உதயநிதியின் சனாதன விரோத பேச்சு திமுகவில் வெடிக்கும் உள்குத்து அரசியல்

உதயநிதியின் சனாதன விரோத பேச்சு திமுகவில் வெடிக்கும் உள்குத்து அரசியல்

Share it if you like it

நேற்றைய தினம் திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் நடந்தது .விழாவில் திமுகவின் கட்சி தலைவரும் மாநில முதல்வருமான ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்கள். திமுகவின் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருப்பவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான டி ஆர் பாலு விழாவில் பேசும்போது உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு மாநாடு பங்கேற்பு அதன் பேச்சுக்கள் பற்றி அதிருப்தி தெரிவித்து பேசி இருக்கிறார் .

திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் மாநில அமைச்சர் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் என்று பல்வேறு பொறுப்பில் திமுகவின் அடுத்த தலைமை பொறுப்பிற்கான அடையாளமாக உடன்பிறப்புகள் கொண்டாடும் இளவரசராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். அவர் சில வாரங்களுக்கு முன்பு தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அவரின் சனாதன விரோத பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எதிர்ப்புகள் இருந்த நிலையில் அதற்கு உரிய விளக்கங்கள் அல்லது வருத்தம் தெரிவிக்காமல் நான் கலைஞரின் பேரன் இப்படித்தான் பேசுவேன். பெரியார் அண்ணா வழியில் வாழ்பவன். சனாதனத்தை ஒழிப்பது தான் எங்களின் இலக்கு. திமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கமே அதுதான். ஆட்சி போனாலும் கவலை இல்லை. சனாதன ஒழிப்பு தான் முக்கியம் என்று மேலும் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் படியாக பேசினார்.

நாடு முழுவதும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லா கட்சி மட்டத்திலும் தேசிய அரசியல் உட்பட பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய உதயநிதியின் இந்த பேச்சு ஐஎன் டி ஐஏ கூட்டணியில் இருப்பவர்களையே கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. நாடு முழுவதிலும் இருந்து உதயநிதியின் மீது கண்டனங்கள் விமர்சனங்கள் எழுந்தன. உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததோடு சட்ட நடவடிக்கை வேண்டும் என்று பேசினார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சனாதனத்துக்கு எதிரானவர்கள் பேச்சிற்கு கடுமையான பதிலடி தரப்படும் என்று எச்சரித்தார். உச்சகட்டமாக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது சனாதனிகளுக்கு எதிராக பெரும் சதிகளை செய்கிறார்கள். அவர்களிடத்தில் இருந்து சனாதனிகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று பேசினார். ஐஎன்டிஐஏ கூட்டணியை சனாதன எதிர்ப்பு கூட்டணி என்றும் அவர்கள் சனாதன தர்மத்தையும் அதன் மீதான மக்களின் நம்பிக்கைகளையும் சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்றும் பேசி ஐஎன்டிஐஏ கூட்டணியை ஒட்டுமொத்தமாக அதிர வைத்தார்.

உதயநிதியின் பேச்சும் அவரின் அடுத்தடுத்த ஆணவமான விமர்சனங்களும் அவருக்கு ஆதரவாக ஆ ராசா திருமாவளவன் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து சனாதன எதிர்ப்பு வழியில் பேசி வருவதும் தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பரவலாக போய் சேர்ந்திருக்கும் இந்த விவகாரம் திமுகவிற்கு தேசிய அளவில் ஒரு சனாதன எதிர்ப்பு கட்சி என்ற அடையாளத்தையும் பெற்று கொடுத்திருக்கிறது. திமுகவின் தேசிய அரசியல் கூட்டணியின் மத்தியில் பெருத்த எதிர்ப்பையும் அவ நம்பிக்கையையும் தேடிக் கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து சுதாரித்துக் கொண்ட ஐஎன்டிஐஏ கூட்டணி மத்திய பிரதேசம் போபாலில் நடக்க இருந்த மூன்றாவது ஒருங்கிணைப்பு கூட்டத்தையே ரத்து செய்து அமைதி காக்கிறது.

