வாலிபர் மீது பாறாங்கல்லை தூக்கி வீசிய தி.மு.க. கவுன்சிலர்: வைரலாகும் வீடியோ; இது வேலூர் ஸ்டைல்!

வாலிபர் மீது பாறாங்கல்லை தூக்கி வீசிய தி.மு.க. கவுன்சிலர்: வைரலாகும் வீடியோ; இது வேலூர் ஸ்டைல்!

Share it if you like it

தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், வாலிபர் மீது பாறாங்கல்லை தூக்கி வீசுவதும், தொடர்ந்து தனது அடியாட்கள் மூலம் அந்த வாலிபரை தாக்கும் காட்சிகளும் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகபுரம் பகுதியில் வாகன நிறுத்தும் இடம் (பார்க்கிங் யார்டு) ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மேனேஜராக பணிபுரிபவர் ராஜசேகர். இந்த பார்க்கிங் யார்டு பகுதியில், தி.மு.க.வைச் சேர்ந்த வேலூர் மாநகராட்சியின் 26-வது வார்டு கவுன்சிலர் சேகரின் வீடும், குடோனும் இருக்கிறது. இந்த சூழலில், பார்க்கிங் யார்டு அமைந்திருக்கும் இடத்தை, கவுன்சிலர் சேகர், தொடர்ந்து அபகரிக்க முயற்சி செய்து வந்திருக்கிறார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.

இதனிடையே, பார்க்கிங் யார்டுக்குச் செல்லும் வழி தனக்குச் சொந்தமானது என்று சொல்லி, அப்பகுதியில் குழிதோண்டு தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார் தி.மு.க. கவுன்சிலர் சேகர். இதை பார்க்கிங் யார்டு மேலாளர் ராஜசேகர் தட்டிக் கேட்கவே, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, கவுன்சிலர் சேகர், அங்கிருந்த பெரிய கல்லைத் தூக்கி ராஜசேகர் மீது எறிந்ததோடு, தனது அடியாட்களுடன் சேர்ந்து அவரை கடுமையாகத் தாக்கினார். இதில், ராஜசேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, ராஜசேகர் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதேபோல, தி.மு.க. கவுன்சிலர் சேகரும், தன்னை தாக்கி விட்டதாக ராஜசேகர் மீது புகார் செய்தார். இவ்விரு புகார் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சூழலில், இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சமாதானமாக செல்வதாகவும், சர்வேயர் மூலம் இடத்தை அளந்து தங்களுக்கு உண்டான இடத்தை பிரித்துக் கொள்வதாகவும், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் போலீஸில் எழுதிக் கொடுத்து புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார்கள். ஆகவே, போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான், தி.மு.க. கவுன்சிலர் சேகர், தனது அடியாட்களுடன் சென்று ராஜசேகரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க. கவுன்சிலரின் அராகத்தை கண்டித்து வருகின்றனர்.


Share it if you like it