ஒரு சில ஆலயங்களை தரிசித்து வர மன அமைதி கிடைக்கும் .ஒரு சில ஆலயங்களை தரிசித்து வர நம்முடைய இடர்பாடுகள் அகன்று வாழ்வில் நிம்மதி கிடைக்கும். சில அபூர்வமான ஆலயங்களை தரிசனம் செய்யும் போது அது நம் வாழ்வில் ஒரு பெரும் திருப்பம் தரும். அந்த வகையில் ஒரு முறை தரிசித்து வந்தால் வாழ்வில் அடியோடு திருப்புமுனை தரவல்ல சக்தி வாய்ந்த ஆலயங்களில் திருவக்கரை வக்ரகாளி அம்மன் ஆலயம் நீங்கா இடம் பிடித்தது.
ஸ்தல புராணம்
சக்தி வழிபாட்டிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நம் பாரத மண்ணில் அவ்வப்போது நன்மைகளை உருவாக்குதல் காத்தல் என்ற ஷ்ருடியின் கர்த்தாவாகவும் தீமைகளை அழிக்கும் ஷ்ருடியின் நாயகி மகாசக்தி அவ்வப்போது எழுந்தருளி அதர்மம் அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவது நம் ஆன்மீகத்தின் தார்ப்பர்யம். அந்த வகையில் சக்தி வழிபாட்டிற்கும் உன்னதமான ஆன்மீகத்திற்கும் பெயர் போன தென் இந்திய நிலப்பரப்பில் தென்பெண்ணை ஆற்றின் கரைப் பகுதியில் அமைதியான சூழலில் தபோவனம் அமைத்து எண்ணற்ற ரிஷிகளும் முனிகளும் தவம் இயற்றி வந்தார்கள். இந்த ரிஷிகளின் முனிகளின் தவத்தை கலைப்பதும் அவர்களின் வேள்வி பூஜைகள் உலக நலன் வேண்டி செய்யும் ஹோமங்கள் உள்ளிட்டவற்றை கெடுத்து அதன் மூலம் தங்களின் எதிர்மறை சக்தியை அதிகரித்து மண்ணையும் மக்களையும் துன்புறுத்துவதையே இலக்காகிக் கொண்டிருந்தவன் வக்ரன் என்னும் அசுரன்.
அவனது தீமைகளும் அதன் மூலம் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களும் எல்லை மீறிய நிலையில் மண்ணையும் மக்களையும் காக்க ஆதி சக்தியான பார்வதி கொடும் சினமும் ஆங்காரமும் கொண்ட மகா சக்தியாக எழுந்தருளி வக்ராசுரனை வதைத்தாள். அசுரனை வதைத்த களைப்பு தீரவும் மனதில் உள்ள வன்மம் அகலமும் அங்கேயே தவம் புரிந்தாள். அந்த தவக்கோலத்தில் எழுந்தருளி ஆலயமாக நிலை பெற்று இன்றளவும் மக்களுக்கு கடன் நோய் பகை என்னும் துயர் துடைத்து வாழ்வில் நலமும் வளமும் மங்கலமும் சேர்க்கும் புண்ணிய ஷேத்திரமாக விளங்குவது திருவக்கரை வக்ரகாளியம்மன் ஆலயம்.
ஆலய அமைவிடம் – நடை திறப்பு
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் பாண்டிச்சேரி மார்க்கத்தில் திருவக்கரை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது.
திண்டிவனம் – பாண்டிச்சேரி – விழுப்புரம் – திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து நேரடியான போக்குவரத்து வசதி உண்டு.
காலை 8 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆலய நடை திறப்பு இருக்கும் அமாவாசை – பௌர்ணமி தினங்களில் நாள் முழுவதும் ஆலய நடை திறந்திருக்கும்.
சிறப்பு பூஜைகள் மற்றும் நேர்த்திக்கடன்கள்.
தமிழ் வருடப்பிறப்பு – ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமை உற்சவங்கள் – நவராத்திரி உற்சவம் – மகா சிவராத்திரி உற்சவம் – பிரதி அமாவாசை பௌர்ணமி – செவ்வாய்- வெள்ளி – ஞாயிறு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள் உண்டு . இதை தவிர கிரகண காலங்கள் , ராகு – கேது உள்ளிட்ட சர்ப்ப கிரகங்களின் பெயர்ச்சி காலங்களில் சிறப்பு விசேஷ பூஜைகள் உண்டு. அம்மனுக்கு அரளிப் பூக்கள் எலுமிச்சை வளையல் மற்றும் மஞ்சள் மாலை சாற்றுவதும் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவதும் சிறப்பு.
ஆலயத்தின் நவகிரக வரிசையில் சூரியன் – சந்திரன், ராகு – கேது தவிர்த்து கிரகங்கள் அனைத்தும் வக்ர செவ்வாய் பக்ர புதன் வக்ரகுரு வக்ர சுக்கிரன் வக்ரசனி என்று வக்கிர கிரகங்களாக இருப்பதன் காரணமாக ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் வக்கிரம் பெற்றவர்கள் இந்த ஆலயத்தை தரிசனம் செய்து வர வக்கிர பலன் குறையும் என்பது ஐதீகம்.
கடுமையான மன உளைச்சல் மன அழுத்தம் எதிர்மறை சக்தி – அமானுஷ்ய தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் திருமண தடை புத்திர தடை கல்வி வியாபாரம் உத்தியோகத்தடை கடன் பிரச்சனை என்று பெரும் சிக்கலில் இருப்பவர்கள் எல்லாம் இந்த ஆலயத்திற்கு அமாவாசை இரவில் வந்து தரிசனம் செய்து முழு இரவும் ஆலயத்தில் தங்கிப் போவது இன்றளவும் பெரும் பரிகாரமாக இருக்கிறது. அமாவாசை – பௌர்ணமி தினங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பெரும் மாநகரங்களில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு என்று சிறப்பு பேருந்து வசதிகளை செய்து கொடுப்பதும் உணவு உள்ளிட்ட இதர வியாபாரங்கள் பெருமளவில் குவிவதும் இருந்து இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதன் மகத்துவத்தையும் உணரலாம். தீவினைகளை அகற்றும் நன்மைகள் தரும் ஆலயமான வாழ்வில் திருப்பம் தரும் திருவாதிரை வக்கிர காளியை தரிசனம் செய்து தீவினை அகற்றி திருப்பம் பெறுவோம்.
ஓம் வக்ர காளி தேவி சரணம் சரணம் சரணம்