தவத்திரு சுவாமி சகஜானந்தர் பிறந்த நாள்

தவத்திரு சுவாமி சகஜானந்தர் பிறந்த நாள்

Share it if you like it

தவத்திரு சுவாமி சகஜானந்தர் பிறந்த நாள்

1890 ஆம் ஆண்டு, ஜனவரி 27ஆம் நாள், தமிழகத்தின் வட ஆற்காடு மாவட்டம், ஆரணியிலிருந்து காஞ்சி மாநகரம் நோக்கிச் செல்லும் வழியிலுள்ள மேல்புதுபாக்கம் என்ற சிற்றூரில் வாழ்ந்த அண்ணாமலை – அலமேலு என்னும் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தார். தாய் தந்தையரால் “முனுசாமி” என்ற பெயரிடப்பட்டு வளர்க்கப் பட்டு வந்தார்.

சொந்த ஊரிலிருந்த ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் தேர்வு பெற்ற பின்னர், முனுசாமி உயர்கல்விக்காக, திண்டிவனம் நகரிலிருந்த அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவச் சமயத்தவர் நடத்தி வந்த உயர்நிலைப் பள்ளியில், 1901 இல் ஆறாவது வகுப்பில் சேர்ந்தார். இவரது அறிவாற்றலைக் கண்டு மகிழ்ந்த ஆசிரியர்களான பாதிரியார்கள், பெற்றோர்கள் இட்ட இயற்பெயரான முனுசாமி என்ற பெயரை மாற்றி “சிகாமணி” என்று அழைத்து வந்தனர்.

பைபிளை மனப்பாடம் செய்து ஒப்பித்தலை, கிருஸ்துவ சிறுவனை விஞ்சி விடுவதைக் கண்ட பாதிரியார்கள் அவரை பாராட்டினர். பைபிள் மேற்படிப்பு படிக்க அமெரிக்காவிற்குத் தங்கள் சொந்தச் செலவில் அனுப்ப முயற்சித்தனர். இந்து சமயக் கொள்கையும், வழிபாட்டு முறையும் இவரது மனதில் ஆழமாகப் பதிந்ததால், கிருஸ்துவச் சமயத்தைப் பின்பற்றி, பைபிள் படிப்பிற்குச் செல்ல மறுத்து விட்டார். அதனால், இவரைப் பள்ளியை விட்டு, நீக்கி விட்டனர்.

கிருஸ்துவ மதம் தழுவ மறுத்தது, தமிழக பட்டியலின மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட வரலாற்று திருப்பு முனையாகும். முனுசாமி கிருஸ்துவ மதத்தில் சேர மறுத்ததால், அவருக்கு 1903 ம் ஆண்டில் விடுதிக்குச் செலவான ரூ.60, அவரது தந்தையிடமிருந்து கட்டாயப் படுத்தி, அப்பள்ளி நிர்வாகிகள் வசூலித்தனர் என்பதை, 03.09.1946 ஆம் தேதி, சட்டமன்றப் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

கோலார் தங்க வயலில் பெற்றோருடன் இருந்த காலகட்டத்தில், பெரியோர்களின் ஆன்மீகச் சொற்பொழிவுகள் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பயனாக 1908 ஆம் ஆண்டு, சிவபிரகாச சுவாமிகளிடம் ஈடுபாடு கொண்டு, துறவறம் மேற்கொண்டார். “சகஜானந்தர்” என்ற நாமகரணம் பெற்று, ஆசிரம தர்மத்தை மேற்கொண்டார்.
சிதம்பரத்துக்கு வந்த சுவாமி சகஜானந்தர் அங்கே ஒரு மடத்தை நிறுவ விரும்பினார்.அங்கிருந்த ஆன்மீகவாதிகளையும், வள்ளலாரின் வழியை ஏற்றுக் கொண்டிருந்த சில சன்னியாசிகளையும் அணுகி, தனது விருப்பத்தைத் தெரிவித்தார். நந்தனாரை தனது முன்னோடியாக எடுத்துக் கொண்ட சகஜானந்தர், நந்தனாரின் பெயரில் மடம் ஒன்றையும், கல்விச்சாலை ஒன்றையும் ஏற்படுத்த முடிவெடுத்து, 1916 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி, “நந்தனார் கல்விக் கழகம்” என்பதை நிறுவினார். இதனிடையே அவருக்கு நாட்டுக்கோட்டை செட்டியார்களின் நட்பு கிடைத்தது. அவர்களின் ஆதரவில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை முதலான நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கெல்லாம் சைவச் சமயப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தப் பயணம் அவருக்கு உலகமெங்கும் அறிமுகத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அவர் உருவாக்க நினைத்த மடத்துக்கும், கல்விச்சாலைக்கும் நிதியுதவியைப் பெறுவதற்கு உதவியாகவும் அமைந்தது.

