64 வது நாயன்மாராக போற்றப்பட்ட வாரியார் சுவாமிகள் !

64 வது நாயன்மாராக போற்றப்பட்ட வாரியார் சுவாமிகள் !

Share it if you like it

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை கவ்விக்கொண்டும் மக்கள் மனதில் கடவுள் மறுப்பு எண்ணம் என்னும் விஷத்தை விதைத்துக் கொண்டும் இருந்த நாத்திக இருள் இன்றைக்கு‌ ஓரளவேனும் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதின் காரணம் நமது இந்து சமய ஞானிகள், தலைவர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோர் எனில் மிகையல்ல. இத்தகைய ஆன்மீகத் தொண்டு புரிந்தவர்களில் திருமுருக கிருபானந்த வாரியாருக்கு முக்கிய இடம் உண்டு.

வேலூர் மாவட்டம் காட்பாடி பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையாதாசர் -மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையார் தம்பதிக்கு நான்காவது மகனாக செங்குந்த வீர சைவ மரபில் பிறந்தவர் கிருபானந்த வாரியார். குல மரபுப்படி திருவண்ணாமலை பாணிபத்திரதேவர் மடத்தில் சிவலிங்க காரணம் செய்து வைக்கப்பட்டார். கிருபை என்றால் கருணை. ஆனந்தம் என்றால் மகிழ்ச்சி. வாரி என்றால் பெருங்கடல் என்று அர்த்தம். பெயருக்கேற்ப கருணையே உருவாக பிறரை தனது சொற்பொழிவால் மகிழ்ச்சியில் வாழ்த்தும் பெருங்கடலாக கிருபானந்த வாரி விளங்கினார்.

தந்தை சொற்பொழிவாளர், இசை வல்லுனர் என்பதால் வாரியார் அவரிடமே இயல், இசை ,இலக்கணம், புராணம் ,இதிகாசங்களையும் சென்னை யானை கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாச்சாரியிடம் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டார். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம் ஆகிய நூல்களில் இருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை மனப்பாடமாக சொல்லும் நினைவாற்றல் பெற்றிருந்தார்.

எட்டு வயதிலேயே கவிதை இயற்றும் ஆற்றலை, குறிப்பாக புலவர்களுக்கே கடினமான வெண்பாக்களையும் அஷ்டநாகம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலிய பந்தங்களையும் சித்திரகவிகளையும் இயற்றுவதில் இணையற்று விளங்கினார். 15 வயது முதல் தந்தையுடன் சொற்பொழிவுகளில் பங்கேற்றார்.

ஒருமுறை தந்தைக்குப் பதிலாக அனைவரும் வியக்கும் வண்ணம் தனியாகச் சொற்பொழிவாற்றி பாராட்டைப் பெற்ற போது அவருக்கு வயது 19 மட்டுமே .வாரியார் மக்களுக்கு புரியும் வகையில் பேச்சு வழக்கு மொழியில் பிரசங்கம் செய்தார். வேதாந்த உண்மைகளையும் சித்தாந்த கருத்துக்களையும் தெளிவாக தெரியும் வகையில் விளக்கினார். சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமை பெற்று திகழ்ந்தார். மக்களுக்கு அலுப்பு ஏற்படாத வகையில் இடை இடையே குட்டிக் குட்டிக் கதைகள், அண்மைச் செய்திகள் ஆகியவற்றை சொல்வதுடன் சிறுவர் சிறுமிகளிடம் கேள்வி கேட்டு சரியான பதில் சொல்பவர்களுக்கு ஆன்மீகப் புத்தகங்களை பரிசு கொடுக்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். இவருடைய நகைச்சுவையையும் கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் பேச்சை ரசிக்கவும் தனி கூட்டமே இருந்தது.

