ஆடி அமாவாசை –  முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த தக்ஷாயண புண்ணிய கால தினம்

ஆடி அமாவாசை – முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த தக்ஷாயண புண்ணிய கால தினம்

Share it if you like it

நம் ஆன்மீக வழிபாடுகளில் அமாவாசை என்பது திதிகளில் முதலாவதாக முன்னோர் வழிபாடு மற்றும் அவர்களின் ஆத்ம திருப்திக்காக நாம் செய்யும் திதி – தர்ப்பணம், தானம் – தர்மம் உள்ளிட்டவத்திற்கான பிரசித்தி பெற்ற நாளாக விளங்குகிறது. மேலும் சகல சௌபாக்கியமும் வழங்கும் குல – காவல் தெய்வ வழிபாடு – இஷ்ட தெய்வ வழிபாடு அனைத்திற்கும் அமாவாசை நாள் உகந்தது . இதில் தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது.

எங்கு முன்னோர்களின் வழிபாடு ஆத்மார்த்தமாக சிரத்தையோடு முன்னெடுக்கப்படுகிறதோ? அங்கு அவர்களின் ஆத்மா பரிபூரணமாகும். பரிபூரணமடையும் அந்த ஆன்மாக்களின் ஆசியால் அவர்களின் வம்சாவளிகள் குல – காவல் தெய்வங்களின் அனுகிரகத்தால் பாதுகாக்கப்படுவார்கள். குல – காவல் தெய்வம் அனுகிரகம் பெற்ற இடத்தில் அவர்களின் இஷ்ட – ஆராதனை தெய்வங்களும் , கிராம தேவதைகளும் எழுந்தருளி அவர்களும் அவர்களின் சந்ததிகளும் சகல சௌபாக்கியமும் பெற்று வாழ அனுகிரகம் செய்வார்கள். அவர்கள் செய்யும் பூஜைகள் – வழிபாடுகள் பன்மடங்கு நற்பலன்களை வழங்குவதோடு அவர்களின் சந்ததிகளை எவ்வித எதிர்மறை சக்திகளும் – தீமைகளும் நெருங்காமல் பாதுகாக்கிறது.

முன்னோர்களின் வழிபாடு சிறக்காத இடங்களில் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையாது. அவர்களின் ஆன்மா சாந்தியின்மையை பித்ரு சாபமாக பெறும் அவர்கள் சந்ததிகள் இடத்தில் குல – காவல் தெய்வங்கள் எழுந்தருளாது. குல – காவல் தெய்வங்கள் எழுந்தருளாக இடத்தில் இஷ்ட – ஆராதனை தெய்வங்களும் , கிராம தெய்வங்களும் அருள் பாலிக்காது. அவ்வகையில் முன்னோர் திதிகள் துலங்காத இடத்தில் தெய்வ அனுகிரகமும் இருப்பதில்லை. அவர்கள் செய்யும் பூஜைகள் – பரிகாரங்கள் எதுவும் உரிய பலனை தருவதில்லை . மேலும் எதிர்மறை சக்திகளும் துரதிஷ்டமும் பிடித்து எந்நேரமும் ஒரு மன அழுத்தம் உளைச்சலோடு வாழும் துர்பாக்கியம் நீடிக்கும்.

உண்மையான ஆன்மீக ஞானமும் பக்தியும் வாய்க்கப் பெற்றவர்கள் முதலிடம் தருவது முன்னோர் வழிப்பாட்டிற்கு மட்டுமே. அந்த முன்னோர் வழிபாட்டின் மூலமே குல காவல் தெய்வம் முதல் இஷ்ட ஆராதனை தெய்வம் வரை யாவையும் தங்கள் மனையில் எழுந்தருள செய்து சகல செல்வங்களை அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் தங்களது இல்லமும் உள்ளமும் நிறைய செய்யும் அட்சய பாத்திரம் முன்னோர் வழிப்பாடு என்பதை உணர்ந்து அதை ஐதீகத்தின் வழியில் தவறாது முன்னெடுப்பார்கள்.

