முகநூலில் தொடர்ந்து ஹிந்து மதம் பற்றி அவதூறு… அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.!

முகநூலில் தொடர்ந்து ஹிந்து மதம் பற்றி அவதூறு… அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க.!

Share it if you like it

ஹிந்து மதம் பற்றியும், ஹிந்து கடவுள்கள் பற்றியும் முகநூலில் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பா.ஜ.க.வினர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் புவனா கோபாலன். இவர், ஹிந்து மதம் பற்றி முகநூலில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்திருக்கிறார். உதாரணமாக, தமிழ்த் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருபவர் விடுதலைச் சிகப்பி என்கிற விக்னேஸ்வரன். இவர், நீலம் பண்பாட்டு மையம் சார்பில், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி சென்னை ஆர்.ஏ.புரம் முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கில் நடந்த இலக்கிய விழாவில், ‘மலக்குழி மரணம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை வாசித்தார். அக்கவிதையில், ஹிந்து கடவுள்களான ராமர், லட்சுமணர், ஹனுமான், சீதா பிராட்டி ஆகியோரை மலம் அள்ளும் கூலித் தொழிலாளர்களாக சித்தரித்து வரிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழவே, விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில், இக்கவிதைக்கு வக்காலத்து வாங்கும் வகையிலும், விடுதலை சிகப்பி மீதான வழக்குப் பதிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ஹிந்துக் கடவுள்களை அவதூறு செய்யும் வகையிலும் தனது முகநூலில் பதிவுகளை வெளியிட்டார். அப்பதிவில், “குகன் தந்தை மீனை அவன் மனம் நோகாமல் இருக்க, அதை வாங்கி உண்டு மகிழ்ந்த ராமன், லட்சுமணன், சீதையை எண்ணி பெருமை கொள்ளும் ஹிந்துக்கள், அதே ராமன் குடும்பம் தங்களது பக்தர்களுக்காக சாக்கடையில் இறங்கியதை எண்ணி சந்தோஷப்பட வேண்டாமா?” என்றும், “ஆமா, நாளைக்கு ராமன், லட்சுமணன் என்கிற பெயரில் ரெண்டு பேர் சாக்கடை அடைப்பு எடுக்க வந்து, அந்த ராமனின் மனைவி பெயர் சீதாவாக இருந்தால் இந்த இந்து பக்தர்கள் அவங்க கால்ல விழுந்து கும்பிட்டு பாதபூஜை செய்வாங்க” என்றும் கிண்டல் செய்திருந்தார்.

இதையடுத்து, தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க.வினர், மேற்கண்ட ஆசிரியை புவனாவின் பதிவுகளை டேக் செய்து, அவரது போட்டோவும் போட்டு, விடுதலைச் சிகப்பி வழக்கில் இவரையும் சேர்க்க வேண்டும் என்றும், இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு என்ன லட்சணத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து பதிலடி கொடுத்திருந்தனர். இதைக் கண்டு அரண்டுபோன ஆசிரியை புவனா, வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சாக்கோட்டை சதீஸ்குமாருக்கு போன் செய்து, எப்படி எனது படத்தை போடலாம் என்று குமுறி இருக்கிறார். இதற்கும் சதீஸ்குமார் தக்க பதிலடி கொடுத்ததோடு, அந்த ஆடியோவையும் வெளியிட்டிருக்கிறார். இது பா.ஜ.க.வினர், ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் மத்தியில் வைரலாகப் பரவி, பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Share it if you like it