கூட்டணி கட்சி அரசியல் என்று எதுவாக இருந்தாலும் ஸ்டாலினிடம் நேரடியாக பேசும் வழக்கமுடைய காங்கிரஸ் கட்சி இளவரசர் ராகுல் காந்தி உதயநிதியின் இந்த சனாதன பேச்சு. அதன் மூலம் தேசிய அளவில் எழுந்திருக்கும் திமுக எதிர்ப்பு இவை எல்லாம் ஐஎன்டிஐஏ கூட்டணிக்கு எதிராக மாறிவரும் அரசியல் களம் என்று அனைத்தையும் முன்வைத்து தனது அதிருப்தியையும் வருத்தத்தையும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் தொலைபேசியில் அழைத்துப் பேசி அதை ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி பேசியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் திமுக வின் கழகப் பொருளாளரும் முன்னாள் மத்திய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தலைமை குடும்பத்திற்கும் மிக நெருங்கிய நபர் என்று அறியப்படும் டி ஆர் பாலு வேலூரில் நடந்த திமுகவின் முப்பெரும் விழா மேடையில் ஸ்டாலினின் முன்னிலையில் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சையும் அவரது செயல்பாடுகளையும் கண்டித்து பேசி இருப்பது திமுகவின் மேல்மட்டம் மத்தியில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசியலில் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதயநிதியின் பேச்சுக்கள் பொறாமை காரணமாக திரித்து கூறப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக பெரும் சர்ச்சைகள் எதிர்ப்புகள் வெடிக்கிறது என்று உதயநிதிக்கு பாதுகாப்பு தரும் தோரணையிலேயே மேலோட்டமாக டி ஆர் பாலு பேசினார் . ஆனால் சனாதன ஒழிப்பு என்ற பெயரில் டெங்கு மலேரியா கொசு என்று உதாரணம் காட்டி சனாதனத்தை இழிவு படுத்தி உதயநிதி பேசிய பேச்சு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதும் அது திமுகவிற்கு எதிராக பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கி இருப்பதையும் ஒரு மூத்த அரசியல்வாதியாக நாடாளுமன்ற உறுப்பினராக அவர் உள்வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடுதான் வெளிப்படையாக மேடையில் வைத்தே ஸ்டாலினின் முன்னிலையில் டி ஆர் பாலு உதயநிதியை அறிவுரை வழங்கும் விதமாக கண்டித்து பேசிய பேச்சின் வெளிப்பாடு இதுவே.

டி ஆர் பாலு கருணாநிதி காலம் முதல் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக கனிமொழியின் ஆதரவாளராக அறியப்படுபவர். கட்சியில் எந்த நிலையிலும் தவிர்க்க முடியாத பெரும் ஆளுமையாக எல்லா மட்டத்திலும் வலம் வருபவர். அப்படிப்பட்ட ஒருவர் நினைத்திருந்தால் உதயநிதியின் பேச்சு மீதான தனது அதிருப்தியை நேரடியாக உதயநிதியிடமும் தெரிவித்து இருக்க முடியும் .ஸ்டாலின் குடும்பத்திடமும் தெரிவித்து இருக்க முடியும். ஆனால் அதை அவர் பகிரங்கமாக பொது மேடையில் வைத்து பேசுகிறார் எனில் தலைமை குடும்பம் தங்களது போக்கில் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதர நிர்வாகிகளின் பேச்சுக்கள் கருத்துக்களை எதையும் காதில் வாங்கிக் கொள்ளும் இடத்தில் அவர்கள் இல்லை. இதன் காரணமாக வெறுத்துப்போன மூத்த நிர்வாகிகள் தங்களது எதிர்ப்புகளை விமர்சனங்களை இனி பொதுவெளியில் பேசுவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்து மேடையிலேயே வெளிப்படையாக பேசத் தொடங்கி விட்டதாகவே அரசியல் மட்டத்தில் பார்க்க படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஸ்டாலின் கட்சி அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லை. கட்சி நிர்வாகிகளை நேரடியாக பார்ப்பதோ பேசுவதோ ஆலோசிப்பதோ இல்லை . அந்த வகையில் எங்கு என்ன நடக்கிறது என்ற தகவல் நேரடியாக ஸ்டாலினுக்கு கிடைப்பதில்லை. ஸ்டாலினோடு மூத்த நிர்வாகிகள் நேரடியாக தகவல் தொடர்பிலும் ஈடுபட முடிவதில்லை . அந்த வகையில் பெரும் குழப்பங்கள் சர்ச்சைகள் நீடிக்கிறது . அவரை சுற்றிலும் ஒரு பெரிய இரும்புத்திரை நிலவுகிறது என்று கட்சியினர் மட்டத்தில் சமீப காலமாக பல்வேறு அதிருப்திகள் விமர்சனங்கள் வெளிப்பட்டு வந்தது. டி ஆர் பாலுவின் இந்த வெளிப்படையான மேடைப்பேச்சு அந்த தகவல்களை எல்லாம் உறுதிப்படுத்தும் விதமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் வெறும் சனாதன ஒழிப்பிற்காக மட்டும் உதயநிதியை டி ஆர் பாலு கண்டிக்கவில்லை. மாறாக தனது தந்தை ஸ்டாலின் தவிர வேறு எந்த ஒரு கட்சியின் நிர்வாகியையும் தலைமையையும் அவர் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை . இந்த போக்கு நல்லதல்ல. கட்சியின் மூத்த நிர்வாகிகள் தலைவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற வகையில் அறிவுரை வழங்கி டி ஆர் பாலு பேசியிருப்பதும் கவனிக்க தக்கது.

