சிக்னல் காட்டிய ‘திராவிட’ சபாநாயகர்: கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

சிக்னல் காட்டிய ‘திராவிட’ சபாநாயகர்: கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!

Share it if you like it

சட்டசபையில் நேற்று கவர்னருக்கு எதிராக நடந்த நிகழ்வுகள் அனைத்தும், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டவை என்பது சபாநாயகரின் சிக்னல் மூலம் அம்பலமாகி இருக்கிறது.

நிகழாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. கவர்னர் வாசிக்க வேண்டிய உரை, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுத் தரப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவர்னருக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், கவர்னர் தனது உரையை தமிழிலேயே வாசித்தார். அப்போது, அந்த உரையில் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படும் திராவிட மாடல், பெரியார், அண்ணா, கருணாநிதி உட்பட பல்வேறு வார்த்தைகளை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் ஸ்கிப் செய்து விட்டுச் சென்றார். அதேபோல, உரையில் இடம்பெறாத ஒளவையார், பாரதியார் உள்ளிட்ட சில வார்த்தைகளை சேர்த்து பேசினார். இதனால், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். அவையிலேயே கவர்னருக்கு எதிராக கத்தி கூச்சல் போட்டனர். மேலும், கவர்னர் உரை முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் எழுந்து, கவர்னர் உரையில் இடம்பெற்ற வாசகங்கள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும். கவர்னர் கூடுதலாக பேசிய வார்த்தைகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என்று கூறினார்.

இதையடுத்து, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் கவர்னர் ரவி. பின்னர், கவர்னர் உரையில் இடம்பெற்றிருந்த வார்த்தைகளை கவர்னர் ஏன் படிக்கவில்லை என்பது தொடர்பாக, கவர்னர் மாளிகை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், வீரம், வீரியம் பொருந்திய திராவிட மாடல் ஆட்சி என்பது உள்ளிட்ட தமிழக அரசை புகழ்வது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இவற்றை நீக்கும்படி கவர்னர் கூறியிருந்தார். ஆனால், உரை அச்சுக்குப் போய்விட்டதாகவும், அவையில் பேசும்போது மாற்றிக் கொள்ளலாம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படிதான், கவர்னர் மேற்கண்ட சர்ச்சைக்குரிய வார்த்தைகளை தவிர்த்து விட்டு பேசினார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டமன்ற மரபை மீறி, கவர்னருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தது தவறு. ஆகவே, அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாகவும் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், நேற்று சட்டமன்றத்தில் கவர்னர் ரவிக்கு எதிராக நடந்த நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பது ஒரு வீடியோ மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. ஆம், அந்த வீடியோவில் சபாநாயகர் அப்பாவு சிக்னல் காட்டுவதும், இதைத் தொடர்ந்து தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு எதிராக கூச்சலிடுவதும் தெள்ளத்தெளிவாக பதிவாகி இருக்கிறது. அதாவது, கவர்னர் உரை, தமிழக அரசு மூலம் கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதை படித்துப் பார்த்த கவர்னர், சில திருத்தங்களை செய்யுமாறு தெரிவித்திருக்கிறார். இத்தகவல் கவர்னர் மாளிகை மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேற்படி உரை அச்சுக்கு சென்று விட்டதால், பேசும்போது மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். எனவே, உரையில் நீக்கப்பட வேண்டிய மற்றும் மாற்றப்பட வேண்டிய வார்த்தைகளாக கவர்னர் தரப்பில் கூறப்பட்ட வார்த்தைகளை கவர்னர் கண்டிப்பாக படிக்க மாட்டார் என்பதை தி.மு.க. தரப்பினர் உறுதி செய்திருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, கவர்னருக்கு எதிராக என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்திருக்கிறார்கள். அப்போது உதயமானதுதான் கவர்னருக்கு எதிராக கூச்சலிடுவது மற்றும் தீர்மானம் கொண்டு வருவது என்கிற திட்டம். அதுவும் தாங்களாக கூச்சலிடக் கூடாது. எப்போது சபாநாயகர் சிக்னல் கொடுக்கிறாரோ அப்போதுதான் கூச்சலிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றும் மேலாக, ஸ்டாலினால் துண்டுச் சீட்டு இல்லாமல் ஒரு வரிகூட பேச முடியாது என்பது தமிழக மக்கள் நன்றாக அறிந்த விஷயம்தான். அப்படி இருக்க, ஒரு தீர்மானத்தை ஸ்டாலினால் எப்படி துண்டுச் சீட்டு இல்லாமல் வாசிக்க முடியும். ஆகவே, ஸ்டாலினுக்குரிய தீர்மானத்தையும் ரெடியாக பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். எதிர்பார்த்தபடியே சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கவர்னர் தவிர்த்து விட்டு படித்தார். அப்போது, சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களை பார்த்து சிக்னல் காட்டுகிறார். உடனே, எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்புகிறார்கள். அதேபோல, கவர்னர் பேசி முடித்ததும், ஸ்டாலின் எழுந்து ஒரு தீர்மானத்தை வாசிக்கிறார். ஆகவே, எல்லாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்திருக்கிறது.

ஆனால், இதன் மூலம் தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்தித்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இதுவரை எந்த மாநிலத்திலும் கவர்னர் உரைக்கு எதிராக யாரும் தீர்மானம் கொண்டு வந்தது கிடையாது. குறிப்பாக, கவர்னரும் முதல்வரும் கீரியும் பாம்புமாக இருக்கும் கேரளா மற்றும் மேற்குவங்கம், தெலங்கானா மாநிலங்களில் கூட கவர்னர் உரைக்கு எதிராக எந்த முதல்வரும் தீர்மானம் கொண்டு வந்தது கிடையாது. அதேபோல, கவர்னர் உரைக்கு எதிராக எந்த மாநிலத்தின் சட்டமன்றத்திலும் எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டது கிடையாது. அவ்வளவு ஏன், தமிழகத்தின் கவர்னராக சென்னாரெட்டி இருந்தபோது, அவரை தங்களது கைப்பாவையாக வைத்துக் கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க. என்னவெல்லாமோ செய்தது. அப்படி இருந்தும், கவர்னருக்கு எதிராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இப்படியெல்லாம் கத்தி கூப்பாடு போடவில்லை. அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை.

அப்படி இருக்க, இதுபோன்ற சம்பவங்கள் தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறி இருப்பது இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படும். அதோடு, ஸ்டாலின் தான் ஒரு முதிர்ச்சியற்ற முதல்வர் என்பதையும் இச்சம்பவத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். இது தமிழகத்துக்கு தலைகுனிவே தவிர, சட்டமன்றத்தில் புதிய வரலாறு படைத்து விட்டதாக தி.மு.க. அண்கோ கம்பெனி மார்தட்டிக் கொள்ளும் அளவுக்கு தகுதியான சம்பவம் அல்ல என்பதே நிதர்சனம். மேலும், இதுபோன்றதொரு சம்பவம் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால், இதே ஸ்டாலின் இச்சம்பவத்தை வைத்து இந்நேரம் எப்படி எல்லாம் அரசியல் செய்திருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால் புரியும். இது ஒருபுறம் இருக்க, சபாநாயகர் அப்பாவு சிக்னல் காட்டும் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு தி.மு.க.வின் திட்டமிட்ட நாடகத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்களே தவிர, ஸ்டாலின் செயல்பாடுகளை யாரும் பாராட்டவில்லை.


Share it if you like it