காவல் தொழிலோன் நாராயணன் அவதாரங்களில் மிகவும் உக்கிரமான அவதாரம் ந்ரஸிம்ம அவதாரம். ஆனால் அபயம் என்று அஞ்சி சரணடைந்த குழந்தை பிரகலாதனுக்காக கணமும் தாமதியாது எழுந்தருளி இரண்யகசிபுவை வதைத்து பிரகலாதனை மீட்டதால் அடியவர் மனதில் ந்ரஸிம்ம அவதாரம் முதலிடம் வகிக்கிறது. மனித உடலும் சிம்ம முகமும் கொண்டு அந்தி சாயும் வேளையில் தூணில் இருந்து வெளிப்பட்ட உக்ர ந்ரஸிம்ம ஸ்வாமி இரணியன் என்ற அதர்மத்தை அழித்து பிரகலாதன் என்ற தர்மத்தை பாதுகாத்தவர். அதன் மூலம் மனிதன் மிருகம் தேவர் அசுரர் யாராலும் இரவு பகல் எந்த வேளையிலும் வீடு பூமி ஆகாயம் எங்கும் மரணம் இல்லை என்று தான் பெற்ற வரம் கொண்டு உலகை வதைத்த ஹிரண்யனை. அந்த நியதிக்கேற்ப அந்தி வேளையில் தூணில் இருந்து ந்ரஸிம்ம அவதாரம் எடுத்து வந்து தலைவாயிலில் தன் மடியில் கிடத்தி கிழித்து அதர்மத்தை அழிக்க இறைவன் நினைத்தால் கணநேரம் போதும் என்ற நியதியை மானுடருக்கு வழங்கியவர்.
அபிஷேக பாக்கம் சிங்கிரிகுடி தென் அகோபிலம் பூவரசம் குப்பம் பரிக்கல் என்ற ஒரே நேர்கோட்டில் அமைந்த மூன்று தலங்கள் தரிசனம் செய்து வர
ந்ரஸிம்ம ஸ்வாமியை ஒரே நாளில் காலை உச்சி அந்தி என்று மூன்று பொழுதில் மூன்று ஸ்வாமியை வணங்கி வர பித்ரு பிறவி மானுடம் என்று மூன்று கடன் மனநோய் உடல் நோய் ஆத்ம இருள் என்று அஞ்ஞான நோய் என்று மூன்று நோய்கள் மாந்திரிக பகை மானுட பகை ஆத்ம பகை என்று மூன்று பகை அழியும் என்று ஐதீகம்.சுமார் 500 முதல் 1000 ஆண்டு கால இடைவெளியில். வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு அரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் புவியியல் வட்டப்பாதையில் டிகிரி சுத்தமாக ஒரே நேர்கோட்டில் அமர்ந்து இருப்பது தனிச்சிறப்பு.
முதலாவது நரசிம்மர் கோவில் – 1–. சிங்ககிரி ஸ்ரீ உக்ர நரசிம்ம ஸ்வாமி
(உதய தரிசனம் )
நரசிம்ம அவதாரத்தின் போது ஆக்ரோஷமாக தூணிலிருந்து வெளிப்பட்ட அதே உக்கிரத்துடன் 16 கைகளுடன் ஆயுதமேந்தி இரண்யகசிபுவை மடியில் வைத்து வதம் செய்யும் உக்ர சேவை. சாதிக்கும் ஸ்ரீ உக்ர நரசிம்ம ஸ்வாமி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
சுவாமியின் கருவறை குறைந்த வெளிச்சத்திலேயே இருக்கும் தீப ஆரத்தியில் தான் நாம் சுவாமியை தரிசிக்க முடியும் அந்த தரிசனமே நம்மை சப்த நாடிகளும் ஒடுங்க செய்து விடும் (முழு உக்கிரமான நரசிம்மர் என்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆலய தரிசனத்தை தவிர்ப்பது நலம்) கோவிலில் நந்தவனத்தில் ஜீவசமாதி அடைந்த ஒரு சித்தர் பீடம் இருக்கிறது எதிரில் ஆஞ்சநேய ஸ்வாமி பக்த ஆஞ்சநேயராக சேவை சாதிக்கிறார். இந்த உக்ர நரசிம்ம ஸ்வாமி தரிசனம் செய்துவர துஷ்டர்கள் பயம் எதிரிகள் தொல்லை எமபயம் மாந்திரீக தொந்தரவுகள் அமானுஷ்யம் பிடிப்பு என்று அனைத்து மாயமந்திர தொந்தரவுகளும் நம்மை விட்டு விலகும் . இந்த ஆலயத்தை செவ்வாய்க்கிழமை அல்லது செவ்வாய் ஓரையில் தரிசனம் செய்வது மிகுந்த பலனைத் தரவல்லது.
