காசி, மதுரா கோயில்களை மீட்க ஹிந்துக்கள் உறுதி: வி.ஹெச்.பி. அலோக் குமார்!

காசி, மதுரா கோயில்களை மீட்க ஹிந்துக்கள் உறுதி: வி.ஹெச்.பி. அலோக் குமார்!

Share it if you like it

காசி மற்றும் மதுரா கோயில்களை மீட்டெடுக்க ஹிந்துக்கள் உறுதியாக இருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் அலோக் குமார் கூறினார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் போதாவூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. 27-ம் தேதிவரை 5 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், மாநிலத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த தேசிய மாநாட்டின் நோக்கம் குறித்து அகில உலக செயல் தலைவர் அலோக் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“காசி விஸ்வநாதர் கோயிலின் உண்மையான அசல் இடங்களையும், மதுராவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடத்தையும் மீட்டெடுக்க ஹிந்துக்கள் உறுதியாக உள்ளனர். இதற்கான சட்ட வழிமுறைகளை விஷ்வ ஹிந்து பரிஷத் ஆராய்ந்ந்து வருவதோடு, இதற்கான தீர்வை அரசியலமைப்பு கட்டமைப்புகளில் அமைதியான முறைகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் முனைகிறது. ஆனாலும், தற்போதைய சூழலில் நீதிமன்ற தீர்ப்பிற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் காத்திருக்கிறது. மேலும், இரு தரப்பினரும் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பது பொருத்தமானது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கருதுகிறது.

சமீபகாலமாக, இந்தியா முழுவதும் மதவெறியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை கலவரங்கள் மூலம் பொதுச்சொத்துக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதை விஷ்வ ஹிந்து பரிஷத் வன்மையாக கண்டிக்கிறது. வன்முறையாளர்களின் தலைவர்கள் பேசும்போது எதிர் தரப்பினரின் தலையை வெட்டுங்கள், கண்களை பிடுங்குங்கள் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கின்றனர். இவர்கள் நாட்டின் இறையாண்மையை குலைக்கும் வெளிநாட்டு சதித்திட்டங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட கலவர குழுக்களாகும்.

இதுபோன்ற செயல்களை விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டிப்பதுடன், இதை மாநில அரசுகள் இரும்புக் கரம் கொண்டு கையாள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. மேலும், ஹிந்து சமுதாயம் தங்கள் உரிமைக்காக எழுந்து நிற்கவும், தேவைப்படும் இடங்களில் தற்காப்பு உரிமைகளை பயன்படுத்தவும் அழைப்பு விடுக்கிறது. பாரதம், அதன் அரசியலமைப்பு சட்டத்தின்படி நடக்கிறது. ஷரியா சட்டத்தின் மூலம் அல்ல. ஆகவே, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் யார் குற்றவாளி என்பதை சொல்லவும் தேச விரோதக் கும்பல்களுக்கு உரிமை இல்லை.

அதேபோல, சில மாநில அரசுகள் ஹிந்துக் கோவில்களை தொடர்ந்து நிர்வகித்து வருகிறது. இது வருத்தமளிக்கும் செயலாக விஷ்வ ஹிந்து பரிஷத் பார்க்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் தொடர்ச்சியாக காலனித்துவ அடையாளத்தின் வழியாக இதை கருதுகிறது. மாநில அரசுகள் பிடியிலிருந்து கோவில்களை விடுவித்து, அதன் நிர்வாகத்தை அனைத்துத் தரப்பு ஹிந்து சமுதாய மக்களும் வழங்குவதற்கான போராட்டங்களை விஷ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்து தீவிரப்படுத்தும். ஹிந்து கோவில்களுக்கு வரும் பணம் பராமரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே. தவிர, அரசு நிர்வாக செலவுகளுக்கு அல்ல.

மேலும், பாரதத்தில் ஹிந்து குடும்ப வாழ்வியல் ஹிந்து பண்பாடு கலாசாரங்களை பாதுகாக்கும் விதமாகவும், அடுத்த தலைமுறை ஹிந்துக்கள் எந்த தயக்கமுமின்றி ஹிந்து தர்மத்தை பின்பற்றுவதற்கும், விஷ்வ ஹிந்து பரிஷத் தனது செயல் திட்டங்களை தீவிரப்படுத்தும். தவிர, ஹிந்து சமுதாயத்தினரை ஒன்றிணைப்பதற்கான சேவா காரியங்களை அதிகப்படுத்தவும் விஷ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்திருக்கிறது” என்று அலோக்குமார் கூறினார்.

முன்னதாக, சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் துளசாபுரம் கிராமத்திலுள்ள கோயில்களில் 22 சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட இடங்களை அகில இந்திய மற்றும் மாநில நிர்வாகிகளுடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத செயல் தலைவர் அலோக் குமார் கடந்த 24ம் தேதி பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சுவாமி சிலைகளை சேதப்படுத்திய செயல், மதவெறி கும்பல்களால் வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகும். இதுபோன்று ஹிந்து கோவில்கள் தாக்கப்படுவதையும், தெய்வத்தின் சிலைகளை பிடுங்கி தெருக்களில் வீசுவதையும் மாநில அரசு தடுக்க வேண்டும்.

மேலும், காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காவல்துறை அதிகாரிகளோ, குற்றவாளிகள் மனநிலை சரியில்லாதவர்கள் என்றும், குடி போதையில் இருந்தார்கள் என்றும் தெரிவிப்பது வேதனையாக இருக்கிறது. அதோடு, இச்சம்பவத்தில் ஒரு நபர் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார் கூறுவதை ஏற்க முடியாது. ஆகவே, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


Share it if you like it