சமீப காலமாக திமுகவில் கனிமொழி உதயநிதி தரப்பால் திட்டமிட்டு ஓரம் கட்டப்படுவதாக சில செய்திகள் வெளியானது. அதில் அவருக்கு அதிருப்தி என்பதும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியிலேயே கட்சி சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட அவருக்கு உரிய அழைப்பு முன்கூட்டிய தகவல் பரிமாற்றமோ இல்லாமல் அவர் அவமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கனிமொழியின் ஆதரவாளராக அறியப்படும் டி ஆர் பாலு மேடையில் வைத்து உதயநிதியை இதர தலைவர்களை மரியாதை கொடுத்து அவர்களின் கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் தந்தையைத் தவிர வேறு யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டேன் கட்டுப்பட மாட்டேன் என்று இருக்கும் போக்கு சரியானது அல்ல என்று பேசியிருப்பது கட்சிக்குள் நடக்கும் ஒற்றை குடும்பம் ஒற்றை தலைமை என்ற சர்வாதிகார போக்கை அம்பலப்படுத்தும் சாட்சியமாகவே பார்க்க படும்.

உதயநிதியின் இந்த சனாதன ஒழிப்பு பேச்சு இன்று நேற்று வந்ததல்ல. அவர் பல காலமாகவே அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் இந்து மதத்தை வழிபாட்டு முறைகளை அவமதிக்கும் படி தான் பேசி வந்திருக்கிறார். அப்போதெல்லாம் யாரும் எந்தவிதமான அறிவுரையும் ஆலோசனையும் அவருக்கு வழங்கவில்லை. அல்லது வழங்கினாலும் அவர் அதைக் கேட்கவில்லை எனும் பட்சத்தில் இன்று வெளிப்படையாக பொது மேடையில் வைத்தே அவர் மீதான அதிருப்தி வெளிப்பட தொடங்கி இருக்கிறது. ஆனால் இன்று உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு வழக்கம் போல் உள்ளூர் மட்டத்தில் பாஜகவினர் இந்து அமைப்புகள் இரண்டு ஒரு நாட்கள் பேசிவிட்டு கடந்து போவார்கள் . நாம் நினைப்பது போல சிறுபான்மை மக்களை குளிர்வித்து அவரின் ஆதரவை பெற்று விடலாம் என்று நினைத்திருந்தார்கள். எதிர்பாராத விதமாக இந்த பேச்சு தேசிய அளவில் பேசும் பொருளானதும் நாடு முழுவதும் கொண்டு போய் சேர்க்கப்பட்டு திமுக எதிர்ப்பு அலைகள் உருவானதும் தான் திமுகவில் பதட்டம் எழுகிறது.

