ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்ற செளமியா ரெட்டிக்கு திருமாவளவன் வாக்கு சேகரித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் போராடிய காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரித்து பிரசாரம் செய்ததற்கு தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. அந்த வகையில், இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதன் முடிவுகள் மே 13-ந் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதேபோல, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில், காங்கிரஸ் சார்பில் ஜெயநகர் தொகுதியில் போட்டியிடுபவர் செளமியா ரெட்டி. இவரை, ஆதரித்துதான் திருமாவளன் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இந்த, செளமியாதான் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுவிற்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று சட்டபோராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.