வாழைப்பந்தல் அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில்

வாழைப்பந்தல் அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயில்

Share it if you like it

பாசமிகு பச்சையம்மன் வாழைப்பந்தல் அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில் முனுகப்பட்டு, செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்

கைலாயத்தில், சிவபெருமானும் பார்வதியும் உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அருளினார்கள். பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். அருகில் இருக்கும் பார்வதி தேவியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கும் குணம் படைத்தவர். இப்படி நாள்தோறும் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தாலும் அம்பாளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்டு அம்பாள் கோபமுற்றாள். இதுகுறித்து சிவனிடம் முறையிட்டாள், சிவன் பார்வதி தேவிக்கு செவிசாய்க்கவில்லை. தாம் தனித்தனியாக இருப்பதால் தானே இப்படி தன்னைப் புறக்கணித்து சிவனை மட்டும் வழிபடுகிறார். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இருந்தால் என்ன செய்வார்  அப்போது தன்னையும் சேர்த்துதானே வழிபட்டாக வேண்டும் என்று எண்ணினார். தவம் செய்து சிவனில் சரிபாதி வேண்டி வரம் பெற விரும்பினார்.

பார்வதி தேவி, ஒரு நாடகம் நடத்தி மனிதர்கள் மீது தன் அருளைப் பொழிய முடிவு செய்து, சிவனின் கண்களைத் தன் கைகளால் மூடினாள். இதன் விளைவாக பிரபஞ்சம் முழு இருளில் மூழ்கியது.

தேவர்களும், பிற தெய்வங்களும் கைலாசத்திற்கு படையெடுத்தனர், சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார், அதன் மூலம் இருளை அகற்றி பூமிக்கு பிரகாசத்தை வழங்கினார்.

பார்வதி தேவி, உலகில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காக, தனது தெய்வீக வடிவமைப்பை அறிந்த சிவனின் பாதங்களில் விழுந்து வணங்கினார். உலகை இருளில் மூழ்கடித்ததற்கு அவள் காரணமாக இருந்ததால், சிவபெருமான் அவளைப் பிராயச்சித்தம் செய்ய பூமிக்கு சென்று தவம் செய்யும்படி கூறினார்.

பார்வதி தேவி பல தலங்களில் காட்சியளித்தாள். அவள் காசியில் தோன்றி வேதங்களையும் சாத்திரங்களையும் பரப்பினாள். மேலும் மாங்காடு சிவாலயத்திலும் ஊசி முனையில் தவம் புரிந்தாள் அம்பிகை. காஞ்சிக்கும் சென்று மாமரத்தடியில் சிவபெருமானை சாந்தப்படுத்துவதற்காக தவம் செய்தார். அதன் பின்பு திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள பவழக்குன்றில் வந்து தவம் புரிந்தாள் அம்பிகை. கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலையின் உச்சியில் ஓர் தீப ஒளியாகத் தோன்றி, இறைவன் சிவபெருமான் அவருக்கு அருள்பாலித்து தன்னுடைய இடப்புறத்தை பார்வதிக்கு அளித்ததாகவும் புராணக்கதைகள் கூறுகிறது.

தல புராணம்

காஞ்சியில் தவத்தை முடித்த பிறகு அம்பிகை சப்தரிஷிகள் மற்றும் சப்த கன்னிகைகள் உடன் சேர்ந்த பரிவாரங்களுடன் திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டாள். பாதி வழியில் வாழைப்பந்தல் என்ற ஊரில்  பரிவாரங்கள் முகாமிட்டனர். 

அவ்விடத்திலே அம்பிகை சிவ பூஜை செய்ய ஆயத்தமானார். கதலி வனம், அதாவது வாழைத்தோட்டம் அருகே வாழைப்பந்தல் அமைத்து தான் நித்தம் பூஜை செய்யும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தியானத்தில் அமர்ந்தாள். அம்பிகையை வேவு பார்த்துக்கொண்டிருந்த அசுரர்களில் சிலர் அங்கே வந்து சிவலிங்கத்தை கவர்ந்து சென்றனர். இதை அறிந்த அம்பிகை கவலையுற்றாள். தன் சகோதரரான மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். மகாவிஷ்ணு மணலில் லிங்கம் பிடித்து பிரதிஷ்டை செய்து அம்பிகையின் தவத்தை தொடர ஆலோசனை அளித்தார்.

அவ்வாறே அங்கு மணலில் லிங்கம் பிடித்து சிவ பூஜை செய்ய எண்ணினார் அம்பிகை. லிங்கம் பிடிக்க நீர் வேண்டுமே, அதனால் தன்பிள்ளைகளான விநாயகன், முருகனை அழைத்து நீர் கொண்டு வரச்சொன்னார்.

அருகில் உள்ள மலையின் மீது ஒரு முனிவர் கமண்டலத்தில் நீருடன் தியானம் செய்வதை அறிந்த விநாயகர் மூஞ்சுறு உதவியுடன் அக்கமண்டலத்தை கவிழ்த்துவிட அது கமண்டல நாக நதியாக அம்பிகை பூஜை செய்யும் இடம் நோக்கி பெருகிப் பாய்ந்து வந்தது. முருகன் தன்னுடைய வேலினை மலை மீது ஏவிவிட அதில் இருந்து சேயாறு பெருக்கெடுத்தது, அதுவே இன்றைய செய்யார் என்று மருவி உள்ளது.