காரணம் திமுகவினருக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியும் திமுகவிற்கு தமிழகத்தில் கிடைக்கப்பெறக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் தான் திமுகவின் அடுத்த ஆண்டுகள் ஆட்சிக் காலத்தையும் அவர்களின் மீதான எதிர்ப்பு அரசியல் தனிப்பட்ட வழக்குகள் என்று பல்வேறு விஷயங்களுக்கு உதவியாக இருக்கும். என்ற வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி திமுகவிற்கு அவசியமாகிறது. அந்த வெற்றிக்காக எந்த எல்லைக்கும் போக தயாராக இருப்பவர்களுக்கு அவர்களது கட்சியின் இளவரசரே அந்த வெற்றிக்கு குழிப்பறிக்கும் வகையில் தேசிய அளவில் திமுக விற்கு பெரும் எதிர்ப்பையும் விரோதத்தையும் சம்பாதித்து கொடுத்திருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காததும் மாறாக அதை ஆதரித்து பேசியதும் கட்சியினில் மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இதுவரையில் இந்து தர்மத்தை இழிவாக தொடர்ந்து பேசி வரும் திமுகவின் ஆர் ராசா திருமாவளவன் உள்ளிட்ட யாரையுமே கண்டிக்காத டி ஆர் பாலு உதயநிதியின் பேச்சை மட்டும் கண்டித்து பேசுவதன் அர்த்தம் இதுவே. திமுக அதன் கூட்டணி கட்சி சார்ந்தவர்களோ இந்து தர்மத்தை எதிர்த்தோ பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ பேசுவதில் இவர்களுக்கு எந்த பிரச்சனை இல்லை. ஆனால் பேசும் விஷயம் சட்ட ரீதியான சிக்கலையோ கட்சிக்கோ ஆட்சிக்கோ ஆபத்து உருவாக்கும் விதமாகவோ மாறிவிடும் பட்சத்தில் அதற்கு இவர்கள் பதட்டப்படுகிறார்கள். அந்த வகையில் இந்து சனாதன விரோதம் என்ற வகையில் திமுகவினர் அனைவரும் ஒருமித்த வகையில் தான் செயல்படுகிறார்கள். ஆனால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் வரக்கூடாது என்ற அவர்களின் பதட்டம் மட்டுமே உதயநிதி மீதான எதிர்ப்பாக வெளிப்படுகிறது.

இன்று உதயநிதியின் பேச்சுக்கு மத விஷயங்களைப் பற்றி கவனமாக பேச வேண்டும் சிறு தவறு நடந்தாலும் அது பெரும் அசம்பாவிதங்களுக்கு வழி வகுத்து விடும் என்று தந்தை ஸ்தானத்திலிருந்து பேசுபவர் சிறுவயதிலிருந்தே நான் எடுத்து வளர்த்த குழந்தை என்று அறிவுரை சொல்பவர் இத்தனை காலம் உதயநிதியின் பேச்சை எப்படி ரசித்தார்?

சேது சமுத்திர திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்ததே ராமர் பாலத்தை தகர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் . அந்த வகையில் அந்த பாலத்தை தகர்க்க முயன்றதில் எங்களுக்கு திருப்தி தான் . மீண்டும் சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற பிரயத்தனப்படுவதும் அந்த ராமர் பாலத்தை முழுமையாக தகர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான். அரசியல் காரணங்களுக்காகத்தான் இதை செய்தோம் என்று வெளிப்படையாக பொது மேடையில் பேசும்போது இது இந்து மதத்திற்கு எதிரான பேச்சு பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை உணர்வுகளை புண்படுத்தும் பேச்சு மத துவேஷம் என்று டி ஆர் பாலு அறியாமலா பேசியிருப்பார். ?

ஆனால் அன்று அவர் பேசிய பேச்சு தமிழகத்தின் எல்லைகளை கடக்கவில்லை. தமிழகத்தில் கண்டனங்களோடு முடிந்துவிட்டது.அது தேர்தல் காலமும் இல்லை.அதனால் அதை பற்றி எந்த கவலையும் இல்லை. அவருக்கு பெரிதாக எந்த சட்ட சிக்கலும் இல்லை . அதனால் டி ஆர் பாலுவே அதை மறந்து விட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார் .

ஆனால் இது தேர்தல் காலம் . உதயநிதியின் பேச்சு நாடு முழுவதும் போய் சேர்ந்து விட்டது. பெரும் எதிர்ப்பும் கொந்தளிப்பும் வந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் உதயநிதி மீது வழக்கும் பதியப்பட்டு இருக்கிறது. இதையெல்லாம் மீறி தேசிய அரசியலில் தாங்கள் முழுமையாக நம்பி இருந்த ஐஎன்டிஐஏ கூட்டணியில் இருந்தே தங்களுக்கு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வருவது திமுகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த பின்னடைவுகளுக்கெல்லாம் காரணமான உதயநிதியின் பேச்சும் அவரின் செயல்பாடுகளும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.

