பயணிகளின் உயிரை காக்க திராவிட மாடல் சிறப்பு பஸ்!

பயணிகளின் உயிரை காக்க திராவிட மாடல் சிறப்பு பஸ்!

Share it if you like it

பயணிகளின் உயிரை காக்கும் வகையில், திராவிட மாடல் அரசு புதிய மாடல் பேருந்தை அறிமுகம் செய்திருக்கிறது என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் அவலநிலையை சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அனைவருமே அந்த துன்பத்தை அனுபவித்திருப்போம். நன்றாக சென்று கொண்டிருக்கும் பேருந்து திடீரென பாதி வழியில் நின்று விடும். பிறகு, பயணிகள் அனைவரும் கீழே இறங்கி பேருந்தை தள்ளி விட வேண்டும். அப்படியும் பேருந்து ஸ்டார்ட் ஆகா விட்டால் வேறு பேருந்தில் ஏற்றி விடுவார்கள். அந்தப் பேருந்தில் ஏற்கெனவே ஆட்கள் இருக்கைகளை ஆக்கிரமித்திருப்பார்கள். இதனால், நாம் நின்று கொண்டே செல்ல வேண்டும்.

அதேபோல, பாதி வழியில் பஸ் திடீரென பஞ்சராகி விடும். டிரைவரும், கண்டக்டரும் ஸ்டெப்னி டயரை கழற்றி மாட்டும் வரை வெயிலில் காத்துக் கிடக்க வேண்டும். இன்னும் சில பேருந்துகள் இருக்கின்றன. அவை வேற லெவலில் இருக்கும். அதாவது, மழை பெய்தால் போதும், குளித்துக் கொண்டே பயணம் செய்யலாம். அந்தளவுக்கு பஸ்ஸின் மேற்கூரை சேதமடைந்து பல்லை இளிக்கும். இது மட்டுமா, பஸ் சென்று கொண்டிருக்கும்போதே டயர் தனியாக கழன்று முன்னால் ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் நாம் தினசரி காணும் காட்சிகள்.

அந்த வகையில், பயணிகளின் உயிரை பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசு, புதிய மாடல் பேருந்தை அறிமுகம் செய்திருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் இந்த புதிய ரக பேருந்து அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, தென்காசியிலிருந்து புளியங்குடிக்கு அரசு புறநகர் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்தின் பின்பக்க படிக்கட்டில் படிகளே இல்லை. ஏறுவதாக இருந்தாலும், இறங்குவதாக இருந்தாலும் ஒன்று முன்பக்கமாக ஏறி, இறங்க வேண்டும் அல்லது சில பல வித்தைகளை காட்டி ஜம்ப் பண்ணி ஏறி, இறங்க வேண்டும்.

இப்பேருந்து தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டுத்தான், படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை உணர்ந்த திராவிட மாடல் அரசு, பயணிகள் படியில் பயணம் செய்து உயிரை விட்டுவிடக் கூடாது என்பதற்காக, படிக்கட்டு வைக்காமல் பயணிகளின் உயிரை காப்பாற்றும் வகையில், புதிய மாடல் பேருந்தை அறிமுகம் செய்திருக்கிறது என்று கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள்.


Share it if you like it