மகன்கள் நீர் கொண்டு வர வெகு நேரமானதால் அம்பிகை தன் கையில் உள்ள பிரம்பினால் தட்டி தட்டி நீரூற்று உருவக்கினாள். அதன் பெயர் பிரம்பகா நதி ஆகும். அந்த மூன்று நதி நீரினைக்கொண்டு அம்பிகை மணல் லிங்கம் பிடித்து பூஜை செய்து தவம் மேற்கொண்டாள். மூன்று நதிகள் சேரும் இடம் தான் முக்கூட்டு என்றழைக்கப்பட்டது. அதுவே முனுகப்பட்டு என்று மருவி உள்ளது. இங்கே எழுந்தருளி உள்ள சிவன், முக்கூட்டு சிவன் என்றழைக்கப்படுகிறார்.

சிவனில் சரி பாதி அம்பிகை பெற்றுவிட்டால் அசுரகுலத்திற்கு பெரும் ஆபத்து என்று எண்ணி அம்பிகையின் தவத்தை கலைக்க முற்பட்டனர் அசுரர்கள். சிவன் வாழ்முனியாகவும் மகாவிஷ்ணு செம்முனியாகவும் எழுந்தருளி அம்பிகையின் தவத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல்  அங்கே காவல் புரிந்தனர். அம்பிகையும் தனது தவம் நிறைவேறியதும் திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டு சென்றாள்.

தலச் சிறப்பு

திருமுல்லைவாயல், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை போன்று தமிழ்நாட்டின் பல பகுதியில் பச்சையம்மன் கோயில் இருந்தாலும் வாழைப்பந்தல் பச்சையம்மன் கோயிலே முதன்மையானதாக கருதப்படுகிறது.

இங்கு தான் சிவபெருமான் லிங்க உருவில் இல்லாமல் மனித வடிவில் காட்சி அளிக்கிறார். சிவனும் மகாவிஷ்ணுவும் துவார பாலகர்களாக வீற்றுள்ளார்கள். வாழைப்பந்தல் அமைத்து பார்வதி தேவி பச்சையம்மனாக சிறப்பு பெற்ற இடம் தான் முக்கூட்டு எனும் முனுகப்பட்டு.

அம்பிகை, லிங்கம் வடிக்க தண்ணீர் தேடி தவித்து, சினம் கொண்டதால் சிவந்த மேனியுடையவளாய் மாறினாள். பின் தனது முயற்சியாலும் பிள்ளைகளின் முயற்சியாலும் தண்ணீர் கிடைத்ததும் உள்ளம் குளிர்ந்தாள் அம்பிகை. சாந்தமாக தவம் செய்ய தொடங்கிய அம்பிகை பச்சை திருமேனியாக காட்சியளித்தாள். இதனால் தான் அம்பிகை பச்சையம்மன் என்று அழைக்கப்பட்டாள்.

இந்த தலத்தில், ஈசன் மண்ணால் ஆனா லிங்கம் ஆதலால் மன்னாதீஸ்வரர் என்றும் மன்னார்சாமி என்றும் அழைக்கப்படுகிறார். பொதுவாக அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பானதாக இருக்கும். ஆனால், இங்கு ஈசனே பிரதானமானவராய் உள்ளதால் ஆடி மாத சோமவாரம் இங்கு விசேஷமான நாட்களாக கருதப்படுகிறது.

தங்கள் குலதெய்வம் என்னவென்றே தெரியாத பலரும் பச்சையம்மனை குலதெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். கருவறையில் இரண்டு பச்சையம்மனை தரிசிக்க முடியும் . ஒருவர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் , மற்றொருவர் சுதை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். சப்த ரிஷிகளும் இங்கு வீர தோற்றத்துடன் அம்பிகையின் காவலர்களாக வீற்றுள்ளனர். இந்திரன் தேவலோகத்தில் இருந்து யானை குதிரை ஆகியவற்றை அன்னையின் காவலுக்காக வரிசைப்படுத்தி நிறுத்தினான்.

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி, குடும்ப பிரச்சனை இதில் எதுவாக இருந்தாலும் இங்கு வந்து எலுமிச்சை பழத்தை வாழ்முனி செம்முனி சன்னதியில் அவரவர் கால்களால் நசுக்கி விட்டுச்செல்வதும், தேங்காயை சிதறுகாய் போல் உடைப்பதும் பக்தர்களின் வழக்கமாக உள்ளது. திருமணம் விரைவில் நடைபெற, கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் குழைந்தைப்பேறு வேண்டி இங்கு பக்தர்கள் அம்மனை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் மாவிளக்கேற்றி பொங்கல் வைத்து தங்களின் நேர்த்திக்கடத்தனை செலுத்துகின்றனர். மேலும் பச்சை, சிகப்பு நிற வளையல்களும் , பச்சை நிற புடவையும் அம்மனுக்கு பக்தர்கள் அளித்து மகிழ்கின்றனர்.

குலத்தை காக்கும் வரப்ரசாதினியாக பச்சையம்மன் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயிலில் பச்சை நிற குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

– தீபா லெனின்

தேசிய ஊடகவியலாளர் சங்கம்


Share it if you like it