மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஈ.வெ.ரா. கல்லூரி பேராசிரியர் மீது புகார்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஈ.வெ.ரா. கல்லூரி பேராசிரியர் மீது புகார்!

Share it if you like it

திருச்சி பெரியார் அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியின், ஆங்கில பேராசிரியர் மற்றும் துணைத் தலைவராக இருப்பவர் ஜெயக்குமார் 54. இவர், அக்கல்லூரியில், பயின்று வரும் மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது. ஆனால், கல்லூரி நிர்வாகம் அதுகுறித்து பெரிதாக கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அதேபோல, கடந்த ஆண்டும் ஜெயக்குமார் மீது பாலியல் சீண்டல் தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அந்த விவகாரத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், முதுகலை பயிலும் மாணவி ஒருவர் பேராசிரியர் ஜெயக்குமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி முதல்வர் சுகந்தியிடம் கடந்த ஜூன் மாதம் புகார் தெரிவித்து இருக்கிறார். இதற்கும், கல்லூரி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலமைச்சர் தனிப்பிரிவு, கல்லூரிக் கல்வி இயக்குனர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளருக்கு புகார் தெரிவித்து இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, இவ்விவகாரம் சூடுபிடித்து இருக்கிறது. இதையடுத்து, முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திற்கு மேலிடம் அழுத்தம் கொடுத்து இருக்கிறது. இதையடுத்து, கடந்த ஜூலை 23- ஆம் தேதி கல்லூரி நிர்வாகம் தீவிர விசாரணையை மேற்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், மாணவிகளுக்கு பாலியல் கொடுமைகள் நிகழ்ந்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. இதையடுத்து, விசாரணை நடத்திய அறிக்கையை கல்லூரி நிர்வாகம் ஜீலை 25-ஆம் தேதி கல்லூரிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைத்து இருக்கிறது. ஆனால், விசாரணை முடிந்து பல மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, ஜெயக்குமார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் கல்லூரி நிர்வாகமோ, அல்லது கல்வி இயக்குனர் அலுவலகமோ மேற்கொள்ளவில்லை என்பதே கொடுமையிலும் கொடுமை.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பேராசிரியர் ஜெயக்குமார் தனக்கு இருக்கும் ஜாதிய பின்புலத்தை வைத்து கல்லூரி நிர்வாகத்தை மிரட்டுவதாக அவர் மீது கல்லூரி நிர்வாகம் புகார் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுவே, ஹிந்து சார்ந்த கல்லூரியாக இருந்திருந்தால் இந்நேரம், அலாரம் வைக்காமலேயே வீரமணி அலறி இருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it