ஆலய நடை திறப்பு காலை 7-12-30 மாலை 4—8 .
போகும் வழி – பாண்டிச்சேரியின் அரவிந்தர் கண் மருத்துவமனை அருகே இருக்கும் சிக்னலில் இருந்து தவளக்குப்பம் சென்று அங்கிருந்து ஒரு கிலோ மீட்டரில் அபிஷேகப்பாக்கம் என்னும் சிங்ககிரி கோவிலை அடையலாம் .
2 உச்சிக்கால நரசிம்மர் .- தென் அஹோபிலம் என்னும் பூவரசங்குப்பம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்
அஹோபிலத்தில் இரணிய வதம் முடித்து சினம் கொண்டு இருந்த சுவாமியை மலர்மகள் மடியமர்ந்து சாந்தம் அடைய செய்த போது உக்கிரம் தணிந்த நரசிம்ம ஸ்வாமி ஆயுதம் விடுத்து வெண் பட்டு உடுத்தி தன் மடி அமர்ந்த பூமகளை இடையில் கரம் கொண்டு அணைத்தவாறு அமர்ந்திருக்கும் திருக்கோலம் . பச்சை பட்டு உடுத்தி மடியமர்ந்த அலைமகள் தன்னை கரம் கொண்டு அணைக்கும் மணவாளனை ஒரு கண்ணிலும் நாடி வரும் அடியாருக்கு யாமிருக்க இருக்க கவலை ஏன் உனக்கு ? என்று அபயம் அளிக்கும் வகையில் வரும் அடியார்களை மறு கண்ணிலும் பார்க்கும் விதமாக சேவை சாதிக்கும் திவ்ய தம்பதிகளின் திருக்கோலம் காண கண் கோடி வேண்டும்.
இந்த திவ்ய தம்பதிகளின் தரிசனம் செய்துவர திருமணத் தடை அகலும் காதல் கைகூடும் தாம்பத்திய அன்னியோன்யம் கூடும் பிரிந்த தம்பதியர் இணைந்து வாழ்வர். இந்தப் பூவரசன்குப்பம் லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி தரிசனம் செய்ய நம்முடைய முற்பிறவிக் கடன் முன்னோர் கடன் இப்பிறவியில் நாம் பட்ட மானுட கடன் வரை எல்லா கடன்களும் தீர்ந்து நாம் நிம்மதி அடைய வழி பிறக்கும் .
இந்த சுவாமியின் தரிசனம் அவ்வளவு எளிதில் வாய்க்கப் பெறுவதில்லை. மேலும் பூவரசன் குப்பம் மற்றும் பரிக்கல் கோவிலின் உள்ளே ஆண்கள் மேல் சட்டை பனியன் அணிந்து வர அனுமதி இல்லை .ஆண்கள் மேலாடை இன்றி தான் தரிசனம் செய்ய அனுமதி. மேலும் ஜீன்ஸ் லெகின்ஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வர அனுமதி இல்லை பாரம்பரிய ஆடைகள் அணிந்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
கோவில் நடை காலை 8-30—12– மாலை 4-30—-7-30
போகும் வழி – முதலாம் நரசிம்மரை அபிஷேக பாக்கத்தில் தரிசனம் செய்தபிறகு அங்கிருந்து 22 கீமீ பயணித்து மடுகரை வழியாக சிறுவந்தாடு என்ற இடத்தை அடைய வேண்டும் . ஒரு வழி சாலை என்பதால் இதற்கு குறைந்தபட்சம் அரை மணி முதல் ஒரு மணி வரை ஆகும்
சிறுவந்தாடு என்ற இடத்தில் இருந்து மேற்கில் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் பூவரசங்குப்பம் அடையலாம்.
3– அந்தி கால நரசிம்மர் கோவில் – ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில் பரிக்கல் .