அவ்வகையில் தமிழ் வருடத்தில் பிறப்பான சித்திரை முதல் நாள். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் . பிரதி ஏகாதசி திதிகள். முன்னோர்கள் உயிர்நீத்த குறிப்பிட்ட திதிகள் . முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களாக குறிப்பிடப்படுகிறது. அனைவருக்கும் பொதுவாக ஆடி அமாவாசை – மஹாளய அமாவாசை – வைகுண்ட ஏகாதசி – தை அமாவாசை உள்ளிட்ட பிரசித்தி பெற்ற நாட்கள் நம் முன்னோருக்கான திதி – தர்ப்பணம் , தில ஹோமம் , கோதானம் , பூதானம் இதரதான தர்மங்கள் செய்வதற்கு உகந்த நாட்களாக நம் ஆன்மீகப் புராணங்களும் ஜோதிடங்களும் குறிப்பிடுகிறது.

அவ்வகையில் பிரசித்தி பெற்ற முன்னோர் வழிபாட்டிற்கு முதல் நாளான பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை

நிகழும் மங்கலகரமான சோபக்ருது வருடத்தின் கடக ரவியின் ஆடி மாதத்தில் நாளையும் நாளை மறுநாளும் அமாவாசை திதியன்று ஆடி அமாவாசையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் சப்த முத்தி தலங்களான காசி- கயா – அயோத்தி – ஹரி துவாரம் – காஞ்சி – இராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் தீர்த்தங்களில் நீராடி, தீர்த்த கரைகளில் நம் முன்னோருக்கு வேதம் – மந்திரங்கள் முழங்கும் அந்தணர்கள் துணையோடு திதி – தர்ப்பணம் செய்வித்து அவர்களுக்கு உரிய காணிக்கைகளை தட்சணையாக அர்ப்பணம் செய்து மீண்டும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி நாம் செய்திட்ட தர்ப்பண பலன்களை பித்ரு காரகனான சூரிய தேவனிடம் அர்ப்பணிப்பது நம் முன்னோருக்கு மோட்சத்தையும் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் பெரும் பாக்கியங்களை பெற்று தரவல்லது.

ஆடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பிரம்மபுத்திரா – சிந்து – கங்கா- யமுனா- சரஸ்வதி- கோதாவரி – காவேரி உள்ளிட்ட சப்த நதிகளில் நீராடுவதும் முன்னோர்களுக்கு அங்கு திதி தர்ப்பணம் செய்வதும் அளப்பரிய பலன்களை தரவல்லது. பாரதம் முழுவதும் வியாபித்திருக்கும் ஆன்மிக திருத்தலங்களிலும் நதி தீரங்களிலும் தீர்த்த குளங்களிலும் நீராடி எங்கும் வியாபித்து எழுந்தருளும் கங்கையை அர்ப்பணம் செய்து திதி தர்ப்பணம் செய்வதும் விசேஷ பலன்களை தரும். அதுவும் இயலாதவர்கள் இந்நாளில் நம் இல்லங்களை தூய்மைப்படுத்தி சிர ஸ்நானம் செய்து ஆத்ம சுத்தியோடு நம் முன்னோர்களுக்கு பூஜை வழிபாடு செய்வதும் முன்னோர்களின் பிம்பமாக நம் முன்னே வலம் வரும் காகத்திற்கு அர்ப்பணம் செய்வதும் மூவரும் முக்கோடி தேவரும் எழுந்தருளும் நடமாடும் தெய்வமான பசு தாயான கோமாதாவிற்கு அன்னபூஷிப்பு செய்வதும் பறவைகள் விலங்குகளுக்கு உணவும் நீரும் வழங்குவதும் ஏழை எளியவர்களுக்கு அன்னம் வஸ்திரம் என்று நம்மாலான தானங்களை வழங்குவதும் பெரும் பலனை தரவல்லது.