வாரியார் கூட்டங்களில் நாத்திகர்கள் புத்திசாலிகளை போல அடிக்கடி குறுக்கு கேள்விகள் கேட்டு கடைசியில் தாங்களே அவமானப்படுவது வழக்கம். கடவுளுக்கும் சில இலக்கணங்கள் உண்ட. இறைவனின் லட்சணமும் அதுதான். குறிப்பாக கடவுள் பிறப்பும் இறப்பும் இல்லாதவனாக இருக்க வேண்டும். ராம‌ நவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, சங்கர ஜெயந்தி, ராமானுஜ ஜெயந்தி, மத்வ ஜெயந்தி, பரசுராம ஜெயந்தி ,வாமன ஜெயந்தி என்றெல்லாம் கோயில்களில் கொண்டாடுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் எங்கேயும் சிவ ஜெயந்தி முருக ஜெயந்தி என்ற அவதார நாளை கொண்டாடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இருக்காது. காரணம் சிவனுக்கும் முருகனுக்கும் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. ஆகவே கடவுள் என்பது இந்த இருவருக்கு மட்டுமே சிறப்பாக பொருந்தும்.

இதையேதான் அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் “செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்” என்று கந்தவேளுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை என்று பாடுகிறார் என்று விளக்கினார் வாரியார். முதன்‌முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் முருகப்பெருமானே அன்றி கிருஷ்ண பரமாத்மா இல்லை என்கிறார் வாரியார. கிருஷ்ணரின் அவதாரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால் முருகப்பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவன். குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்’ என்னும் நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடல் மூலம் குறிஞ்சி நிலக்கடவுளான முருகன் மலைகளில் விளையும் மூங்கிலை வெட்டி துளையிட்டு புல்லாங்குழல் வாசித்தான் என்று அறிகிறோம்.

நடமாடும் தெய்வம் பரமாச்சாரியாரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வாரியார் முற்பட்ட பொழுது கழுத்தில் அணிந்திருக்கும் சிவலிங்கம் தரையில் படக்கூடாது என்று சொல்லி மகா பெரியவர் அவரை தடுத்தாராம்.‌ மற்றொரு கூட்டத்தில் தன்னை பற்றி என்ன பேசுவது என்று யோசித்த பொழுது ‘என்ன தயக்கம், சம்பாதிக்கும் ஒவ்வொரு காசையும் வைத்துக்கொள்ளாமல் தான தர்மங்களுக்கே செலவழித்து வருகிறேன்’ என்று மக்களிடம் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்’ என்ற பரமாச்சாரியார் கூறிய போது நெகிழ்ந்த வாரியார் ‘என் மனைவிக்கு கூட இது தெரியாது ஆனால் பரமாச்சாரியார் எப்படியோ அறிந்து கொண்டு மக்களிடம் சொல்லிவிட்டார்’ என்று கண்கலங்கினார்.

வயலூர் முருகன், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய சுற்றுச்சுவர்,சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் என எண்ணிலடங்கா கோயில்களுக்கு திருப்பணி செய்த பெருமை வாரியாருக்கு உண்டு. இவரது கையெழுத்தை கேட்கும் பக்தர்களிடம் கடவுளை தேடு என்ற பொருள்பட ‘இரை தேடுவதோடு இறையையும் தேடு’ என்று எழுதி கையொப்பம் இடுவார்.

“வாழ்க்கைக்கு கிடத்தல் ,இருத்தல், நிற்றல் ,நடத்தல்; யுகங்களுக்கு கிருத, திரேத, துவார, கலி ; நிலத்துக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்; பெண்மைக்கு அச்சம், மடம் ,நாணம் ,பயிர்ப்பு; ஆண்மைக்கு அறம், பொருள், இன்பம், வீடு; எழுத்துக்கு உயிர், மெய், உயிர்மெய் ஆய்தம் ; சொல்லுக்கு பெயர்,வினை, இடை, உரி; பாட்டுக்கு வெண்பா ,ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா; எல்லா மொழிகளுக்குமே சுழி,பிறை, நேர்கோடு ,குறுக்குக்கோடு என எல்லாமே நான்கில் அடக்கம் என்பது வாரியார் வாக்கு.

1936-ல் ‘திருப்புகழ் அமிர்தம்’ என்னும் இதழைத் தொடங்கி சற்றேறக்குறைய 37 ஆண்டுகள் நடத்தி வந்தார்.‌ 150-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். 1993 நவம்பர் 7 தேதி லண்டனிலிருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் விமானத்திலேயே சமாதி நிலை அடைந்த வாரியார் பக்தகோடிகளால் 64 வது நாயன்மாராக போற்றப்படுகிறார்.

-திரு. கார்த்திக்


Share it if you like it