தஞ்சாவூரைச் சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் அலுவலகத்துக்கு அவதூறு இ-மெயில் அனுப்பியதால் கைது செய்யப்படவில்லையாம். சிறுமிகளின் ஆபாச படங்களை வெளிநாட்டுக்கு விற்று பணம் சம்பாரித்து வந்ததால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகேயுள்ள பூண்டித்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. எம்.காம். பட்டதாரியான இவர், சூழலியல் சுற்றுலா தொடர்பான முனைவர் பட்டத்துக்காக (பிஹெச்.டி.) ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர், பாரம்பர்ய நெல் ரகங்களையும் பயிரிட்டு வந்திருக்கிறார். விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்திருக்கிறார். இந்த சூழலில், கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. டி.எஸ்.பி. சஞ்சய் கெளதம் தலைமையிலான 11 பேர் கொண்ட டீம், விக்டர் ஜேம்ஸ் ராஜாவை விசாரணைக்காக அழைத்துச் சென்றது.
அப்போது, பிரதமர் அலுவலக இ-மெயில் ஐ.டி.க்கு, பிரதமர் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் விக்டர் ஜேம்ஸ் ராஜா இ-மெயில் அனுப்பியதாகவும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், விசாரணைக்குப் பிறகு விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பிறகு, விசாரித்தபோதுதான், விக்டர் ஜேம்ஸ் ராஜா குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, சிறுமிகளின் புகைப்படங்களை விக்டர் ஜேம்ஸ் ராஜா மார்பிங் மூலம் ஆபாசமாக சித்திரித்து வீடியோ பதிவு செய்து இணையதளம் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பி விற்றிருக்கிறார். மேலும், சில சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, அவற்றையும் மார்பிங் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்திருக்கிறார். இதை சி.பி.ஐ.யின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்து விட்டார்கள். இதைத் தொடர்ந்தே, டெல்லியிருந்து சி.பி.ஐ. போலீஸார் தஞ்சாவூருக்கு வந்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவை கைது செய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்கிற உண்மை தெரிவந்தது.
ஏற்கெனவே திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த ராஜா என்கிற வாலிபர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றி வெளிநாட்டுக்கு விற்றது அம்பலமாகி, இன்டர்போல் போலீஸார் தகவலின் பேரில் டெல்லியிலிருந்து சி.பி.ஐ. போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். இந்த சூழலில், தற்போது தஞ்சாவூரைச் சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா, அதேபோல சிறுமிகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து சி.பி.ஐ. போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.