சுவாமி சகஜானந்தர் துவக்கிய நந்தனார் கல்விச்சாலையில், முதலில் 25 மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். அது ஒரு கூரைக் கொட்டகையில் நடந்து வந்தது. அதன் பிறகு 1918 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு, அப்போது சென்னை மாகாண உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் சதாசிவ அய்யரால் அடிக்கல் நாட்டப் பட்டது.

சுவாமி சகஜானந்தர் அவர்கள், 1926 ஆம் ஆண்டு சென்னை மாகாணச் சட்டமேலவைக்கு நியமன உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1932 ஆம் ஆண்டு வரை, அந்தப் பதவியை வகித்தார். அதன் பிறகு, 1936 முதல் 1947 வரை, மீண்டும் அவர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு சேவையாற்றினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947ல், சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். அது, 1959 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி, அவர் காலமாகும் வரை தொடர்ந்தது.

ஏறக்குறைய 34 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார். தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பட்டியல் சமுதாய மக்களுக்கு உரிமைகளையும் நிவாரணங்களையும் பெற்றுத் தந்தார்.

சுவாமி சகஜானந்தர் அவர்களால் உருவாக்கப்பட்ட நந்தனார் பள்ளி இன்று தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நிர்வகிக்கப் படுகிறது. ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்றென இரண்டு மேல்நிலைப் பள்ளிகளாக அது வளர்ந்துள்ளது. அந்தப் பள்ளிகளில் உள்ள விடுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிக் கல்வி பயின்று வருகிறார்கள்.
தான் மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக இருந்த போது, சுவாமி சகஜானந்தர் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கிறார். கல்வியே செல்வம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்த சுவாமி சகஜானந்தர், அந்தக் கல்வியின் பலன் பட்டியலின மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் மேலவையிலும், பேரவையிலும் பேசியவற்றில் அதிகமாகக் கல்வியைப் பற்றியே வலியுறுத்தி வந்திருக்கிறார்.

சுவாமி சகஜானந்தர் அவர்கள் ஒரு ஆன்மீக வாதி மட்டுமல்லாமல், தமிழில் சிறந்த புலமை கொண்டு இருந்தவரும் கூட. சமஸ்கிருதத்திலும், அவருக்கு நல்ல பயிற்சி இருந்தது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சீனுவாசாச்சாரியிடம், சமஸ்கிருதத்தைப் பயின்றதாகத் தெரிகிறது. வ.உ.சி. எழுதிய நூல்களுக்குச் சுவாமி சகஜானந்தர், சிறப்புப்பாயிரம் அளித்துள்ளார். இது அவரது தமிழ்ப் புலமையையும், அதற்கு இருந்த அங்கீகாரத்தையும் எடுத்துக் காட்டுகிறது. வ.உ.சி. மறைந்த போது அவரது குடும்பத்துக்காக, சுவாமி சகஜானந்தர் அவர்களே முன்னின்று, நிதி திரட்டி அளித்தார்.

பட்டியல் சமுதாய மக்கள் எல்லா நிலைகளிலும், தமக்குரிய பங்கைப் பெற வேண்டும் என்று விடாமல் வலியுறுத்தியவர், கோயில்களில், தேவஸ்தானக் கமிட்டிகளில் பட்டியலின மக்களை உறுப்பினர்களாக்க வேண்டும் என வாதாடினார்.

சுவாமி சகஜானந்தர் இந்தி அவசியம் என்று பேசி உள்ளார். ‘‘எங்கள் பிள்ளைகளைப் பொறுத்த வரையில் எத்தனை பாஷையானாலும் படிக்கக் கற்றுக் கொள்வார்கள், நான் இப்பொழுது எங்கள் பிள்ளைகளுக்குச் சமஸ்கிருதப் புத்தகம் கொடுத்து, படிக்கச் சொல்லியிருக்கிறேன், எங்கள் ஜாதி முன்னேற்றமடைய வேண்டுமானால் எத்தனை பாஷை வேண்டுமானாலும் கற்றால் தான் முன்னேற்றமடைய முடியும், படிப்பில் ஹிந்தியைக் கட்டாயம் என்று வைத்திருக்கிறதை உத்தியோகத்திற்கும் கட்டாயம் என வைக்க வேண்டுமென்று யோசனை கூறுகிறேன். ஒவ்வொரு பிள்ளைகளும் ஹிந்தி முதலான பல பாஷைகளைப் படித்தால் தான் முன்னுக்கு வரமுடியும்’’ என்பது அவரது வாதம்.

ஆலயப் பிரவேசத்திற்குச் சகஜானந்தர் குரல் கொடுத்தார். தமிழ் மருத்துவத்தை, அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். தமிழ் முறையிலுள்ள மருந்துகளை தெரிந்து கொண்டு, அவைகளைக் கொடுத்துச் சிறந்த தமிழ் முறையில், வைத்தியம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தர், 1959-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார். இவருக்கு தமிழக அரசு சார்பில் அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் பள்ளிக்கு எதிரே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.


Share it if you like it