போலி பட்டா மாறுதல் செய்த வி.ஏ.ஓ. குறித்து ஆர்.டி.ஓ.வுக்கு புகார் அனுப்பியதோடு, தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர்களை தி.மு.க. நிர்வாகி தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆவுடையானூரில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வருபவர் செந்தூர்பாண்டியன். இவர், லோக்கல் தி.மு.க.வினருக்கு ஆதரவாக போலி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, தென்காசி கோட்டாட்சியர் கங்காதேவி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, தொடக்க வேளாண்மை வங்கியின் துணைத் தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான சுப்பிரமணியன் என்பவர், வி.ஏ.ஓ.வுக்கு ஆதரவாகப் பேசியதோடு, சமூக ஆர்வலர்களையும் தாக்க முயன்றார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.