பரிசுப் பொருட்கள் தருவதாகக் கூறி அழைத்து வந்து, கடையில் டீ, வடைக்கு டோக்கன் கொடுத்து அனுப்பியதால் பெரியகுளம் பகுதி மக்கள் தி.மு.க. எம்.எல்.ஏ. மீது கடும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியிலும், ஆத்திரத்திலும் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக, ஸ்டாலின் அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருகிறது. இது சமீபத்தில் இந்தியா டுடே நடத்தி கருத்துக் கணிப்பில் வெளிச்சத்துக்கு வந்தது. 60 சதவிகிதமாக இருந்த ஸ்டாலின் செல்வாக்கு 44 சதவிகிதமாக குறைந்து விட்டது. ஆகவே, தி.மு.க.வினரின் கூட்டத்துக்கு பொதுமக்கள் வருவதில்லை. ஆகவே, காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகிறார்கள்.
அந்தவகையில், செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி தாமஸ்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சியில், குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். எனவே, கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டுவதற்காக பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்திருந்தார் தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயச்சந்திரன். அதேபோல, தற்போது அண்ணாதுரை நினைவு நாளுக்கு பரிசுப் பொருட்கள் தருவதாகச் சொல்லி கூட்டத்தை கூட்டி இருக்கிறார் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர். ஆனால், பரிசுப் பொருட்களுக்கு பதில் டீ, வடையைக் கொடுக்க, குட்டு அம்பலமாகி இருக்கிறது.
அதாவது, மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் 54-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடந்தது. இதேபோல, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் அண்ணாதுரை நினைவுதினத்தை முன்னிட்டு, ஊர்வலமாகச் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணனும், பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்குத்தான் பரிசுப் பொருட்கள் தருவதாகச் சொல்லி கூட்டத்தை கூட்டி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. அதாவது, அண்ணாதுரையை பொறுத்தவரை, தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஆகவே, இரு கட்சியினரும் அண்ணாதுரை சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில், அதிக கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டுவது யார்? என்பதுதான் தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே நிலவிய போட்டி. பெரியகுளத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ்.ஸின் கோட்டை. ஆகவே, இங்கு தனது செல்வாக்கை காட்ட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன்.
இதையடுத்து, பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம், அண்ணாதுரை நினைவு நாளுக்கு பரிசுப் பொருட்கள் தருவதாகச் சொல்லி அழைத்து வந்திருக்கிறார்கள். இதை நம்பி, ஆண்களும் பெண்களும் என ஏராளமானோர் குவிந்து விட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும், தங்களுக்கு பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று நினைத்து மக்கள் ஆர்வமாக இருந்தனர். அதற்கேற்றார்போல், தி.மு.க. தரப்பில் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டிருக்கிறது. இதை வாங்கிப் பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி. காரணம், அது பரிசுப் பொருளுக்கான டோக்கன் இல்லை. டீ மற்றும் வடைக்கான டோக்கன். இதனால் அதிருப்தியடைந்த மக்கள், ஓகோ வாயில வடை சுடுறதுன்னு சொல்றது இதுதானோ என்று நொந்தபடியே, டீயையும் வடையையும் சாப்பிட்டுவிட்டு, தி.மு.க.வினரை திட்டித் தீர்த்தபடியே சென்றிருக்கிறார்கள்.