உத்தரப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 17 மாநகராட்சிகளையும் பா.ஜ.க. வாரிச் சுருட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சி வாஸ் அவுட் ஆனது.
உத்தரப் பிரதேசத்தில் 17 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள் மற்றும் 544 மாவட்ட பஞ்சாயத்துகள் காலியாக இருந்தன. இதையடுத்து, இதற்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 4 மற்றும் 11-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தன. மொத்தம் 4.32 கோடி வாக்காளர்கள் கொண்ட இம்மாநிலத்தில், 53 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில்தான் 17 மாநகராட்சிகளையும் வாரிச் சுருட்டி இருக்கிறது பா.ஜ.க. அதேபோல, ஏராளமான நகராட்சிகளையும், மாவட்ட பஞ்சாயத்தைகளையும் பா.ஜ.க.வே கைப்பற்றி இருக்கிறது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி டோட்டலாக வாஸ் அவுட் ஆகியிருக்கிறது. எனினும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் நகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளில் சில இடங்களை கைப்பற்றி இருக்கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பா.ஜ.க. ஆட்சியை இழந்தது. இது பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அதேசமயம், உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிந்த சம்பவம் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.