சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் சிஏஏ விற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜயின் இந்த அறிக்கைக்கு சமூக வலைதளவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிஏஏ வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய், சிஏஏ என்றால் என்ன ? அதன் நன்மை தீமைகளை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இல்லையேல் சிஏஏ வை பற்றி பேசி தெளிவான விளக்கம் அளித்திருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் மொட்டை கடுதாசி அனுப்புவது போல் கண்மூடித்தனமாக சிஏஏ சட்டத்தை எதிர்ப்பது விஜய் மீது அவர்கள் ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கையை குறைக்கும் வகையில் உள்ளது. கட்சி பெயரையே பிழை இல்லாமல் வைக்க தெரியவில்லை. இதில் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். அமைச்சர் எல்.முருகன் கூறியது போல் முதலில் சிஏஏ வை பற்றி நன்றாக படியுங்கள், கண்மூடித்தனமாக கட்சி ஆரமித்து விட்டோம், தம்முடைய கட்சி பங்குக்கு ஏதாவது கருத்து கூற வேண்டும் என்று உளறாதீர்கள். இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜயை வறுத்தெடுத்து வருகின்றனர்.