“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்துக்கு, கேரள மாநிலத்திலுள்ள கத்தோலிக்க பாதிரியார்களின் உச்ச அமைப்பான கே.சி.பி.சி. முதன்முதலாக தனது ஆதரவை தெரிவித்து கருத்து வெளியிட்டிருக்கிறது.
இதுகுறித்து கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் (கே.சி.பி.சி.) செய்தித் தொடர்பாளர் பாதர் ஜேக்கப் பாலக்கப்பிள்ளி கூறுகையில், “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் செய்து வரும் அக்கிரமங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. இப்படத்தை ஒரு கலை படைப்பாகத்தான் பார்க்க வேண்டும். மதவாத பார்வையுடன் பார்க்கக்கூடாது. இப்படம் திரையிடப்படுவதற்கு பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அது ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை அக்கட்சிகள் அரசியல் ஆதாயத்துடன் அப்படி செய்யக் கூடும். குறிப்பாக, இடதுசாரிகள் கூட்டணியும் சரி, காங்கிரஸ் கூட்டணியும் சரி இரண்டுமே படத்தை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றன.
கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் ஓட்டு வங்கி அரசியல் இருக்கிறது. லவ் ஜிகாத் என்கிற பெயரில் பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸில் சேர்க்கும் சம்பவங்கள் கேரளாவில் நடக்கத்தான் செய்கின்றன. இதைத்தான் இப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதை பலர் ஏற்க மறுக்கின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை இஸ்லாம் மதத்தின் அடையாளம் என்பது போல, இப்படத்தில் காட்டவில்லை. காதலிப்பதாகச் சொல்லி திருமணம் செய்த பிறகு, ஒருவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்ற முயன்றால், அதை கத்தோலிக்க பிஷப் கவுன்சில் ஒரு போதும் ஏற்காது” என்று கூறியிருக்கிறார்.