ஹிமாச்சல் பிரதேசத்தில் மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜினாமாவை ஏற்காத சட்டசபை சபாநாயகரை எதிர்த்து ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
டெஹ்ராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஹோஷ்யர் சிங், ஹமிர்பூரைச் சேர்ந்த ஆஷிஷ் சர்மா மற்றும் நலகாரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து கே.எல். தாக்கூர் ஆகியோர் மார்ச் 22, 2024 அன்று சபாநாயகரிடம் தங்கள் ராஜினாமாவைச் சமர்ப்பித்து, ஒரு நாள் கழித்து புதுதில்லியில் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தனர்.
இதற்கிடையில், மூன்று எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா புதன்கிழமை ஆஜராக சம்மன் அனுப்பினார்.
இது தொடர்பாக எம்எல்ஏ ஹோஷியார் சிங்,கூறியதாவது :- “இன்று நாங்கள் சபாநாயகரிடம் பதில் தாக்கல் செய்ய உள்ளோம். எங்கள் வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் ராஜினாமாக்களை மார்ச் 22 அன்றே சமர்ப்பித்து விட்டோம். ஆனால் எங்கள் ராஜினாமா ஏற்றுக்கொள்ள படவில்லை. அது அன்றே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கர்நாடகா மற்றும் மிசோரம் வழக்குகளில் இதே போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் முன்பு தீர்ப்பு வழங்கியது என்று நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம்” என்று கூறினார்.
“முடிவை சபாநாயகர் ஒரே நாளில் வழங்க வேண்டும், அவர்கள் அதை தாமதப்படுத்தியுள்ளனர், இது அரசியலமைப்பிற்கு நல்லதல்ல. எங்கள் பதிலை சபாநாயகரிடம் சமர்பிப்போம். 12 மணி நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தவர்கள், எங்களின் ராஜினாமாவை ஏன் ஏற்கவில்லை ?தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்பாமல் தாமதப்படுத்துவதே அவர்களின் நோக்கம். தாமதத்திற்கு உண்மையான காரணம் எதுவும் இல்லை, எங்கள் வழக்கு ஏப்ரல் 24 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, ”என்று எம்எல்ஏ கூறினார்.