பெண்ணை ஆற்றின் கரையில் தவம் செய்த ரிஷிகளை முனிகளை தொந்தரவு செய்த குதிரை மகன் முகம் கொண்ட அரக்கனை வதம் செய்து அரசனுக்கு காட்சிதந்து அமர்ந்த திருத்தலம். சுவாமி வெண்பட்டு உடுத்த தாயார் இளம் சிவப்பு பட்டு உடுத்தி அமர்ந்த திருக்கோலம். இந்த லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் செய்வது பிரதான சேவையாக இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் சுவாமியின் திருநட்சத்திரம் அல்லது பக்தர்களின் விருப்ப நாளன்று திருக்கல்யாண சேவை நடைபெறுகிறது.பரிக்கல் லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்துவர கைமேல் பலன் என்பது ஐதீகம் .நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும் எதிரிகள் எம பயம் நீங்கி நாம் நிம்மதி அடைய வழிவகுக்கும் மேலும் தொழில் வியாபாரம் உத்தியோகம் செழிக்கும் பொருளாதார மேம்பாடு கைகூடும் .
கோவில் நடை – காலை 8– 1 – மாலை 5–9 –
போகும் வழி – பூவரசன்குப்பம் தரிசனம் முடித்த பிறகு அங்கிருந்து விழுப்புரம் பண்ருட்டி மார்க்கத்தில் பயணித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்டு சாலையில் இருந்து வடக்கே 5 கிலோமீட்டர் தூரம் ஒரு வழி சாலையில் பயணித்தால் பரிக்கல் அடையலாம்
[பூவரசம் குப்பத்தில் இருந்து பண்ருட்டி போகும் வழியில் திருவதிகை என்னும் கிராமத்தை கடந்து தான் போக வேண்டும். அந்தத் திருவதிகையில் தான் திருவக்கரை வக்ர காளி சந்திரமவுலீஸ்வரர் ஸ்வாமி வக்ராசூரனை வதம் செய்தபோது ஆயுதம் ஏந்த தனது பூணூலை சுவாமி சாரமாக அளித்து உதவிய கோலமான ஸ்ரீ சார நாராயண பெருமாள் திருக்கோவில் அமைந்திருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் போல சங்கு சக்கரம் ஏந்தி நிற்கும் நாராயணன் திருக்கோலம் சிறப்பு .அசுர வதம் முடித்த கையோடு நரசிம்மர் ஸயணிக்கும் ஸ்ரீ சயன நரசிம்ம கோலம் வேறெங்கும் காண முடியாத ஸயன மூர்த்தி இக்கோவிலின் தனிச்சிறப்பு .இந்தக் கோவிலில் இருந்து மேல்நோக்கி மீண்டும் பண்ருட்டி சாலைக்கு திரும்பும் போது அங்கு தேவாரப்பாடல் பெற்ற சிவாலயமான வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது)
இந்த ஆலயங்களை முதல் தரிசனம் ஸ்ரீ உக்ர நரசிம்மர் அபிஷோகபாக்கம் ) இரண்டாம் தரிசனம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் (பூவரசன்குப்பம்) மூன்றாம் தரிசனம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் (பரிக்கல்) என்ற வரிசைப்படி தான் தரிசனம் செய்ய வேண்டும் .அதனால் எங்கிருந்து போனாலும் பாண்டிச்சேரியில் இருந்து தான் நரசிம்ம தரிசனம் யாத்திரை தொடங்க முடியும் அதற்கேற்றாற்போல் திட்டமிடுவது அவசியம் .
மேலும் இந்த அபிஷேகப்பாக்கம் – பூவரசன்குப்பம் – பரிக்கல் யாவுமே குக்கிராமங்கள். பூஜை பொருட்கள் கிடைக்கும் தேநீர் கடைகள் – பழச்சாறுகள் மட்டுமே கிடைக்கும். உணவக வசதி கிடையாது .மேலும் எந்த ஊர்களில் இருந்தும் இந்த கிராமங்களுக்கு சீரான போக்குவரத்து வசதி கிடையாது குறிப்பிட்ட கால இடைவெளியில் நகரப் பேருந்து வசதி மட்டுமே இருக்கிறது. அதனால் தனியாக வண்டி அமர்த்திக் கொண்டு போவதே ஒரே நாளில் 3 நரசிம்ம தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும் .அதே நேரத்தில் பெரிய அளவிலான நவீன ரக மற்றும் இரண்டு அடுக்கு சுற்றுலா பேருந்துகள் இந்த சாலைகளில் பயணிக்க முடியாது . கார் வேன் அல்லது சிறியரக பேருந்துகள் மட்டுமே அமர்த்திக் கொள்வது உசிதமாக இருக்கும்.
