அப்படிச் சொன்னாரா அண்ணாமலை? என்னதான் நடந்தது..!

அப்படிச் சொன்னாரா அண்ணாமலை? என்னதான் நடந்தது..!

Share it if you like it

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்து விடுவேன் என்று பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், உண்மையில் அண்ணாமலை அப்படிச் சொன்னாரா? கூட்டத்தில் என்னதான் நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் காந்தி, வானதி சீனிவாசன், சரஸ்வதி, நைனார் நாகேந்தின் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில்தான் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடுவேன் என்று அண்ணாமலை பேசியதாக தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.

அதேபோல, அண்ணாமலையின் இப்பேச்சு தேவையில்லாதது. கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டியது அகில இந்திய தலைமைதான் என்று வானதி சீனிவாசன் பேசியதாகவும் செய்திகள் அரசல்புரசலாக அடிபடுகின்றன. தவிர, அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று நயினார் நாகேந்திரன் கூறியதாகவும் செய்திகள் உலா வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணாமலை பேச்சுக்கு துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில், கூட்டத்தில் என்னதான் நடந்தது? அண்ணாமலை என்னதான் பேசினார்? என்று கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அப்போது அவர்கள் கூறுகையில், “தமிழ்நாட்டில் நாம் தனியாக போட்டியிட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்” என்றுதான் அண்ணாமலை கூறினார். மற்றபடி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அவர் கூறவில்லை என்றார்கள்.

தொடர்ந்து, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். “அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியதாக வரும் செய்திகள் தவறானது” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார். புரளி எப்புடியெல்லாம் பரவுது பாருங்க மக்களே!


Share it if you like it