ஆடி அமாவாசைக்கு மூன்று நாட்கள் முன்னும் பின்னும் அமாவாசை அன்று என்று ஏழு நாட்கள் அசைவ உணவுகள் கடும் சொற்கள் உள்ளிட்ட எதிர்மறை விஷயங்களை தவிர்ப்பது உத்தமம். இத்தகைய திதி தர்ப்பணங்கள் யாவையும் கடன் இல்லாமல் தங்களின் சொந்த வருவாயில் முயற்சியில் உழைப்பில் செய்வதே உரிய பலனைத் தரும். அதனினும் மேலாக பேருக்கு நானும் செய்கிறேன் என்ற அளவில் இல்லாத ஆத்ம சுத்தியோடு சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நம் முன்னோரின் ஆத்ம சாந்தி ஒன்றே நமக்கு இறையருளை பெற்று தரும் அதுவே நம்மை நம் சந்ததிகளை கவசமாக பாதுகாக்கும் என்ற பொறுப்புணர்வோடு அர்ப்பணிப்போடு தரும் திதியும் தர்ப்பணமுமே நமக்கு முழுமையான பலன்களைத் தரும்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் – ராமேஸ்வரம் என்ற இரண்டு பேரும் முக்தி தலங்களைக் கடந்து ஸ்ரீ ராமன் தன் தோஷம் நீக்க துணை நின்ற ஆதி ஜெகன்னாத பெருமாள் எழுந்தருளிய திருப்புல்லாணி திருத்தலம் [ இராமநாதபுரம் மாவட்டம்]. ஜடாயுவிற்கு மோட்சம் வழங்கி ராமன் தன் கைகளால் இறுதிச் சடங்கு செய்த திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயம் [காஞ்சிபுரம் ] பெரும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வல்ல கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் [ஈரோடு மாவட்டம்] மூன்று கடல்கள் சங்கமிக்கும் குமரிமுனை [கன்யா குமரி] மூன்று நதிகள் சங்கமிக்கும் ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் , காஞ்சியில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரு முக்கூடல் மற்றும் பிரசித்தி பெற்ற பல்வேறு சைவ – வைணவ தலங்களிலும் காவேரி – தாமிரபரணி – பாலாறு உள்ளிட்ட புண்ணிய தீர்த்த கரைகளிலும் ஆங்காங்கே வெகு சிரத்தையோடு முன்னோருக்கான திதி தர்ப்பணங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

பூஜை வழிபாடுகளில் தூய்மையான பருத்தி அல்லது பட்டு ஆடைகள் மட்டுமே உரிய பலனை தரவல்லது. செயற்கை இழைகளும் கருப்பு வஸ்திரங்களும் தோஷ பலனையே தரவல்லது. சுத்தமான பசு நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதே உரிய பலனைத் தரும். நாம் செய்யும் தானம் தர்மம் நமக்கு எந்தவிதமான பிரதிபலனையும் தராத நாமும் எதிர் நோக்காத வகையில் எதிர்பட்டு வேண்டுகோளுக்கும் முன்பின் தெரியாத நபர்களுக்கும் இருப்பதே உண்மையான தான தர்மம் என்பதை உணர்ந்து செய்வது உத்தமம். பச்சரிசி – வெல்லம் – அகத்திக்கீரை – மஞ்சள் பழங்கள் – வெற்றிலை பாக்கு தேங்காய் – பழம் – வஸ்திரம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்குவது சிறப்பு . பசுக்களுக்கு அகத்திக் கீரையும் பச்சரிசி – வெல்லம் கலந்த உணவும் பழங்கள் – கீரைகள் – தானியங்கள் உள்ளிட்டவை வழங்குவதும் மேன்மை தரும். பித்ரு தேவனான சூரியனின் நீச்சம் அல்லது அஷ்டமம் இருப்பவர்கள் இது போன்ற பிரசித்தி பெற்ற நாட்களில் கோதுமையை தானம் செய்வதும் நல்ல பலன்களை தரும்.

தக்ஷனாயணம் புண்ணிய கால அமாவாசையான இந்நாளில் நம் முன்னோர்களையும் அவர்களின் மோட்சத்திற்கும் நாம் செய்யும் திதி தர்ப்பணம் நமக்கு இறையருளை வழங்குவதோடு ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை நிவர்த்தி செய்து நம் நீண்ட ஆயுள் – ஆரோக்கியம் , செல்வம் செல்வாக்கு விருத்தியாகும். நம் சந்ததிகள் நலமும் வளமும் பெறவும் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை சக்திகள் , பில்லி – சூனியம் – ஏவல் உள்ளிட்ட மாந்திரீக தொந்தரவுகள் , துஷ்ட சக்திகளின் பீடிப்பு உள்ளிட்ட கெடுதல்கள் யாவும் மறைந்து மகிழ்ச்சியும் மங்கலமும் நிலை பெறச் செய்யும் என்பதை உணர்ந்து சிரத்தையோடு முன்னோர் வழிபாடு செய்வோம். நம் முன்னோரின் ஆசையோடு இறையருளும் பெற்று மங்கல வாழ்வை பாக்கியம் பெறுவோம்.


Share it if you like it