இதில் சிறுவந்தாடு என்ற இடம் ஓரளவு கடைவீதிகள் இருக்குமிடம் அங்கு சிறிய அளவிலான உணவகங்கள் உண்டு
(இந்த சிறவந்தாடு திருபுவனம் பட்டு சேலை உற்பத்தி மற்றும் வியாபார மையமாகும் ஏராளமான பட்டு சேலை கடைகள் உண்டு )
பண்ருட்டி அல்லது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே. பெரிய உணவகங்களை பார்க்க முடியும் .ஆனால். சைவ உணவகங்கள் அரிது .இந்த மூன்று கால நரசிம்ம தரிசனம் செய்ய தறியாக வண்டி அமர்த்திக் கொண்டு போகும்போது மதிய உணவு கையில் கொண்டு போவது நல்லது. பெரும்பாலும் பூவரசன்குப்பம் தரிசனம் முடித்து ஓய்வெடுக்கும் வகையில் தான் யாத்திரை அமையும்.அங்கு உணவக வசதி இல்லை ஆனால் உண்ணவும் ஓய்வு எடுக்கவும் ஊர் பொது மண்டபம் உண்டு .மேற் குறிப்பிட்ட எல்லா ஆலயங்களிலும் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உண்டு .
(திண்டிவனம் பாண்டிச்சேரி மார்க்கத்தில் பயணம் செய்பவர்கள் பயண வழியில் திண்டிவனம் அடுத்த மயிலம் முருகன் கோவில் – திருவக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வக்ரகாளி கோவில் மற்றும் ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் கோவில் தரிசனம் செய்து போகமுடியும். சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் நவகிரகங்கள் ம். வக்ர செவ்வாய் வக்ர குரு வக்ர சனி என்று வக்ர கதியில் இருக்கும். இதை தரிசனம் செய்ய நமது ஐனன ஜாதகத்தில் இருக்கும் வக்ர கிரகம் கெடு பலன்கள் மறையும் .
மேலும் பாண்டிச்சேரி நகருக்கு முன்பாக இடது புறம் 2 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சவடி இருக்கிறது . அங்கு நின்ற கோலத்தில் ஸ்ரீபஞ்சமுக ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. ராமர் சேது பாலம் கட்ட பயன்படுத்திய அபூர்வமான மிதக்கும் கல் சிறப்பு தரிசனமாக ஒரு சிறிய பித்தளை அண்டாவில் வைத்து ஆஞ்சநேய சுவாமியின் முன் வைக்கப்பட்டிருக்கிறது .அதை தரிசனம் செய்து வருவது நமக்கு திருப்பு முனையாக அமையும் . இந்த ஆலயத்தில் இருக்கும் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவில் மற்றும் ஸ்ரீ ராம பாதம் தரிசனம் அளவற்ற நன்மை தரும் .
குறுநில பகுதிகள் பல்வேறு மன்னர்கள் ஆட்சியில் பல சிற்றரசுகளாக இருந்த காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல நூற்றாண்டு இடைவெளிகளில் கட்டப்பட்ட இந்த மூன்று நரசிம்மர் கோவில் கடன் புவி வட்ட பாதையில் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது நம் முன்னோர்கள் திட்டமிட்ட செய்யலாம் அல்லது இறைவனின் திருஉள்ளமா என்பதை நம் ஆன்மீகத்தின் ஆழ்ந்த பலத்தையும் நம் முன்னோர்களின் புவியியல் கட்டிடக்கலை சார்பில் இருந்த நுண்ணறிவையும் சமகாலத்தில் வெளிப்படுத்தும் சாட்சியங்கள் என்றால் அது மிகையல்ல.
மேலே குறிப்பிட்ட மூன்று நரசிம்மர் கோவில்களும் சுவாதி நட்சத்திரம் மற்றும் ஏகாதசி நாளில் மிகுந்த கூட்டம் இருக்கும் .அதனால் அந்த நாட்களில் தரிசனம் செய்யப் போகும்போது இந்த மூன்று கோவில்களை மட்டும் தரிசனம் செய்யும் வகையில் பிரயாண திட்டமிட்டு கொள்ளவும் . சுவாதி நட்சத்திரம் ஏகாதசி தவிர்த்த மற்ற சாதாரண நாட்களில் போகும்போது இதர கோவில்களையும் தரிசித்து வர முடியும் .மூன்று கால வேளைகளில் மூன்று நரசிம்மரை தரிசனம் செய்து வருவோம். கடன் நோய் பகை என்னும் முப்பிணி நீங்கி சகல சௌபாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வோம் .
ஸ்ரீ உக்ர நரசிம்ம ஸ்வாமி சரணம்
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி சரணம்
ஸ்ரீ தேவி மஹாலக்ஷ்மி சரணம்