தேசிய கீதத்தை அவமதிப்பு செய்த உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 28- ஆம் தேதி தமிழக அரசு சார்பில், நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டை மேட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ளும் விதமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் வந்தார்.
அந்த வகையில், பிரம்மாண்டமான முறையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கழக கண்மணிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். விழா நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, மேடை அருகே இருக்கையில் அமர்ந்து கொண்டு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் மெய் மறந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
இதனை, கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த காணொளி வைரலாக துவங்கியது. மேலும், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் தான், தேசிய கீதத்தை அவமதிப்பு செய்த உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அதிரடி’யாக சஸ்பெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.