ஏற்கனவே குடும்ப ஆதிக்கம் தலைமை குடும்பம் தவிர வேறு யாரும் உச்ச பதவிகளுக்கு வர முடியாத சூழல் என்ற எரிச்சலில் இருப்பவர்களுக்கு மொத்தமாக கட்சிக்கும் மூன்று விழா நடத்தும் விதமாக உதயநிதி தொடர்ந்து பேசுவதும் அவரை கண்டிக்க வேண்டிய முதல்வர் அதை ஆதரிப்பதும் உச்சகட்ட ஆத்திரத்தில் மூத்த நிர்வாகிகளை நிறுத்தி இருக்கிறது. திமுக என்ற ஒரு கட்சி பலமாக இருக்கும் வரையில்தான் நாமும் நமது அராஜகங்களும் தப்பி பிழைக்க முடியும். இந்த கட்சி வலுவாக இருந்தால் தான் இதுவரையில் செய்த குற்றங்கள் எதுவும் பெரிதாக பாதிக்காத வகையில் அதிகார தோரணடையுடன் வலம் வர முடியும். கட்சி காலாவதியாகும் பட்சத்தில் அல்லது அரசியல் பலம் இழந்து செல்லாக் காசாக ஆகும் பட்சத்தில் தங்களின் கதி என்னவாகும்? என்பதை கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் நன்கு அறிகிறார்கள் . அந்த நிலைக்கு தாங்கள் போவதை அவர்கள் விரும்பவில்லை. அதற்கு தேவையான சிக்கல்களை எல்லாம் உதயநிதி வலிய போய் உருவாக்குவதையும் அவர்கள் ரசிக்கவில்லை. அதனால் தான் நடப்பது நடக்கட்டும். வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிச்சலாக என்று உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சை மேடையிலேயே கண்டிக்கும் அளவில் வந்து நிற்கிறார்கள்.

ஆக சனாதன ஒழிப்பு எதிர்ப்பு சிறுபான்மை பாசம் என்பதெல்லாம் திமுகவினருக்கு ஒரு அரசியல் காரணம் மட்டுமே . வாக்கு வங்கி அரசியல் என்ற பெயரில் சிறுபான்மை வாக்குகளை மொத்தமாக கவர்ந்து ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் .அதன் மூலம் அதிகார கொள்ளையை தொடர வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். ஆனால் இதற்கெல்லாம் மூல காரணமாக இருக்கும் கட்சிக்கும் ஆட்சிக்குமே பங்கம் வரும் எனில் அதற்கு காரணமானது இந்து சனாதன ஒழிப்பு பேச்சு என்றால் அதையும் கண்டிக்க திமுகவினர் தயங்க மாட்டார்கள். அந்த வகையில் அவர்களின் பேச்சு எண்ணம் செயல்பாடு எல்லாமே அவர்களின் சுயநலம் அதிகாரம் மையமாக வைத்து தான். தவிர அதை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதன் வெளிப்பாடுதான் டி ஆர் பாலுவின் இந்த வெளிப்படையான பேச்சு. இதை திமுகவில் இருக்கும் நாங்களும் இந்துக்கள் தான் என்று சொல்லிக் கொள்பவர்களும் திமுக தான் சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி என்று நம்பிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் சிறுபான்மை மக்களும் புரிந்து கொண்டால் திமுகவின் அராஜகங்கள் முடிவுக்கு வரும். தமிழகத்தில் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் இல்லாத ஆரோக்கியமான அரசியல் களம் உருவாகும்.

வேலூருக்கு என்று ஒரு அரசியல் வரலாறு இருக்கிறது . வேலூரின் மண்ணில் பறக்கும் ஒரு சிறு பொறியும் தேசம் முழுமைக்குமாக காட்டு தீ போல பரவி பற்றி எரியும் . அதற்கு நிரந்தரமான ஒரு தீர்வை கொடுக்கும் வரலாறு வேலூருக்கு உண்டு . இது பாரதத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை உணர்ந்தவர்கள் யாவருக்கும் நன்கு அறிவார்கள் . அந்த வரிசையில் திமுகவின் சனாதன ஒழிப்பு கருத்துக்கள் பற்றிய பேச்சிற்கு அவர்களின் சொந்தக் கட்சியினரை எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டிக்கும் விதமான பேச்சு அவர்களின் கட்சி மேடையிலேயே வேலூரில் வைத்து அரங்கேறி இருப்பது பாரதத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தமிழகத்தின் எதிர்கால அரசியல் வரலாற்றுக்கும் தேவையான பிரளயங்களையும் ஆக்கபூர்வமான மாற்றங்களையும் நிச்சயம் முன்னெடுக்கும் என்று நம்புவோம்.


Share it if you like it