சிவகங்கை மாவட்டத்தில் நடந்த தி.மு.க. சாதனை விளக்கக் கூட்டத்தில் மக்கள் சாரை சாரையாக வெளியேறியதால், கூட்டம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள மு.சூரக்குடியில் நேற்று இரவு தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன்தான் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர். எனவே, இவரது தீவிர ஆதரவாளரும், நகர அவைத்தலைவருமான சிவக்குமாரின் சொந்த ஊர் என்பதால், குவார்ட்டர், கோழி பிரியாணி, 500 ரூபாய் பணம் என வெயிட்டாக கவனித்து மக்களை அழைத்து வந்து கூட்டத்தில் மாஸ் காட்டினார்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி வரவழைக்கப்பட்டிருந்தார். சுமார் 8.30 மணியளவில் தமிழரசி தனது பேச்சைத் தொடங்கியதுதான் தாமதம், மக்கள் எழுந்து சாரை சாரையாக வெளியேறத் தொடங்கினார்கள். இதனால், கூட்டத்தில் இருந்த சேர்கள் அனைத்தும் காலியாகி வெறிச்சோடி காணப்பட்டது. இதைக் கண்ட கூட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவர், எம்.எல்.ஏ. பேசிக் கொண்டிருக்கும்போது, இப்படி மக்கள் வெளியேறுவது சரியானது இல்லை. ஆகவே, அனைவரும் வந்து இருக்கையில் அமருங்கள் என்று கெஞ்சாத குறையாகக் கேட்டுக் கொண்டார். ஆனாலும், மக்கள் காதில் வாங்காமல் நடையைக்கட்டினர். இதனால் அதிருப்தியடைந்த தமிழரசி சில நிமிடங்களிலேயே தனது பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறினார்.
ஆக மொத்தத்தில் தி.மு.க.வின் சாதனையை கேட்க ஆளில்லை. இருந்தால் தானே கேட்பதற்கு என்று மக்கள் கிண்டலடிக்கிறார்கள்.