19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை திருவொற்றியூரில் திகம்பர சாமியார் ஒருவர் வீட்டில் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் செல்லும் மனிதர்களின் குணங்களை விமர்சித்து பாம்பு, நரி, பன்றி, எருமை, நாய் என்று சொல்வது வழக்கம். திடீரென அந்த சாமியார் ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டி அதோ அறிவும் அன்பும் நிறைந்த மாமனிதர் போகிறார் என்று கத்தினார். அவர் குறிப்பிட்ட அந்த மகான் வள்ளலார் என்று அழைக்கப்படும் அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க அடிகள் ஆவார்.
ராமலிங்க அடிகள் சிதம்பரம் அருகில் உள்ள மருதூரில் 1823 அக்டோபர் 5ஆம் தேதி கருணீகப் பிள்ளை குலத்தில் ராமையா பிள்ளை – சின்னம்மையார் தம்பதிகளுக்கு கடைசி குழந்தையாக பிறந்தார். 5 மாத கைக்குழந்தையுடன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார் ராமையா பிள்ளை. சிறு சபையில் நடராஜரை தரிசித்த பிறகு சிதம்பர ரகசியம் எனும் திரையை விலக்கி தரிசனம் காட்டப்பட்டது. சிதம்பர ரகசியத்தை கண்டவுடன் குழந்தை ராமலிங்கம் கலகலவென சிரிக்கவே அனைவரும் அதிசயித்தனர். கோயில் அர்ச்சகர் அப்பெயர் தீக்ஷிதர் குழந்தை ராமலிங்கம் சிரிப்பொலியை கேட்டு ஆனந்த பரவச நிலையில் இது சாதாரண குழந்தை அல்ல ஞானக்குழந்தை என்று கண்ணீர் உகுத்தார்.
ராமலிங்கம் பிறந்த 8ஆம் மாதம் ராமையாப் பிள்ளை காலமாகவே சின்னமையார் குழந்தைகளுடன் அவரது பிறந்த ஊரான பெண் பொன்னேரிக்கும் பிறகு சென்னை ஏழு கிணறு பகுதிக்கும் குடி பெயர்ந்தார். ராமலிங்கம் சென்னை கந்தகோட்டம் முருகன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவரை கண்காணிக்க ஒரு முறை அவருடைய ஆசிரியர் சபாபதி முதலியார் கந்தகோட்டம் கோயிலுக்கு செல்ல அங்கே ராமலிங்கம் “ஒருமையுடன் எனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” என்று தொடங்கும் பாட்டை முருகன் சன்னதியில் உள்ள உருக பாடிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு வரியும் வேண்டும் என்று முடியப் பெரும் மெய்ப்பொருள் கொண்ட பாடலை அதற்கு முன் சபாபதி முதலியார் வேறெங்கும் யார் பாடியும் கேட்டதில்லை.கண்ணீர் தாரைதாரையாக வடிய ராமலிங்கத்தை ஆறத் தழுவிக் கொண்டார்.உங்கள் தம்பி சாதாரண மனித பிறவி அல்ல தெய்வப் பிறவி ஞானி இந்த குழந்தைக்கு பாடம் சொல்லித் தரும் அளவுக்கு எனக்கு பாண்டித்தியம் இல்லை. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள குழந்தையை அதன் விருப்பப்படி விட்டு விடுங்கள் என்று சொல்லி ராமலிங்கத்தை அவரது சகோதரரிடம் ஒப்படைத்தார்.
கண்ணாடிக்கு முன்பு நின்று கொண்டு கந்தவேலை மனம் உருகி வேண்டிய போது ஓராறு முகத்துடனும் பன்னிரு கைகளுடனும் தனியே வேலன் காட்சி தந்ததற்கு “சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆகும் திகழ்கடப்பம் தார்குண்டு பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும்” என்னும் பாடல் சான்றாக உள்ளது.
