தி.மு.க. அமைச்சர்களுக்கு வந்த சோதனை: செம்மண் திருட்டு… பொன்முடி மனு தள்ளுபடி!

தி.மு.க. அமைச்சர்களுக்கு வந்த சோதனை: செம்மண் திருட்டு… பொன்முடி மனு தள்ளுபடி!

Share it if you like it

செம்மண் திருட்டு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

2006-11 தி.மு.க. ஆட்சி காலத்தில், கனிமவளத்துறையை கூடுதல் பொறுப்பாக அமைச்சர் பொன்முடி கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தற்போதைய எம்.பி.யுமான கௌதம சிகாமணி மற்றும் அவர்களது உறவினர்கள் பெயர்களில் 5 இடங்களில் செம்மண் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இந்த குவாரிகளில் 20 அடி ஆழத்துக்கு செம்மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 70 அடி ஆழத்துக்கு செம்மண் எடுத்திருக்கிறார்கள். மேலும், பட்டா இடத்தில் மட்டும் செம்மண் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், பொறம்போக்கு இடத்திலும் செம்மண்ணை திருடி இருக்கிறார்கள்.

இந்த சூழலில், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பொன்முடி மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக, பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியை, வானூர் தாசில்தார் ஆய்வு செய்தார். அப்போது, சதானந்தம் என்பவர் சிலருடன் வந்து, குவாரிகள் எல்லாம் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சொந்தமானது எனக் கூறி, அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வானூர் தாசில்தார் போலீஸில் புகார் செய்தார். அப்புகாரில், நிபந்தனைகளை மீறி மணல் எடுத்ததால், அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, பொன்முடி, கவுதமசிகாமணி, உறவினர் ராஜா மகேந்திரன், குவாரிகளின் மேலாளர் சதானந்தம் உள்ளிட்ட 5 பேர் மீது கனிமவளச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, மேற்கண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரியும், செம்மண் திருட்டு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்களாக உள்ளதாக கூறி, அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கெனவே, லஞ்சம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிக்கித் தவித்து வரும் நிலையில், தற்போது பொன்முடியும் வழக்கில் இருந்து விடுபட முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறார்.


Share it if you like it