உலகிலேயே உயரமான நந்தி சிலை பணிகள் விறுவிறு!

உலகிலேயே உயரமான நந்தி சிலை பணிகள் விறுவிறு!

Share it if you like it

சேலத்தில் முத்துமலை முருகன் சிலையைத் தொடர்ந்து, உலகிலேயே உயரமான நந்தி சிலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் முத்துமலை முருகன் கோயில் அமைந்திருக்கிறது. இந்த முருகன் சிலையானது 146 உயரத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையாக அமைக்கப்பட்டிருக்கிறது. 2019-ம் ஆண்டு பணி தொடங்கி 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்கோயில் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட முருகன் சிலையை காண்பதற்காகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக, தைப்பூசம், பங்குனி உத்தரம் போன்ற சமயங்களில் இங்கு கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், அதே சேலம் மாவட்டத்தில் உலகத்திலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில், கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இச்சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கான பூமிபூஜை நடந்தது. அக்கிராமத்தைச் சோ்ந்த ராஜவேல் என்பவர், சிவ பக்தா்களின் ஒத்துழைப்போடு ராஜலிங்கேஷ்வா் சிவன் ஆலயம் மற்றும் 45 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கும் திட்டப் பணியை தொடங்கினார்.

மலேசியா நாட்டிலுள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்தவரும், சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம் பகுதியிலுள்ள முத்துமலை முருகன் சிலையை உருவாக்கியவருமான சிற்பி தியாகராஜன் தலைமையிலான குழுவினர்தான், இந்த நந்தி சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 2022-ம் ஆண்டே பணிகளை முடித்து கோயில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட சில பல காரணங்களால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட நந்தி சிலை பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் பணிகளை நிறைவு செய்து கோயிலை திறக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறதாம்.


Share it if you like it