திருவலிதாயம், திருமுல்லைவாயில், திருவள்ளூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவாரூர், திருக்கண்ணமங்கை, திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, திருவதிகை என பல சைவ வைணவ ஆலயங்களுக்கு சென்று வழிபட்டார். ஒரு நாள் தனது ஞான வாழ்வுக்கு சென்னை வாழ்க்கை உகந்தன்று என அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் வந்தடைந்தார்.
“பெற்ற தாய் தனை மக மறந்தாலும், பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை மேவிய உடல் மறந்தாலும், நமச்சிவாயத்தை நான் மறவேனே” என்ற பாடல் வரிகள் மூலம் நமச்சிவாய என்னும் ஐந்து எழுத்து மந்திரம் மீது அடிகளார் அதிகப்பற்றுள்ளவர் என அறியப்படுகிறது.
ஒருமுறை விளக்கு எரியும் பழைய மண் கலம் உடையவே புதிய மண் கலத்தை பழக்குவதற்கு அதில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்தார்கள். அடிகள் எண்ணெய்க்கலம் என்றெண்ணி அதில் விளக்கேற்ற தண்ணீரில் விளக்கு இரவு முழுவதும் எரிந்தது கண்டு அதிசயத்தனர். காலை சுற்றிய பாம்பை கடிக்காமல் அகல சொன்னது, வாத நோயால் வாடியவரை திருநீர் பூசி குணப்படுத்தியது, மாணிக்கவாசகருக்காக குதிரை சேவகனாக வந்து கோலம் உள்பட்ட பல கோலங்களை அடிகளார் கனவிலும், நினைவிலும் இறைவன் காட்டியது, வெவ்வேறாகக் கிடந்த தனது அங்கங்களை மீண்டும் ஒன்றிணைத்தது, ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றியது, உருவத்தை மறைத்துக் கொண்டது, திருக்கரத்தையே அமுதசுரபியாக ஆக்கியது, வடலூரையே உத்தர ஞான சிதம்பரமாக மாற்றியது, மழை பொழிய அருளியது, பெருந்தீயை அணைத்தது, திருநீற்றால் புன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்றியது என அடிகளார் செய்த அற்புதங்களும், அதிசயங்களும் பலப்பல.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பாடல் வரிகள் மூலம் அடிகளால் பசி தீர்த்தல் ,புலால் மறுத்தல் என இரண்டையும் வலியுறுத்துகிறார். ஊர் மக்கள் அளித்த 80 காணி நிலத்தில் “தருமசாலையை” தொடங்கி அனைவருக்கும் பசிப்பிணி ஆற்ற அடிகள் அப்போது பற்ற வைத்த அடுப்பு 153 ஆண்டுகளாக இன்றும் அணியாமல் எரிந்து கொண்டிருக்கிறது 1872 ஆம் ஆண்டு தைப்பூச தண்டு வள்ளலார் தொடங்கிய ஜோதி தரிசனம் இன்றுவரை தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒழிவிலுொடுக்கம், தொண்டை மண்டல சதகம், சின்மய தீபிகை, மனுமுறை வாசகம், ஆகிய நூல்களை ராமலிங்கம் இயற்றினார் இவர் பாடிய 6 ஆயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா ஆகும். ராமலிங்க அடிகளார் 1865 ஆம் ஆண்டு “சுத்த சன்மார்க்க சங்கத்தையும்”, 1867 இல் “சத்திய தருமசாலையையும்”, 1870 இல் “சித்திவளாகத்தையும்” மற்றும் 1872 ஆம் ஆண்டு “சத்திய ஞான சபையையும்” தோற்றுவித்தார்.
இறைவன் ஜோதி வடிவமாக இருப்பதால் 1874 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பூட்டிய அறைக்குள் ஒளிவடிவம் பெற்று இறைவனோடு கலந்தார் வள்ளலார்.
எழுத்தாளர் : அனுக்கிரஹ..