குழந்தைக்கு பெயர் ‘மன் கி பாத்’: உ.பி. பெண் நெகிழ்ச்சி!

குழந்தைக்கு பெயர் ‘மன் கி பாத்’: உ.பி. பெண் நெகிழ்ச்சி!

Share it if you like it

பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் பெருமை பெற்ற உ.பி.யைச் சேர்ந்த பெண், தனது குழந்தைக்கு ‘மன் கி பாத்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

பாரத பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து மன் கி பாத் என்கிற நிகழ்ச்சி மூலம் வானொலி வழியாக மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம், நாடு முழுவதும் வெளிச்சத்துக்கு வராத சாதனையாளர்கள், செயற்கரிய செயல்கள் செய்தவர்கள் என்று பலதரப்பினரையும் பிரதமர் அடையாளம் கண்டு நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி கவுரவித்து வருகிறார். இவ்வாறு பாராட்டப்பட்டவர்களில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கெரி மாவட்டத்தைச் சேர்ந்த பூனம் என்கிற பெண்ணும் ஒருவர்.

இவர், கழிவு வாழைத்தண்டுகளில் இருந்து பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து வருகிறார். இதன் மூலம் சுய உதவிக்குழு ஒன்றையும் உருவாக்கி பல பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கி இருக்கிறார். ஒரு சாமானிய பெண்ணின் இந்த முயற்சியையும், உழைப்பையும் பாராட்டிய மோடி அவருடன் உரையாடவும் செய்தார். இவ்வாறு மோடியால் பாராட்டப்பட்டவர்கள் அனைவரையும், கடந்த 26-ம் தேதி டெல்லிக்கு வரவழைத்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தலைமையில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் பூனமும், அவரது கணவர் பிரமோத்குமார் ராஜ்புத்தும் கலந்து கொண்டார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பூனத்துக்கு நிகழ்ச்சியின்போதே பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, அவரை ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. எனவே, மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் தான் பெருமை பெற்றதால் தனது குழந்தைக்கும் ‘மன் கி பாத்’ என்று பெயர் சூட்டினார் பூனம். இதையறிந்த மத்திய செய்தித்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் அதிகாரிகள் பூனம் தம்பதியை வாழ்த்தினர். மன் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சி நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it