான இராணுவ உதவிகளை வழங்கினார். ராணி வேலு நாச்சியாருக்கு தேவையான ராணுவ உபகரணங்களை வழங்க திண்டுக்கல் கோட்டை கிளடாரைச் சேர்ந்த சையத் கார்க்கிக்கு உத்தரவிட்டார். அவர், ராணி வேலு நாச்சியாருக்கு, 5000 காலாட் படை மற்றும் 5000 குதிரைப் படையை உடனடியாக வழங்கினார்.
மருது சகோதரர்கள் அளித்த உதவியால், அவரது படைகள் சிவகங்கை நோக்கி முன்னேறின. ராணி வேலு நாச்சியாரின் கூட்டுப் படைகளின் முன்னேற்றத்தைத் தவிர்க்க ஆற்காடு நவாப், பல தடைகளை ஏற்படுத்தினார். ராணியும், மருது சகோதரர்களும் எல்லாத் தடைகளையும் தாண்டி, முன்னேறினர். இந்த இராணுவத்தின் மூலம், ஆங்கிலேயர்கள் பதுங்கியிருந்த கோட்டையை அடையும் முன்னர், ராணி வேலு நாச்சியார் படிப்படியாக சிவகங்கை மாகாணத்தை மீண்டும் கைப்பற்றினார். ராணி வேலு நாச்சியாரிடம் கோட்டையை உடைக்க எந்த கருவியும் இல்லை. உள்ளே இருந்து கதவுகள் திறக்கப்படா விட்டால், கோட்டையை கைப்பற்ற முடியாது என்று சையத் கார்க்கி தெரிவித்தார்.
இத்தருணத்தில், “உடையால் படை”யின் தலைமைத் தளபதியான ‘குயிலி’ (இது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இறந்த தனது வளர்ப்பு மகளின் நினைவாக வேலு நாச்சியாரால் உருவாக்கப் பட்டது) வாயில்களை உள்ளே இருந்து திறப்பதாக, மகளிர் ராணுவத்தினர் உறுதி அளித்தனர். உறுதி அளித்தபடி, அவரும் அவரது சிறிய விவேகமான படையும் உள்ளே இருந்து வாயில்களைத் திறந்தனர். ஆனால் அதனைத் திறப்பதற்காக, குயிலி தன்னையே கொளுத்தி விட்டு, கோட்டைக்குள் இருந்த வெடி மருந்துக் கிடங்கிற்குள் நுழைந்தாள். அவளுடைய துணிச்சலான செயல் மற்றும் தியாகத்தின் விளைவாக, அவர் ஆற்காடு நவாபை தோற்கடித்து, அவரை சிறை பிடித்தார். சிவகங்கை அரண்மனையை மீண்டும் கைப்பற்றி, சிவகங்கை ராஜ்ஜியத்தின் ராணியாக முடி சூட்டினாள். அவருடைய கணவன் மற்றும் அவருடைய விசுவாசமான படை வீரர்களான உடையாள் மற்றும் குயிலி ஆகியோரின் மரணத்திற்கு, தன் வெற்றியை காணிக்கை ஆக்கினார்.
ஆங்கிலேயப் பேரரசருக்கு எதிராகக் கிளர்ச்சி எழுப்பி, போரில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் ராணி, வேலு நாச்சியார் ஆவார்.
– ஆனந்த்